மதுக்கடைகளைத் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீட்டின் முன்பு பதாகை ஏந்தி போராடியதற்காக கைது செய்யப்பட்ட ஈரோடு நாம் தமிழர் கட்சியினர் மீதான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!

202

கொரோனா ஊரடங்கில் மதுக்கடைகளைத் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீட்டின் முன்பு பதாகை ஏந்தி போராடியதற்காக கைது செய்யப்பட்ட ஈரோடு நாம் தமிழர் கட்சியினர் மீதான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!

தமிழ்நாடு உட்பட இந்திய ஒன்றியம் முழுக்க கொரோனா நோய்த் தொற்று உச்சத்தில் இருந்த கடந்த மே 7, 2020 அன்று தமிழ்நாடு முழுக்க மதுக்கடைகளைத் திறக்க அப்போதைய அதிமுக அரசு உத்தரவிட்டதை எதிர்த்து ஈரோடு மாநகராட்சி எஸ்.எஸ்.பி நகரில் தன் குடும்பத்தினருடன் கொரோனா தடுப்பு விதிகளை முறையாகக் கடைப்பிடித்து, அமைதியாக, வீட்டுக்கு வெளியில் பதாகை ஏந்தி அறவழியில் எளிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சி ஈரோடு மேற்கு தொகுதித் துணைத்தலைவர் அ.தமிழ்ச்செல்வன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீதும் கொடும் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தது.

கொரோனா ஊரடங்கு காரணமாக வேலைவாய்ப்பின்றி மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் மதுக்கடைகளைத் திறக்கும் அறிவிப்பு சரியானதல்ல என்ற நியாயமான காரணத்திற்காக அமைதிவழியில் போராடியவர்களைத் தமிழக அரசும், ஈரோடு காவல்துறையும் கொடுங குற்றவாளிகளை போல் நடத்தியதை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கண்டித்து அறிக்கை வெளியிட்டார். இவ்வழக்குக்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை சட்டப்போராட்டத்தைத் தொடங்கியது.

பிணை பெறுவது, வழக்கு நடத்துவது என கொரோனா ஊரடங்குக் காலத்திலும் பலமுறை தமிழ்ச்செல்வன் குடும்பத்தினர் தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டனர். திமுக அரசு வந்தபின்பு கொரோனா காலத்தில் போடப்பட்ட பொய்வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்தது. ஆனால், இந்த வழக்கு திரும்பப் பெறப்படவில்லை மீண்டும் நீதிமன்றத்துக்கு அலைக்கழிக்கப்பட்டனர்.

இந்நிலையில், தற்போது நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறையின் மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் சி.சங்கர், இவ்வழக்கை முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யவேண்டும் எனக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இவ்வழக்கானது கடந்த மார்ச் 23 அன்று நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போதும் மாநில அரசுத்தரப்பு வழக்கறிஞர் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராகப் பேச, தம் வலுவான வாதங்களால் இவ்வழக்கு பொய்வழக்கு என்பதையும் எப்படியெல்லாம் புனையப்பட்டது என்பதையும் ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.

அவ்வாதங்களைக் கேட்ட நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, இந்த குற்றத்திற்கான எவ்வித முகாந்திரமும் இல்லை என்று சொன்னதோடு, இத்தனை பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது எதற்கு? என்றும் கேட்டு வழக்கை முழுமையாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதன்மூலம் ஈரோடு நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1 இல் நடைபெற்று வந்த STC 2546/2021 என்ற எண் கொண்ட வழக்கு ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

இவ்வழக்கினை ஈரோடு நீதிமன்றத்தில் நடத்தி பிணை பெற்றுத்தந்த மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் அவர்களின் மகன் வழக்கறிஞர் சுபாஷ், வழக்கறிஞர் மூ.கார்த்திகேயன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கைத் தொடர்ந்து நடத்தி விடுதலை பெற்றுத்தந்த வழக்கறிஞர் பாசறையினருக்கும் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் புரட்சி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திவிக்கிரவாண்டி தொகுதி மாத கலந்தாய்வு
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: விழுப்புரம் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்