இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலை மற்றும் எழுவரின் விடுதலையை வலியுறுத்தி சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – சீமான் கண்டனப் பேருரை

790

செய்திக்குறிப்பு: இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலை மற்றும் எழுவரின் விடுதலையை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – சீமான் கண்டனப் பேருரை | நாம் தமிழர் கட்சி

20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடுஞ்சிறைவாசம் அனுபவித்து வரும் இசுலாமிய சிறைவாசிகளை மதத்தினைக் காரணமாகக் காட்டி விடுதலை செய்ய முடியாது என அரசாணை வெளியிட்டுள்ள திமுக அரசின் மதவாதப்போக்கைக் கண்டித்தும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு 30 ஆண்டுகளாகச் சிறைக்கொட்டடியில் வாடும் ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய 161வது சட்டப்பிரிவின்படி மாநில அரசுக்கே அதிகாரமிருக்கும்போது குடியரசுத்தலைவருக்குக் கடிதமெழுதி மாநிலத் தன்னுரிமையையும், தன்னாட்சியையும் காவுகொடுத்திருக்கும் திமுக அரசின் வஞ்சகப் போக்கைக் கண்டித்தும், 12.12.2021 அன்று காலை 10 மணியளவில், சென்னை – வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைத்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வழக்கறிஞர் இராவணன், விருகை ராஜேந்திரன், அன்வர் பேக், நாம் தமிழர் தொழிற்சங்கத் தலைவர் அன்புத்தென்னரசன் மற்றும் செயலாளர் வழக்கறிஞர் சுரேஷ்குமார், உழவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சின்னண்ணன், கோவை அப்துல் வகாப், சென்னை புகழேந்திமாறன், செய்திப்பிரிவுச் செயலாளர் பாக்கியராசன், தலைமை நிலையச் செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட மாநில, மாவட்ட, தொகுதி, பாசறைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்தவர்களும் பெருந்திரளாகப் பங்கேற்று இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலை மற்றும் எழுவரின் விடுதலையை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

அதனைத்தொடர்ந்து, மருது மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் செ.முத்துப்பாண்டி, இந்திய தேசிய லீக் நிர்வாகி கோவை நாசர், தமிழ் தேசிய கிறித்துவர் இயக்கம் அருட்தந்தை மை.பா. சேசுராஜ், வனவேங்கைகள் கட்சி தலைவர் இரணியன், தமிழர் நலப் பேரியக்கத் தலைவர் மு.களஞ்சியம், ஆதித்தமிழர் விடுதலை இயக்கம் பொதுச்செயலாளர் அ.வினோத், தமிழ் தேசத் தன்னுரிமை கட்சித் தலைவர் அ.வியனரசு ஆகியோரும், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஹூமாயூன் கபீர், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் துருவன், சல்மான், மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கோவை கார்த்திகா, மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் இடும்பாவனம் கார்த்திக், அபூபக்கர் சித்திக் ஆகியோரும் கண்டனவுரையாற்றினர்.

நிகழ்வின் இறுதியாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கண்டனப் பேருரையாற்றினார்.

முந்தைய செய்திசிவகாசி தொகுதி மாமன்னர்கள் மருதிருவர் வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திசேலம் வடக்கு தொகுதி டெங்கு விழிப்புணர்வு நிகழ்வு