ஈழத்தமிழர்கள் உயிரை முன்னிறுத்தி, போராட்டம்செய்தும் உங்கள் இதயக்கதவுகள் திறக்காதென்றால், நடப்பது தமிழர்களுக்கான ஆட்சியா? இல்லை! சிங்களர்களுக்கான ஆட்சியா? – சீமான் கண்டனம்

339

ஈழத்தமிழர்கள் உயிரை முன்னிறுத்தி, போராட்டம்செய்தும் உங்கள் இதயக்கதவுகள் திறக்காதென்றால், நடப்பது தமிழர்களுக்கான ஆட்சியா? இல்லை! சிங்களர்களுக்கான ஆட்சியா? – சீமான் கண்டனம்

திருச்சி, சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழச்சொந்தங்களில் 30 பேர் மாத்திரை உட்கொண்டும், ஒருவர் தீக்குளித்தும் தற்கொலைக்கு முயன்றதுமான செய்திகள் பேரதிர்ச்சி தருகின்றன. ‘விதியே! விதியே! என் செய நினைத்திட்டாய் என் தமிழ்ச்சாதியை?’ எனும் பெரும்பாவலன் பாரதியின் கூற்றுக்கிணங்க, தாய்த்தமிழகத்திலேயே ஈழச்சொந்தங்களுக்கு நிகழ்ந்தேறும் இக்கொடுமைகள் கண்டு மனம்வெதும்புகிறேன்.

தங்களை ஏதிலிகளென இந்தியச்சட்டத்தின்படி பதிவுசெய்துள்ள ஈழச்சொந்தங்களையும் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களெனக் கூறி, சிறப்பு முகாம் எனப்படும் சித்திரவதைக்கூடங்களில் அந்நிய நாட்டவர்களோடு அடைத்து வைத்துள்ள அநீதிக்கெதிராக, தங்களை விடுவிக்கக்கோரி 35 நாட்களுக்கும் மேலாகப் பட்டினிப்போராட்டம் செய்து அரசு மனமிறங்காத நிலையிலேயே, ஆற்றாமையும், விரக்தியும் தாளாது இத்தகையக் கொடிய முடிவை ஈழச்சொந்தங்கள் எடுத்துள்ளனர் என்பது ஏற்கவே முடியாதப் பெருந்துயரமாகும். இந்நாட்டுக்குத் துளியும் தொடர்பற்ற திபெத்தியர்கள் ஏதிலிகளாக அரசால் அங்கீகரிக்கப்பட்டு, அடிப்படை வசதிகளும், பொருளாதார வாய்ப்புகளும் அவர்களுக்கு வழங்கப்பெற்று, பெரும் மதிப்போடு நடத்தப்படும் வேளையில், இந்நாட்டில் வாழும் எட்டுக்கோடி தமிழ்ச்சொந்தங்களின் தொப்புள்கொடி உறவான ஈழச்சொந்தங்கள் குற்றவாளிகளாகச் சித்தரிக்கப்படுவதும், அடிப்படை மானுட உரிமைகளும், அத்தியாவசிய இருப்பு நடவடிக்கைகளும்கூட அளிக்கப்படாது மறுக்கப்படுவதும் தமிழினத்திற்கு இந்நாட்டு அரசுகள் செய்யும் பெருந்துரோகமாகும். தமிழர்களின் வரலாற்றுத்தாயகமான தமிழகத்திலேயே ஈழச்சொந்தங்கள் நாதியற்றவர்கள் போல நாளும் நடத்தப்படுவதும், அவர்களது உணர்வுகளுக்கும், உரிமைகளுக்கும் மதிப்பளிக்கப்படாது அவமதிக்கப்படுவதும் வெட்கித்தலைகுனிய வேண்டிய பெரும் அவமானமாகும்.

தேர்தலுக்கு முன்பு, ஈழச்சொந்தங்களுக்குக் குடியுரிமைப் பெற்றுத் தருவோம் என வாக்குறுதி அளித்த மாண்புமிகு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள், தற்போது ஏதிலிகளாகக்கூட அவர்களை வாழவிடாது வஞ்சிப்பது எந்தவகையில் நியாயம்? இதுதான் சமூக நீதியா? ‘ஈழத்தமிழர் எங்கள் இரத்தம்’ என மேடையில் முழக்கமிட்ட முதல்வர் ஸ்டாலின் அவர்கள், இப்போது இரத்தம் வற்றிப்போகிற அளவுக்கு அவர்கள் பட்டினிக்கிடந்து, உடல்மெலிந்து கோரிக்கை வைத்தும் செவிமடுக்காதது ஏன்? அவர்களுக்கு வாக்கில்லை என்பதால், அவர்களது வறண்ட நாக்குகள் இடுகிற முழக்கங்கள் உங்கள் செவிப்பறைக்கு எட்டவில்லையா முதல்வரே? உயிரை முன்னிறுத்தி, போராட்டம்செய்தும் உங்கள் இதயக்கதவுகள் திறக்காதென்றால், நடப்பது தமிழர்களுக்கான ஆட்சியா? இல்லை! சிங்களர்களுக்கான ஆட்சியா? இதுதான் நீங்கள் விடியல் தரும் இலட்சணமா? வெட்கக்கேடு! பேரவலம்!

ஆகவே, இந்தியச்சட்டநெறிமுறைகளின்படி, தங்களை ஏதிலிகளாகப் பதிவுசெய்தும் சட்டவிரோதக் குடியேறியவர்களெனக்கூறி, திருச்சி, சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழச்சொந்தங்களை உடனடியாக விடுவிக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன். அதனைச் செய்யத் தவறும்பட்சத்தில், மாநிலம் தழுவிய மக்கள்திரள் போராட்டத்தை முன்னெடுப்போமெனப் பேரறிவிப்பு செய்கிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திபெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அசாம் மாநிலத்தில், சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்களைத் தங்க வைத்து அரசியல் வணிகம் செய்வதா? – சீமான் கண்டனம்
அடுத்த செய்திஅறிவிப்பு: நாம் தமிழர் மாணவர் மற்றும் இளைஞர் பாசறை நடத்தும் அரசியல் பயிற்சிப்பட்டறை – சென்னை மண்டலம்