தமிழ்த்தேசியப் போராளி புலவர் கு.கலியபெருமாள் 15ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்கம் செலுத்திய சீமான்

20

தமிழர் அனைவரும் அரசியல் விழிப்புற்று எழுச்சியுற தன் வாழ்நாள் முழுவதும் அயராது பாடுபட்ட தமிழ்த்தேசியப் போராளி, புரட்சியாளர், புலவர் கு.கலியபெருமாள் அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி இன்று 16-05-2022 காலை 10 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான இராவணன் குடிலில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.

தமிழ்தேசியப் பொதுவுடைமைப் போராளி, தமிழ்த்தேசிய அரசியலின் முன்னோடி, தமிழ்த்தேசிய இன மக்களுக்கென்று உலகப் பந்தில் ஒரு தேசம் வேண்டும் என்ற பெரும் கனவு கண்ட பெருந்தகை, எங்களுடைய ஐயா புலவர் கலியபெருமாள் அவர்களுடைய நினைவு நாள் இன்று (16-05-2022). இந்த இன மக்களின் உரிமைக்காக, வேளாண் பெருங்குடி மக்களின் நலனுக்காக, ஒரு குடும்பமே பதிமூன்று ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைபட்டு, வதைபட்டு, துயருற்றது என்றால் அது எங்களுடைய ஐயா புலவர் கலியபெருமாள் அவர்களுடைய குடும்பம்தான். மரண தண்டனை விதிக்கப்பட்டு, பிறகு அது நீக்கப்பட்டு, அதன்பின் வெளியில் வந்து அதே மக்கள் பணியை தொடர்ந்து செய்த பெருமகன் எங்களுடைய தாத்தா கலியபெருமாள் அவர்கள். அவருடைய ஈகம், அவருடைய குடும்பம் செய்த ஈகத்தை ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில் அந்த அளவுக்கு ஈகம் செய்தவர்கள் இல்லை.

17 ஆண்டுகளுக்கு முன்பு ஐயா அவர்கள் உயிருடன் பொழுது அவருடன் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டபோது, என்னைப் பக்கத்தில் அழைத்து அவருடைய வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை எனக்கு பரிசளித்தார். அந்த புத்தகத்தின் கடைசிப் பக்கங்களில் ஆயுதமேந்திய கிளர்ச்சியின் மூலம்தான் நம் இன மக்களின் உரிமையை, விடுதலையை பெறமுடியும் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்திருந்த அந்த தலைவன், தன் வாழ்நாள் அனுபவங்களை சுருக்கி இரண்டு மூன்று வரிகளில் மக்களை அணிதிரட்டி அரசியல் படுத்தாமல் புரட்சியை முன்னெடுக்க முடியாது என்று முடித்திருந்தார். அது எங்களைப் போன்ற பேரப் பிள்ளைகளுக்கு கொடுத்த வாழ்நாள் கொடை. அதைப்படித்து தெளிவற்று அவருக்கு பின்னாடி வருகிற பேரப்பிள்ளைகளாகிய நாங்கள், அவர் காட்டிய பாதையில் பயணிக்கிறோம். இது மக்கள் ஜனநாயகப் புரட்சி. ஆயுதமேந்திய புரட்சியை எங்கள் தாத்தா கலியபெருமாள், எங்கள் அண்ணன் தமிழரசன் போன்றோர் முன்னெடுத்தார்கள். அந்த கிளர்ச்சிகள் வீழ்த்தப்பட்டபோது, எங்களுக்கு கடைசியா இருக்கிற வாய்ப்பு மக்கள் ஜனநாயக புரட்சிதான் அதை நாங்கள் முன்னெடுக்கின்றோம். இது அறிவாயுதம் ஏந்தியக் கிளர்ச்சி.

ஐயா புலவர் கலியபெருமாள் அவர் என்ன கனவிற்காக தன் குடும்பம் மொத்தத்தையும் அர்ப்பணித்து களத்தில் நின்று போராடினாரோ, அந்த கனவினை வீணடிக்க விடாமல் களத்திலே நின்று போராடுவதுதான் அந்ந பெருந்தகைக்கு நாங்கள் செலுத்துகிற உண்மையான வணக்கமாக இருக்க முடியும்.

எனவே எங்களுடைய தாத்தா புலவர் கலியபெருமாள் அவர்களுடைய நினைவைப் போற்றுகிற இந்த நாளில், அவர் தூக்கி சுமந்து வந்த உயர்ந்த கனவை நிறைவேற்றுவோம், அதற்காக சமரசமின்றி களத்தில் நின்று போராடி வென்று காட்டுவோம் என்ற உறுதியை இந்த நாளில் ஏற்கிறோம். பெருமிதத்தோடும் திமிரோடும் எங்கள் தாத்தா கலியபெருமாள் அவர்களுக்கு எங்களுடைய புகழ் வணக்கத்தை செலுத்துகிறோம்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை காலத்தை பின்னோக்கி செலுத்தும் ஆற்றல் இருந்தால் மோடி அவர்கள் ஈழத்தில் போரே நடக்க விட்டிருக்க மாட்டார் என்கிறார் . எனக்கும் கூட அதே ஆற்றல் இருந்து காலத்தை பின்னோக்கி செலுத்தும் வாய்ப்பு இருந்தால், நானும் குஜராத்தில் மோடி முதலமைச்சராக விடாமல் தடுத்து பல ஆயிரக்கணக்கான இசுலாமியர்கள் கொல்லப்படாமல் காப்பாற்றி இருப்பேன். ஈழத்தில் 2009ல் இனப்படுகொலை நடைபெற்றபோது குஜராத் முதலமைச்சராக மோடி இருந்தபோது இனப்படுகொலையை எதிர்த்து அவருடைய குரல் என்ன?
அன்றைக்கு போரை நடத்தியது இந்தியாவை ஆண்ட காங்கிரசுதான் என்று மோடிக்கும் தெரியும். சக மனிதச்சாவை சகித்துக் கொண்டிருக்க முடியாது , அவர் அன்றைக்கு குரல் கொடுத்திருந்தால் அவருக்கும் அப்படியான பார்வை இருந்தது, ஒருவேளை அதற்கான வாய்ப்பு இருந்திருக்கும் என்று நம்பலாம். அப்படி எந்த பார்வையும் இல்லாதபோது தற்போது அண்ணாமலை சொல்வதை நம்புவதற்கில்லை.

இன்று எங்கள் தலைவர் அந்த மண்ணில் இல்லை என்பதால் ஆளாளுக்கு கருத்து சொல்கிறார்கள். ஈழம் அண்ணாமலையால்தான் சாத்தியம் என்றால் எப்படி சாத்தியம்? இன்று நீங்கள் எங்கள் தலைவரை மகாத்மா என்கிறார். இதை பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைமை சொல்லுமா? பிரபாகரன் ஒரு மகாத்மா என்று தமிழ்நாட்டில் உள்ள பாஜக தீர்மானம் நிறைவேற்றுமா? உலகத்திற்கு முன் பயங்கரவாதி என்று சொன்னதே இவர்கள்தானே?
சரி பாஜக ஈழம் அமைத்துக் கொடுக்கட்டுமே பாரப்போம்? இந்து ஈழம் அமைப்போம் என்கிறார் அண்ணாமலை. எங்கள் தலைவர் அந்த களத்தில் நின்றபோது ஏன் இந்து ஈழம் என்ற பேச்சே எழவில்லை?
தமிழர்கள் நாங்கள் இந்துக்களே இல்லை என்கிறோம். பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் வருகிற சீக்கியர்கள், பௌத்தர்கள், இந்துக்கள் அனைவருக்கும் குடியுரிமை வழங்கப்படும் என்கிறீர்கள்,
35 ஆண்டுகள் ஆகிவிட்டது ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து, இன்று வரை அவர்களுக்கு ஏன் குடியுரிமை வழங்கவில்லை? திபெத்தியருக்கும் இந்த நாட்டிற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? அவர்களை வசதியாக வாழ வைத்துள்ள என் நாடு, இந்த நாட்டின் பூர்வீகக் குடிகள் நாங்கள், எங்களின் ரத்த சொந்தங்களான ஈழத்தமிழ் உறவுகளுக்கு அத்தகைய உரிமைகள் ஏதும் கொடுக்காதது ஏன்? இன்று இந்துவாக தெரியும் ஈழத்தமிழர்கள், 2009ல் அந்த மண்ணில் செத்து விழுந்த போது இந்துவாக தெரியவில்லையா? ஈழத்தில் ஆயிரக்கணக்கான எங்களுடைய வழிபாட்டுத் தலங்கள் இடித்த போதெல்லாம் அது இந்து வழிபாட்டு தலமாக தெரியவில்லையா? இங்கு அகதி முகாமில் அடைக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் எல்லாம் இந்துவாக தெரியவில்லையா? அவர்களுக்கு ஏன் குடியுரிமை கொடுக்காமல் இன்னும் முகாம்களில் அடைத்து வைத்துள்ளீர்கள்? கேட்டால் ஈழத்தில் நடைபெற்றது சிவில் வார் என்கிறீர்கள்? எங்களை கொன்றதெல்லாம் மக்களா? ராணுவமா?