மேகதாது அணையை விரைந்து கட்டிமுடிக்க வேண்டுமெனும் தமிழினத்திற்கு எதிரான போராட்டங்களைக் காங்கிரஸ் கட்சி உடனடியாகக் கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

172

மேகதாது அணையை விரைந்து கட்டிமுடிக்க வேண்டுமெனும் தமிழினத்திற்கு எதிரான போராட்டங்களை காங்கிரஸ் கட்சி உடனடியாகக் கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் மேகதாது அணையை உடனடியாகக் கட்ட வலியுறுத்தி நடைப்பயணத்தைத் தொடங்கியுள்ள கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. விரைவில் நடைபெறவுள்ள கர்நாடக சட்டமன்றத்தேர்தலை கருத்திற்கொண்டு அரசியல் சுயநலத்திற்காகத் தமிழ்நாட்டு விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் இந்திய தேசிய கட்சிகளின் கொடும்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

மேகதாது அணை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், ஒன்றிய அரசில் உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, குறுக்கு வழியில் அணையை கட்ட கர்நாடக மாநில பாஜக அரசு முயல்வதும், அதற்கு வலுசேர்க்கும் விதமாக அங்குள்ள காங்கிரசு கட்சி அரசியல் நெருக்கடிகளைக் கொடுப்பதும் தமிழக விவசாயிகளிடம் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் மற்றும் இந்திய ஒன்றியத்தை மாறிமாறி ஆண்ட காங்கிரஸ் மற்றும் பாஜக அரசுகள் தமிழ்நாட்டிற்குச் செய்த பச்சை துரோகத்தால் காவிரி நதிநீர் உரிமையில் தமிழ்நாடு பெரும் இழப்பைச் சந்தித்திருக்கும் வேளையில், மேகதாது அணையும் கட்டப்பட்டுவிட்டால் தற்போது கிடைக்கக்கூடிய சொற்ப அளவிலான நீரும் மறுக்கப்பட்டுத் தமிழ்நாட்டிற்குக் காவிரிநீர் என்பதே முற்று முழுதாகக் கானல் நீராகும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

கர்நாடக மாநிலத்தில் தங்களது அற்ப அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்திக்கொள்ளக் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட இருதேசிய கட்சிகளும் மேகதாது அணையைப் பகடைக்காயாக்கி தமிழ்நாட்டு, விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் செயலை தொடர்வது சிறிதும் மனச்சான்றற்ற பெருங்கொடுமையாகும்.

ஒருபுறம் கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட வேண்டுமெனப் போராடுவதும், தமிழ்நாட்டில் அதனை எதிர்ப்பதுபோல் நாடகமாடுவதுமென, மக்களை ஏமாற்ற மாநிலத்திற்கொரு சந்தர்ப்பவாத அரசியல் புரிவதை பாஜக, காங்கிரசு உள்ளிட்ட இந்திய தேசியக் கட்சிகள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். மேலும், மேகதாது அணை விவகாரத்தில் தங்களது உண்மையான நிலைப்பாட்டை இவ்விரு தேசிய கட்சிகளின் தலைமைகளும் இருமாநில மக்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டும்.

காங்கிரசையும், பாஜகவையும் தங்கள் முதுகில் சுமந்து தமிழ்நாட்டில் அவற்றிற்கு அரசியல் அதிகாரத்தைப் பெற்றுத்தரும் பச்சைத்துரோகத்தைத் திமுக, அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளும் உடனடியாகக் கைவிடவேண்டும்.

மேலும், தமிழ்நாடு அரசின் அனுமதி இல்லாமல் காவிரியாற்றின் குறுக்கே எந்த அணையும் கட்டக்கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவைச் சுட்டிக்காட்டி, கர்நாடக அரசுக்கு எதிராகத் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை விரைந்து விசாரித்துத் தீர்ப்பளிக்கத் உடனடியாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையிட வேண்டும்.

அத்தோடு, இவ்வழக்கில் தமிழ்நாடு அரசு எடுத்து வைக்கும் வலுவான வாதங்களில்தான் காவிரிப்படுகை விவசாயிகளின் எதிர்காலமே அடங்கியுள்ளது என்பதால், வலுவான சட்டப்போராட்டம் நடத்தி மேகதாதுவில் அணைக் கட்ட முயலும் கர்நாடக அரசியல்வாதிகளின் முயற்சியை முறியடித்திட வேண்டுமெனத் தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி