குமரி மாவட்டம், கப்பியறை பேரூராட்சியில் கனிமவளக்கொள்ளைக்கு எதிராக நாம் தமிழர் கட்சி வார்டு உறுப்பினர் தங்கை லா.ஆன்சி சோபாராணி முன்மொழிந்த தீர்மானத்தை நிறைவேற்றிய கப்பியறை பேரூராட்சி உறுப்பினர்களுக்குப் புரட்சி வாழ்த்துகளும் நன்றியும்!

147

குமரி மாவட்டம், கப்பியறை பேரூராட்சியில் கனிமவளக்கொள்ளைக்கு எதிராக நாம் தமிழர் கட்சி வார்டு உறுப்பினர் தங்கை லா.ஆன்சி சோபாராணி முன்மொழிந்த தீர்மானத்தை நிறைவேற்றிய கப்பியறை பேரூராட்சி உறுப்பினர்களுக்குப் புரட்சி வாழ்த்துகளும் நன்றியும்!

வரலாற்றுப் பெருமைகள் பல கொண்ட பைந்தமிழர் நிலமான கன்னியாகுமரி மாவட்டத்தை, மொழிவாரி மாநிலங்கள் பிரிப்பின் போது கேரளத்தின் அங்கமாக சென்று விடாமல் தாய்த்தமிழகத்துடன் இணைப்பதற்காக நமது முன்னவர்கள் தங்கள் இன்னுயிரை விலையாகக் கொடுத்தும், ஈடு இணையற்ற பல ஈகங்களைச் செய்தும் காத்து நின்றனர். அந்த மண்ணையும், அதன் வளத்தையும் பாதுகாத்து நமது அடுத்த தலைமுறைக்கு கையளிக்க வேண்டியது அவர்கள் வழித் தோன்றல்களாகிய நமது தலையாய கடமையாகும்.

ஆனால், இயற்கை எழில் கொஞ்சும் குமரியின் மேற்கு தொடர்ச்சி மலைகள் இன்று கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு வருகின்றன. கேரளத்தின் விழிஞ்சம் பகுதியில் அதானியால் கட்டப்பட்டுவரும் துறைமுகத்திற்காக குமரியின் மலைகள் உடைக்கப்பட்டு, தினமும் நூற்றுக்கணக்கான பார உந்துகளில் தமிழக அரசால் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாகவும், பதிவு எண் இல்லாத பார உந்துகளிலும் முறைகேடாக கடத்தப்பட்டு வருகின்றன. இந்த வளக்கொள்ளையை தமிழகத்தின் இருபெரும் திராவிடக் கட்சிகளும் கண்டும் காணாததுபோல் அமைதியாக கடந்து போய்க்கொண்டிருந்தாலும், குமரியின் இயற்கை வளங்களைப் பாதுகாக்க நாம் தமிழர் கட்சி மட்டுமே தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில், குமரி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் தொடர் பரப்புரைகளும் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டதன் விளைவாக ஏற்பட்ட விழிப்புணர்வால், கடந்த ஆண்டு அக்டோபர் 10 அன்று தக்கலையில் நாம் தமிழர் கட்சி நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான பொதுமக்கள் திரண்டனர். அதனைக் கண்டு அஞ்சிய கனிமவளக் கொள்ளையர்களும், அவர்களுக்கு ஆதரவாக நிற்கும் அதிகாரவர்க்கமும், நாம் தமிழர் கட்சியினர் மீது தொடர்ச்சியாக பொய் வழக்குகளைப் பதிந்து, போராட்டக்களத்தில் இருந்து நாம் தமிழர் கட்சியினரை வெளியேற்றத் துடித்தது. அதன் நீட்சியாக, கனிமவளக் கொள்ளையைத் தடுக்கப் போராடிய நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர் தம்பி சுஜின் மீது குமரி மாவட்ட காவல்துறையினர் கொடுந்தாக்குதல் நடத்தியதும் நிகழ்ந்தேறியது. ஆயினும் இன்றுவரை தொடர்ச்சியாக கனிமவளக் கொள்ளைக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நாம் தமிழர் கட்சியினர் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் குளச்சல் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கப்பியறை பேரூராட்சியில் இருக்கும் கருங்கல் மலை மற்றும் பழத்தோட்ட மலையை பாதுகாப்போம் என வாக்குறுதி கொடுத்து அந்த பேரூராட்சியின் 15 வார்டுகளிலும் நாம் தமிழர் கட்சி உறவுகள் போட்டியிட்டதில் ஒரு வார்டில் தங்கை லா.ஆன்சி சோபாராணி அவர்கள் வெற்றி பெற்றார். வென்ற நாள்முதல் கடந்த 2 மாதங்கள் தொடர்ச்சியாக மற்ற உறுப்பினர்களையும் பேரூராட்சி தலைவரையும் சந்தித்து மலை வளத்தைக் காக்க வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்து, இதற்கு முன்னர் இருந்த உள்ளாட்சித் தலைவர்களால் வளக்கொள்ளை நடத்தும் கல்குவாரிகளுக்கு ஆதரவாக போடப்பட்ட தீர்மானங்கள் அனைத்தையும் ரத்து செய்து, இனிவரும் காலங்களில் கப்பியறை பேரூராட்சிக்கு உட்பட்ட மலைகளில் எந்த குவாரிகளுக்கும் அனுமதி அளிக்கக்கூடாது என்ற புதிய தீர்மானம் இயற்றி அதை தமிழ்நாடு அரசுக்கும் அனுப்பியுள்ளார்கள்.

எனவே, கப்பியறை பேரூராட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை தமிழ்நாடு அரசு ஏற்று தற்போது செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு குவாரி மற்றும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நான்கு குவாரிகள் உட்பட அனைத்து குவாரிகளையும் நிரந்தரமாக மூட வேண்டும் எனவும், வளக்கொள்ளையை எதிர்த்துப் போராடிய நாம் தமிழர் கட்சியினர் மீது புனையப்பட்டிருக்கும் அனைத்து வழக்குகளையும் ரத்து செய்து அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.

மண்ணையும் மக்களையும் காக்க நாம் தமிழர் கட்சி இறுதிவரை உறுதியாகப் போராடும் என்பதனை மீண்டுமொருமுறை பேரறிவிப்பு செய்வதோடு, சிறப்புமிக்க இத்தீர்மானத்தை நிறைவேற்றிய கப்பியறை பேரூராட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும், பேரூராட்சி தலைவர் அவர்களுக்கும், இக்கோரிக்கையை முன்னெடுத்த தங்கை லா.ஆன்சி சோபாராணி அவர்களுக்கும், துணைநின்ற நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கும் பொதுமக்களுக்கும் எனது புரட்சிகர வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி