மே 18, இன எழுச்சிப் பொதுக்கூட்டத் தீர்மானங்கள்

942

மே 18, இன எழுச்சிப் பொதுக்கூட்டத் தீர்மானங்கள்:

மே 18 தமிழினப் படுகொலை நாள்: 13 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாட்களில் ஈழப்பெருநிலத்தில் இலட்சக்கணக்கில் இனப்படுகொலை செய்யப்பட்ட நம் உறவுகளை நினைவுகூரவும், வீழ்ந்த இடத்திலிருந்து மீள் எழுச்சிப்பெற்று, அவர்கள் விட்டுச்சென்ற தாயக இலட்சியக் கனவினை தொடர்ந்து முன்னெடுத்து வென்றிடும் நோக்கிலும், 18-05-2022 அன்று பூந்தமல்லியில் நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மாபெரும் இன எழுச்சிப்பொதுக்கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்:

1. தமிழ்த்தேசிய இனத்தின் மற்றொரு தாய் நிலமான தமிழீழ மண்ணில்

இனப்படுகொலைக்கு தமிழர்கள் ஆட்படுத்தப்பட்டு, பதின்மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டப்பின்னரும் இன்னும் எவ்விதமான நியாயத்தீர்வும் கிடைத்தபாடில்லை. எம்மின மக்களுக்கு உள்ள ஒரே அரசியல் தீர்வு என்பது பொது வாக்கெடுப்பு மட்டுமே! ஐ.நா.மன்றம் மற்றும் உலக நாடுகள் முன்னிலையில் சனநாயக முறைமையில் ஒரு பொது வாக்கெடுப்பை நடத்தி சிங்களர்களோடு சேர்ந்து வாழ்கிறீர்களா? அல்லது தனித்தமிழீழ சோசலிசக்குடியரசு நாடாக மீள்கிறீர்களா? என்கிற முடிவை எம் மக்கள் சுதந்திரமான வகையில் எடுப்பதற்கான ஒழுங்கை, இந்தியா உள்ளிட்ட உலக அரங்கு ஏற்படுத்தித் தரவேண்டும் என்பதுதான் எம்மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. இனப்படுகொலைக்கு‌ உள்ளாகி, உயிர், உரிமை, உடைமை, நிலம் என அனைத்தையும் இழந்து நிற்கும் எம் மக்களுக்கு தனித்தமிழீழம் மட்டுமே தீர்வாக இருக்க முடியும் என்பதையுணர்ந்து இந்திய ஒன்றிய அரசு பொதுவாக்கெடுப்பிற்கான‌ முன்னெடுப்புகளைச் செய்ய பன்னாட்டுச்சமூகத்திற்கு அரசியல் நெருக்கடி தர வேண்டும் எனவும், அதற்கான உரிய அரசியல் அழுத்தங்களை ஒட்டுமொத்த தமிழினத்தின் சார்பில் தமிழக அரசு இந்திய ஒன்றிய அரசிற்குத் தர வேண்டுமெனவும் இந்தப் பொதுக்கூட்டத்தின் வாயிலாக நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.

2. சிங்கள இனவாத அரசும், இந்தியப் பேரரசும் உலக வல்லாதிக்கங்களின் துணையோடு ஈழ நிலத்தில் நிகழ்த்திய இனப்படுகொலைக்கு இன்னும் நீதி கிடைத்திராத சூழலில், தாயக விடுதலைப்போராட்டக் காலக்கட்டத்தில் சிங்கள அரசால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் உயிரோடு இல்லை என்று கூறி, சிங்கள இனவாத அரசு பொத்தாம் பொதுவாக அலட்சிய மனப்பான்மையுடன் தமிழர்களைப் புழுவினும் கீழாகக் கருதி கடந்து செல்ல முற்படுவது இனப்படுகொலை செய்யப்பட்ட இனத்திற்கு இழைக்கப்பட்ட மற்றுமொரு பெரும் அநீதியாகும். காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்கள் உணவின்றி இறந்தார்களா? உடல் நலிவுற்று இறந்தார்களா? இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார்களா? தூக்கிலிடப்பட்டார்களா? உயிரோடு புதைக்கப்பட்டார்களா? எரிக்கப்பட்டார்களா? கடலில் எறியப்பட்டார்களா? என்கிற எந்த கேள்வியையும் மனித மாண்பும், நாகரீகமும் வளர்ந்த இத்தனை நாடுகள் இந்தப்பூமிப்பந்தில் இருந்தும் ஒரு நாட்டிற்கும் கேட்க வேண்டும் என்று தோன்றவில்லை என்பதோடு மட்டுமில்லாமல், எந்த ஒரு நாட்டின் மனசாட்சியையையும் தமிழர் அழிவு உலுக்கவில்லை என்பது உச்சபட்ச வேதனைக்குரியது. ஐ.நா. மன்றம் உட்பட அத்தனைப் பன்னாட்டு மன்றங்களிலும் இந்தக்கேள்வியை எழுப்பி அதன் வாயிலாகக் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் குடும்ப உறவுகளின் கண்ணீருக்கு இனிமேலாவது நீதி கிடைத்திட உலக நாடுகள் முன்வர வேண்டும் எனவும், இனப்படுகொலை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்துப் பன்னாட்டுப்போர்க்குற்ற விசாரணையை ஐ.நா. மன்றமும், உலக நாடுகளும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும், கடந்த 13 வருடங்களாக உலகத்தமிழர்கள் கோரி வருகின்ற மானுட நீதி இனியும் மறுக்கப்படக்கூடாது எனவும் பொதுக்கூட்டத்தின் வாயிலாக நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.

3. தமிழர்களின் பூர்வீக நிலமான தமிழீழ மண்ணின் மொழி, பண்பாட்டு வரலாற்றுக்காரணிகளை அழித்து, தமிழர்களின் நிலங்களை பறித்து சிங்கள இனவாத அரசு, சிங்களக்குடியேற்றங்களை தொடர்ச்சியாக செய்து வருகிறது. உடனடியாக, இந்தக் குடியேற்றங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டியது மட்டுமில்லாமல், ஏற்கனவே சிங்களக்குடியேற்றங்களால் பறிக்கப்பட்ட தமிழர் மண்ணை மீட்டு, மீண்டும் எம் மக்களிடமே ஒப்படைக்க வேண்டும் எனவும், இதற்கான வலிமையான அரசியல் அழுத்தங்களை இந்திய ஒன்றிய அரசு இலங்கை அரசுக்குக் கொடுத்திட வேண்டும் எனவும் இந்தப் பொதுக்கூட்டத்தின் வாயிலாக நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.

4. ஊழல் நிறைந்த ஆட்சி முறை, குடும்ப அரசியல் போன்றவற்றால் இலங்கையில் ஆட்சி அதிகாரத்தை இழந்து, மக்களின் எதிர்ப்பினை தாங்க முடியாமல் இன்று ஓடி ஒளிந்து கொண்டு இருக்கின்ற இனப்படுகொலையாளன் மகிந்தா ராஜபக்சேவிற்கு இந்திய ஒன்றிய அரசு எவ்வித அடைக்கலமும் தரக்கூடாது எனவும், ஒட்டுமொத்த தமிழர்களும் வெளிப்படுத்தும் எதிர்ப்புணர்வுக்கு மதிப்பளித்து, வேறு எந்த உதவிகளும் செய்திடக்கூடாது எனவும் இந்தப் பொதுக்கூட்டம் வாயிலாக நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.

5. போரின்போதும், போருக்குப் பின்பும், தாய்த்தமிழ்நாட்டை நாடி வந்த எம் இரத்த உறவுகளான தமிழீழச்சொந்தங்களை, ‘சிறப்பு முகாம்கள்’ என்ற பெயரில் திறந்தவெளிச்சிறைக்கூடங்களுக்குள் அடைத்து வதைக்கும் போக்கை ஒன்றிய, மாநில அரசுகள் உடனடியாகக் கைவிட வேண்டுமெனவும், அவர்களுக்கான குடியுரிமை, கல்வி, வேலைவாய்ப்பு, உள்ளிட்ட இன்றியமையாச் சமூகப்பொருளாதார மேம்பாடுகளில் சமவாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் எனவும் இந்த இன எழுச்சிப் பொதுக்கூட்டத்தின் வாயிலாக நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.

6. கடுமையானப் பொருளாதார நெருக்கடியில் சிக்கிக்கொண்டிருக்கும் இலங்கைக்கு இந்திய ஒன்றிய அரசு செய்து வருகின்ற உதவிகள் அனைத்தும் சிங்களர்களுக்கு மட்டுமே சென்று சேருவதை நாம் தமிழர் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. தமிழர்களாகிய நாங்கள் வாக்கு செலுத்தி, வரிசெலுத்தி செழுமைப்படுத்தி வருகிற இந்திய ஒன்றிய அரசு, இலங்கை மண்ணின் பூர்வக்குடிகளான ஈழத்தமிழர்களுக்கும் எல்லா உதவிகளும் சென்று சேர்வதை‌ உறுதிப்படுத்த வேண்டுமென இந்த பொதுக்கூட்டம் வாயிலாக நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.

7.இராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கு சொந்தமான தமிழர்களின் தொன்றுதொட்ட நிலவுடைமையான கச்சத்தீவை, தமிழ்நாடு அரசின் ஒப்புதலைப் பெறாமலும், இந்திய நாடாளுமன்றத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றாமலும், தன்னிச்சையாக அன்றைய காங்கிரசு அரசு இலங்கைக்குத் தாரைவார்த்தது தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட வரலாற்றுத் துரோகமாகும். கடந்த 50 ஆண்டுகாலமாக தமிழகத்தை ஆளும் இரு திராவிட அரசுகளும் கச்சத்தீவை மீட்பதாகத் தேர்தல் கால அறிக்கை நாடகம் ஆடுவதை நாம் தமிழர் கட்சி இந்நேரத்தில் சுட்டிக்காட்டுகிறது. மேலும், கச்சத்தீவு குறித்து உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கை விரைவுப்படுத்தி, கச்சத்தீவை மீட்பதற்கான நேர்மையான முயற்சியை மேற்கொள்ள திமுக அரசு முன்வர வேண்டும் எனவும் இப்பொதுக்கூட்டம் வலியுறுத்துகிறது.

8.தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ச்சியாக இலங்கை இராணுவத்தால் கைதுசெய்யப்படுவதை நிரந்தரமாக தடுத்து நிறுத்த இந்திய ஒன்றிய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தப் பிறகு, தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவதும், படகுகள் பறிமுதல் செயப்படுவதும் அதிகரித்துள்ளதை நாம் தமிழர் கட்சி சுட்டிக்காட்டுகிறது. நாடாளுமன்றத்தில் தமக்குள்ள அதிகாரப்பலத்தை பயன்படுத்தி தமிழக மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காண ஒன்றிய அரசிற்கு திமுக அரசு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என இப்பொதுக்கூட்டத்தின் வாயிலாக நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.

9. 31 ஆண்டுகள் கொடுந்தாமதத்திற்குப் பிறகு, விடுதலை கிடைத்திருந்தாலும், பேரறிவாளனுக்கு இன்று கிடைத்திருக்கும் நீதியை இந்த இன எழுச்சி நாளின் சிறப்பாகவே கருதி நாம் தமிழர் கட்சி பெருமகிழ்ச்சியோடு அதனை வரவேற்கிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றத்தின் மாண்புமிகு நீதியரசர்கள் பி.ஆர். கவாய் மற்றும் நாகேஸ்வர ராவ் ஆகியோரது அமர்வுக்கு இப்பொதுக்கூட்டத்தின் வழியே நாம் தமிழர் கட்சி தன் மாண்பு நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது. எழுவரை விடுதலை செய்யும் தமிழ்நாடு அரசின் அமைச்சரவைத் தீர்மானத்தில் கையெழுத்திடாது, அரசியலமைப்புச்சாசனத்திற்கு எதிராக மூன்று ஆண்டுகள் காலந்தாழ்த்திய தமிழ்நாடு ஆளுநருக்கு இப்பொதுக்கூட்டம் வாயிலாக கண்டனங்களைப் பதிவுசெய்வதோடு, இவ்வழக்கில் சிக்கி இன்னும் சிறைக்கொட்டடியில் வாடி வருகிற முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ஆகிய 6 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும், ஆளுநரோ, ஆட்சியாளர்களோ இனியும் அவர்களது விடுதலையில் குறுக்கிட்டு, காலந்தாழ்த்தக்கூடாது எனவும் நாம் தமிழர் கட்சி இந்தத் தமிழின எழுச்சிப் பொதுக்கூட்டத்தின் வாயிலாக வலியுறுத்துகிறது.