குறிஞ்சாங்குளம் தமிழர் வழிபாட்டு உரிமை மீட்பு ஈகியர் வீரவணக்க நிகழ்வு – சீமான் செய்தியாளர் சந்திப்பு

463

குறிஞ்சாங்குளத்தில் தமிழர் வழிபாட்டு உரிமை மீட்கப் போராடி, உயிர்நீத்த ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு, 14-03-2022 அன்று காலை 10 மணியளவில் கட்சித் தலைமை அலுவலகத்தில், வீரத்தமிழர் முன்னணி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

எங்கள் ஆதித்தமிழ்க்குடியின் குலதெய்வமாக விளங்குகிற காந்தாரி அம்மன் வழிபாட்டு உரிமைக்காகத் தங்களின் இன்னுயிரை ஈந்த ஈக மறவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி நினைவைப் போற்றுகின்ற நாள் இன்று. முப்பது ஆண்டுகளாகத் தொடர்ந்துகொண்டிருக்கின்ற உரிமை பிரச்சினையை மாறி மாறி ஆண்ட ஆட்சியாளர்கள் கிடப்பில் போட்டுவிட்டார்கள். எங்களின் வழிபாட்டு உரிமையை மீட்டெடுக்க நாம் தமிழர் பிள்ளைகள் முயலும்போதெல்லாம் அதிகாரத்திலிருந்தவர்கள் அடக்கி ஒடுக்கி இந்தப் பிரச்சனையை மூடிமறைக்க நினைக்கிறார்களே ஒழிய இதை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்று விரும்புவதில்லை. தற்போதும் அதுதான் தொடர்கிறது. இப்போது நாங்கள் குறிஞ்சாங்குளம் போயிருந்தாலும் கைது நடவடிக்கைதான் எடுத்திருப்பார்கள். கைது செய்வதல்ல தீர்வு. வழிபாட்டு உரிமையை வழங்குவதுதான் பிரச்சினைக்குத் தீர்வு. அங்கு மாற்றுச் சமுதாயத்தைச் சேர்ந்தவர் பொதுப் பயன்பாட்டிற்காகக் கொடுத்த நிலத்தில், கோயில் கட்டக்கூடாது என்று அவருடைய சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார் என்றால், அந்த இடத்திற்குப் பதிலாக வேறு இடத்தில் கோயில் கட்ட அரசே நிலம் ஒதுக்கித் தரவேண்டும். தங்களின் வழிபாட்டு உரிமை மீட்க நான்கு பேர் தங்கள் உயிரையே கொடுத்துள்ளனர். எனவே 4 ஏக்கர் நிலத்தையாவது அரசு ஒதுக்கித் தரவேண்டும். அந்த இடத்தில் தமிழர்கள் நாங்கள் கோயில் கட்டி வழிபடப்போகிறோம். ஆனால் அதைத் தரமறுப்பது என்பது சமூக மோதலை அரசே உருவாக்க நினைக்கிறதா? என்று தோன்றுகிறது. அதோடு, நாங்கள் எங்கள் வழிபாட்டு உரிமையைக்கூடப் பெறமுடியாத இழிநிலையில் இருக்கிறோம் என்ற தாழ்வு மனப்பான்மையும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. சொந்த நிலத்தில் எங்கள் குல தெய்வங்களை, குல முன்னோர்களை வழிபடும் உரிமைகூடத் தமிழர்களுக்கு இல்லையா? இந்தச் சிக்கலை தமிழ்நாடு அரசு எப்படிப் பார்க்கிறது? கடந்த 30 ஆண்டுகளாக ஐயா கருணாநிதி, அம்மையார் ஜெயலலிதாதான் மாறி மாறி ஆட்சியிலிருந்துள்ளார்கள். இந்தச் சிக்கலுக்குத் தீர்வுதான் என்ன? உரிமையைக் கேட்கக்கூடாது, வாயைத் திறக்கக்கூடாது என்றால் அது ஏற்புடையதல்ல. நாங்கள் போராடித்தான் தீருவோம். நாங்கள் அரசிடம் எழுப்பும் கேள்வி என்பது ஆதித்தமிழ் குடிகளின் குலதெய்வமான காந்தாரி அம்மன் கோயில் கட்டுவதில் அரசின் நிலைப்பாடு என்ன? குறிப்பிட்ட இடம் பிரச்சனைக்குரியது என்றால் அரசு குறிஞ்சாங்குளத்தையொட்டி வேறு மாற்று இடம் வழங்க வேண்டும். அதில் நாங்கள் கோயில் கட்டிக்கொள்கிறோம். அதோடு இந்த வழிபாட்டு உரிமை காக்க இன்னுயிர் ஈந்த ஈகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசிற்குக் கோரிக்கை வைக்கிறேன். அரசு உடனடியாக இரு சமூகத்தாரையும் அழைத்துப் பேசி பிரச்சினையை அமைதிவழியில் தீர்ப்பதற்கு முன்வர வேண்டும். மாறாக அரசு கண்டுகொள்ளாமல் கடத்திவிடத் துணிந்தால், நாங்கள் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவோம். அதைத்தவிர வேறு வழியே கிடையாது. இது மிகவும் உணர்வுப்பூர்வமான சிக்கல் என்பதால் அரசு இதனைக் கவனத்தில் எடுக்கும் என்று நம்புகிறேன்.

மேலும் இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் எல்லாம் ஏன் இந்தக் கோயில் கட்டும் பிரச்சனையில் மட்டும் தலையிடவில்லை? இந்து மதத்திற்குள் இந்தத் தெய்வங்கள் எல்லாம் வரவில்லையா? இங்கே வேறு கோயில்களை இடித்தால் எதிர்த்துப் போராடுவார்கள், ஆனால் ஈழ மண்ணில் எங்கள் சிவன்கோவில், முருகன் கோயில் உள்ளிட்ட எங்கள் வழிபாட்டுத்தலங்களை இடித்தாலும் பேசமாட்டார்கள் என்றுதான் அதனை எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. ஆகவே காந்தாரி அம்மன் வழிபாட்டு உரிமைக்காக தங்கள் இன்னுயிரை ஈந்த ஈக மறவர்களின் நினைவைப் போற்றுகிற இந்நாளில், வழிபடுகிற உரிமையை மீளப்பெறுவதுதான் அவர்களுக்கு செலுத்துகிற உண்மையான வணக்கமாக இருக்க முடியும். அதனால்தான் இந்த வீரவணக்க நாளில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களிடம் காந்தாரி அம்மன் கோயில் கட்டி வழிபட அனுமதிக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கையை வைக்கிறோம்.

 

முந்தைய செய்திவிழித்தெழு தமிழா! – அரசியல் கருத்தரங்கம் | சீமான் எழுச்சியுரை [ காணொலி மற்றும் புகைப்படங்கள்]
அடுத்த செய்திநீலகிரி பாராளுமன்ற தொகுதி கல்ந்தாய்வு கூட்டம்