பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் அமைதிவழிப் பேரணி நடத்த திமுக அரசு அனுமதிக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
“மக்களாட்சியைப் பாதுகாப்போம்” என்ற தலைப்பில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் அமைதி வழியில் கொள்கை விளக்கப் பேரணி நடத்த அனுமதி மறுத்து, இசுலாமிய உறவுகளைக் கைது செய்துள்ள திமுக அரசின் எதேச்சதிகாரப் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.
ஆட்சி பொறுப்பேற்றது முதல் தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவ இயக்கங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் பேரணிகள், வகுப்புகள் நடத்த அனுமதியளிக்கும் திமுக அரசு, இசுலாமிய அமைப்புகள் தங்கள் உரிமைக்காகப் பேரணி நடத்தவோ, போராட்டம் நடத்தவோ அனுமதியளிக்க மறுப்பது சிறிதும் நியாயமற்ற செயலாகும்.
அதுமட்டுமின்றி, அமைதி வழியில் பேரணி நடத்த அனுமதி கேட்டுப் போராடிய இசுலாமிய உறவுகளைக் கைது செய்து சிறையில் அடைக்குமெனில் இது யாருக்கான அரசாகச் செயல்படுகிறது? என்ற கேள்வியும் எழுகிறது.
சனநாயக நாட்டில் தங்களின் நியாயமான கோரிக்கைக்காகவும், அரசியல் கொள்கை-கோட்பாடுகளை விளக்குவதற்காகவும் அறவழியில் அமைதியான முறையில் பேரணிகளை முன்னெடுப்பது, பொதுக்கூட்டங்களை நடத்துவதென்பது அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும். ஆனால் அதைக்கூட திமுக அரசு
அனுமதிக்க மறுப்பதென்பது கொடுங்கோன்மையின் உச்சமாகும்.
ஆகவே, இதற்கு மேலாவது திமுக அரசு தனது இந்துத்துவ ஆதரவு நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வதோடு, மதப்பாகுபாடுடனான செயல்பாடுகளை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், பேரணி நடத்த முயன்றதற்காக கைது செய்யப்பட்டுள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியைச் சேர்ந்த சகோதரர்கள் மீது எவ்வித வழக்கும் பதியாமல் விடுவிப்பதோடு, அவர்கள் அமைதி வழியில் பேரணி நடத்த திமுக அரசு அனுமதிக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி