சிங்களப் பேரினவாத அரசின் கோர இன அழிப்புக்கு ஆளாகி, நிர்கதியற்ற நிலையில் தமிழர் தாயகத்தை நம்பி வந்த ஈழச்சொந்தங்களைச் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என இழித்துரைப்பதா? – சீமான் கண்டனம்

175

சிங்களப் பேரினவாத அரசின் கோர இன அழிப்புக்கு ஆளாகி, நிர்கதியற்ற நிலையில் தமிழர் தாயகத்தை நம்பி வந்த ஈழச்சொந்தங்களைச் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என இழித்துரைப்பதா? – ஒன்றிய அரசுக்கு சீமான் கண்டனம்

இலங்கையை ஆளும் சிங்களப் பேரினவாத அரசின் கோர இன அழிப்புக்கு ஆளாகி, ஒரு பாரிய இனப்படுகொலையை எதிர்கொண்டு, அளவில்லா அழிவுகளுக்கும், இழப்புகளுக்கும் முகங்கொடுத்து வீட்டை இழந்து, ‌நாட்டை இழந்து, உறவுகளைப் பறிகொடுத்து, உரிமைகளும், உடைமைகளும் அற்றுப்போய் நிர்கதியற்ற நிலையில் நிற்கும் ஈழச்சொந்தங்கள் இப்பூமிப்பந்தில் உயிர்வாழ்வதற்கு ஒரு இடம் கிடைக்காதா? என ஏக்கத்தோடும், தவிப்போடும் பத்து கோடி தமிழ் மக்களின் தாயகமாக விளங்கும் தாய்த்தமிழகத்தை நாடி வருகையில் அவர்களைச் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் எனக்கூறி மத்தியில் ஆளும் பாஜக அரசு அவமதித்திருப்பது ஒட்டுமொத்த தமிழர்களையும் பெருஞ்சினத்திற்கு ஆளாக்கியிருக்கிறது. இந்திய என்கிற நாடும், அதற்கென ஒரு சட்டமும், இந்நாட்டுக்கென ஒரு கொடியும் உருவாக்கப்பட்டு இந்நாடு நாடாவதற்கு முன்பிருந்தே இந்நிலத்தை ஆண்டப் பேரினத்தின் மக்களை அண்டிப் பிழைக்க வந்த ஆரியக்கூட்டம், ஆதிக்கம் செய்ய முற்படுவது வரலாற்றுப் பெருங்கொடுமையாகும்.

தமிழினத்திற்கு யாதொரு தொடர்புமில்லாத பிரிட்டன், பிரான்சு, ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளும், கனடா, ஆஸ்திரேலியா போன்ற மேலை நாடுகளும் தம்மை நாடிவந்த தமிழ்மக்களுக்கு அடைக்கலமளித்து, அரவணைத்து, ஆதரித்து அனைத்துவித அடிப்படை உரிமைகளையும் உறுதிசெய்து வாழ்வளிக்கின்றன. ஆனால், தனித்த பெரும் தேசிய இனமாகப் பத்துகோடி தமிழர்கள் பரந்து விரிந்து, நிலைத்து நீடித்து வாழும் இந்தியப்பெருநாட்டில், தொப்புள்கொடி உறவுகளான ஈழச்சொந்தங்களைச் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என இழித்துரைத்திருப்பது தமிழ்த்தேசிய இனத்தின் மீதான ஆரிய இனப்பகையின் வெளிப்பாடேயேயாகும். இந்தியப் பெருநிலத்திற்கு எவ்விதத் தொடர்புமில்லா ஆரியக்கூட்டம், இந்நாட்டையும், அதிகாரத்தையும் ஆக்கிரமித்து அபகரித்துக்கொண்டு, இந்நாட்டின் பூர்வீகக்குடிகளின் இரத்தச் சொந்தங்களைச் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் எனக்கூறுவது அதிகாரத்திமிரின் உச்சமாகும். இந்நாட்டின் விடுதலையை விரும்பாது, அதற்காக எவ்விதப்போராட்டமும் செய்யாது, இம்மண்ணை ஆக்கிரமித்த அந்நியர்களான வெள்ளையர்களுக்கு முழுமையாகச் சேவகம் செய்து காலம் கழித்து, அற்ப வாழ்வு வாழ்ந்திட்ட தேசவிரோதக்கும்பல், இந்நாட்டின் விடுதலைக்காக அளப்பெரும் பங்களிப்பைச்செய்த இந்நிலத்தின் பூர்வக்குடி மக்களான தமிழர்களை மாற்றாந்தாய் மனப்போக்கோடு கருதி கொச்சைப்படுத்தியிருப்பது அடக்கவியாள ஆத்திரத்தையும், அளப்பெரும் சீற்றத்தையும் தருகிறது

இலங்கையிலிருந்து வந்த ஈழச்சொந்தங்கள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களா? பாகிஸ்தான், பங்களாதேசிலிருந்து அகதிகளாக வந்த இந்துக்களைச் சட்டவிரோதமாகக் குடியேறிவர்களென இந்நாடு கருதுமா? சீனாவிலிருந்து அகதிகளாக வரும் திபெத்திய மக்களை அவ்வாறு கூறி துரத்துமா? திபெத்தியர்களுக்கு இந்நாடு அளிக்கும் வசதிகள், சலுகைகள் என்னென்ன? அவர்களிடம் காட்டும் அக்கறை, பரிவு, பற்றில் நூற்றில் ஒரு பங்குகூட, நாட்டுக்குப் பெருத்த பொருளாதாரப் பங்களிப்புகளைச் செய்யும் தமிழ்ப்பேரினத்தின் தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்களிடம் காட்ட மறுப்பதேன்? அவர்கள் தமிழர்கள் என்பதற்காக இந்த நாடு எந்தக் கூடுதல் சலுகையும் அளிக்காவிட்டாலும், குறைந்தபட்சம் மனிதர்கள் என்ற அடிப்படையிலாவது அவர்களுக்கான தேவைகளை நிறைவேற்றிக் கொடுத்திருக்கலாமே! அதனைவிடுத்து, எவ்வித அடிப்படை வசதியுமின்றித் திறந்தவெளி சிறைக்கூடத்தில் கைதிகளைப் போல அவர்களை அடைத்துவைத்து, வந்தநாள் முதல் கண்காணித்துக் கடும் அடக்குமுறைகளுக்கும், சித்ரவதைகளுக்கும் ஆளாக்கி தற்போது சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் எனக்கூறி குடியுரிமையையும் வழங்க மறுத்து, வஞ்சித்திருப்பது தமிழினத்தின் தன்மான உணர்வையும், இனமான உணர்வையும் சீண்டிப்பார்ப்பதாகும்.
இந்தியாவை தந்தையர் நாடெனக் கருதி நேசித்து நின்ற எமது தொப்புள்கொடி உறவுகள் எப்படிச் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் ஆனார்கள்? அவர்களைக் குடியமர்த்தும்போது அவர்கள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என்று தெரியாதா? சட்டவிரோதமாக வந்தவர்கள் என்றால் எந்த அடிப்படையில் இந்நாடு குடியமர்த்தியது? அதிகாரிகள் முன்னிலையில் பதிவு செய்து, முகாம்களில் தங்கவைத்து, அவர்களின் எண்ணிக்கை, அவர்கள் வெளியே செல்லும் நேரம், உள்ளே வரும் நேரம் என அனைத்தையும் ஒவ்வொரு நாளும் கணக்கெடுத்து அவற்றைச் சட்டப்பூர்வமாக ஆவணப்படுத்திவிட்டு, தற்போது அவர்களைச் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என்று குறிப்பிடுவது சிறிதும் மனிதத்தன்மையற்ற ஈனச்செயலாகும்.

உலகின் மற்ற நாடுகள் எல்லாம் தங்களை நாடி வந்த மக்களை, தங்கள் நாட்டுக் குடிகள் போலப் பாவித்துக் குடியுரிமை வழங்கிப் பாதுகாக்கும் சூழலில், ஒரு தலைமுறை கடந்து இத்தனை ஆண்டுகளாக இந்த நிலத்தில் வாழ்ந்தும் எம்மக்களுக்குக் குடியுரிமையை மறுத்துப் புறந்தள்ளுவது எந்தவகையில் நியாயம்? ஈழத்தாயகத்தை முற்றாகச் சிதைத்தழித்து, அங்கு வாழ்ந்த தமிழின மக்களை நாடற்றவர்களாக்கி, ஏதிலி‌யெனும் இழிநிலைக்குத் தள்ளி, நாடு நாடாக ஓடவைத்துவிட்டு இன்றைக்கு அவர்கள் குடியுரிமைகேட்டு நிற்கையில், அவர்களைச் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் எனக்கூறி துரத்துவது ஆயிரம் ஆண்டு காலமாகத் தொடரும் ஆரிய இனக்கூட்டத்தின் தமிழர்கள் மீதான வன்மத்தை தாண்டி வேறில்லை. இது இந்நாட்டின் விடுதலைக்கும், முன்னேற்றத்திற்கும், பொருளாதாரத்திற்கும் பெரும் பங்களிப்புச் செய்து வரும் தமிழர்களின் உணர்வுகளை உரசிப்பார்க்கும் ஆணவச்செயலாகும். இந்திய நாட்டையே சொந்தம் கொண்டாடும் தார்மீக உரிமை கொண்ட மண்ணின் மக்களான தமிழர்களை இழிவாக எண்ணி, ஈழச்சொந்தங்களுக்குக் குடியுரிமை வழங்க மறுப்பது வருங்காலத் தலைமுறை பிள்ளைகளிடத்தில் இந்திய உணர்வே முழுமையாகப் பட்டுப்போகுமளவுக்கு ஆறாத ரணத்தை உருவாக்குமென எச்சரிக்கிறேன்.

ஆகவே, ஈழச்சொந்தங்களைச் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் எனக்கூறி, அவர்களுக்குக் குடியுரிமை வழங்க மறுக்கும் ஒன்றிய அரசு, தனது முடிவை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமெனவும், தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளவாறு ஈழத்தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கச் சட்டப்போராட்டமும், அரசியல் நெருக்கடியும் கொடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி