ஒரு மாதம் ஒரு இலட்சம் உறுப்பினர்கள்! – தகவல் தொழில்நுட்பப் பாசறை முன்னெடுக்கும் மாபெரும் இணையவழி உறுப்பினர் சேர்க்கைப் பரப்புரை

1022

ஒரு மாதம் ஒரு இலட்சம் உறுப்பினர்கள்! – தகவல் தொழில்நுட்பப் பாசறை முன்னெடுக்கும் மாபெரும் இணையவழி உறுப்பினர் சேர்க்கைப் பரப்புரை

தாய்த்தமிழ் உறவுகளுக்கு அன்பு வணக்கம்!

பன்னெடுங்காலமாக அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழ்ப்பேரினத்தை மீட்டெடுப்பதற்காகவும், தமிழ் இனத்தையும், நிலத்தையும், மொழியையும் போற்றிப் பாதுகாப்பதற்காகவும், இழந்துவிட்ட தமிழரின் பழம்பெருமைகளையும், பண்பாட்டுச் செழுமைகளையும் மீள்பெறச் செய்வதற்காகவும், தமிழினத்தலைவரை நெஞ்சிலும், தலைவர் தந்த புலிக்கொடியை கைகளிலும் ஏந்தி தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் தமிழ்த்தேசிய அரசியலை விதைக்கும் பெரும்பணியை, தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் கடந்த பதினொரு ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகப் பேரெழுச்சியுடன் செய்துவருகிறது நாம் தமிழர் கட்சி.

தமிழரை அடையாளமற்று திசைமாற்றும் போலிப் புனைவுகளான ஆரியம், திராவிடம் இரண்டிற்கும் மாற்றாக தமிழ்த்தேசிய அரசியலை வெகுசன அரசியல் பேரியக்கமாக மாற்றி, அதன் மூலம் தமிழ்மக்களின் உரிமைகளைப் போராடிப் பெறுவதில் எப்போதும் முன்னிற்கிறது நாம் தமிழர் கட்சி!

மண்ணிற்கும், மக்களுக்கும் எதிராக மத்திய, மாநில ஆட்சியாளர்களாலும், அதிகார வர்க்கத்தாலும் திணிக்கப்படும் யாதொரு தீங்கையும் தடுத்துக் காக்கும் காப்பரணாக நாம் தமிழர் கட்சி விளங்குகிறது என்றால் அது மிகையல்ல.

அதனை நிறுவுகின்ற வகையிலேயே நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்ற பொதுத்தேர்தலில் 30 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் நம்பிக்கையைப் பெற்று தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. பணபலமும், படைபலமும் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டு மக்களிடம் வாக்குகளைப் பறிக்கும் சமகாலத் தேர்தல் அரசியல் வரலாற்றில், அவையனைத்தையும் தவிடுபொடியாக்கி, உண்மையும், நேர்மையுமாக மக்கள் பணியாற்றும் எளியப் பிள்ளைகளான நம்மை, மக்கள் ஆதரிக்கத் தொடங்கிவிட்டதையே நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

அப்படி அரசியல் விழிப்புணர்வு பெற்ற மக்கள், அதிகாரத்தை நம் கையில் அளிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. அதை இலக்காக வைத்து மக்களை நோக்கி முன்நகர வேண்டியது ஒவ்வொரு நாம் தமிழர் பிள்ளையின் பெருங்கடமையாகும்.

நாம் இன்னும் சென்றுசேராத கிராமங்களில், கட்சிக்கு அப்பாற்பட்டு நம்மை ஆதரித்து வாக்களித்த பல இலட்சக்கணக்கான மக்களை அரசியற்படுத்தி அமைப்பிற்குள் கொண்டுவந்து நாம் தமிழர் கட்சியை மாபெரும் அரசியல் பேரியக்கமாக வலுப்படுத்த வேண்டியது நம் ஒவ்வொருவரின் மிகமுக்கிய பொறுப்பாகும். இருப்பினும் தேர்தலுக்குப் பிறகு, கொரோனா பெருந்தொற்றுப் பரவலின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருவதால் களத்தில் இறங்கிச் செயல்படமுடியாத நெருக்கடியானநிலை நிலவுகிறது. ஆகவே களப்பணிகளில் ஏற்பட்டுள்ள தொய்வினைப் போக்கவும், நம் உறவுகளை ஊக்கப்படுத்தவும், கட்சி வளர்ச்சியினை அடுத்த இலக்கை நோக்கி முன்நகர்த்துவதற்கான முதற்படியாகவும் தகவல் தொழில்நுட்பப் பாசறை சார்பாக “ஒரு மாதத்தில் ஒரு இலட்சம் உறுப்பினர்கள்” என்ற புதிய நிகழ்வை முன்னெடுக்கிறது. இந்த உறுப்பினர் சேர்க்கையானது முழுக்க முழுக்க இணையவழி மூலமாகவே நடைபெறக் கூடியது.

ஒரு இலட்சம் உறுப்பினர்களைச் சேர்ப்பதை இலக்காகக்கொண்டு செயல்படும் இம்முயற்சியில் ஒவ்வொரு தொகுதியும் தத்தம் பங்களிப்பாகக் குறைந்தபட்சம் 500 புதிய உறுப்பினர்களை ஒரு மாதத்திற்குள் சேர்த்திருக்க வேண்டும். இதை ஒரு சவாலாகவே எடுத்துக்கொண்டு ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியும் சாதித்துக் காட்ட வேண்டும். நீங்கள் சேர்க்கும் ஒவ்வொரு உறுப்பினரும் உங்கள் தொகுதியின் கட்டமைப்புப் பலத்தை வெளிக்காட்டுவதாக அமையும் என்பதை நினைவிற்கொண்டு உறுப்பினர்கள் சேர்க்கும் இந்நிகழ்வை தொகுதி உறவுகள் அனைவரையும் ஒருங்கிணைத்து ஆர்வமுடன் தீவிரமாகச் செய்திடல் வேண்டும்.

பெருந்தொற்று புறச்சூழல் களப்பணியாற்ற நமக்குச் சாதகமாக இல்லாத இச்சூழ்நிலையில் எந்தவொரு நெருக்கடியான நிலையிலும் நம்மால் இயங்க முடியும், சாதிக்க முடியும் என்பதை நாம் நிருபித்துக்காட்ட வேண்டும். இதன்மூலம் கொரோனாவினால் களப்பணியில் ஏற்பட்டுள்ள தொய்வினைப் போக்கி நமக்குநாமே புத்துணர்ச்சி கொள்ள முடியும்.

உறுப்பினர் சேர்க்கை பணிகளை ஊக்கவிக்கும் வகையில் உறுப்பினர் சேர்க்கைக்கான இணையச் செயலியின் ( join.naamtamilar.org ) முகப்புப் பக்கத்தில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் உறுப்பினர் எண்ணிக்கை மற்றும் உறுப்பினர் எண்ணிக்கையில் தொகுதி தரவரிசை ஆகிய தகவல்களைப் பார்க்கலாம். மேலும் உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக இணையத்தில் பதிவிடும் அனைத்து பதிவுகளிலும் பயன்படுத்த வேண்டிய கொத்துக்குறி (HashTag),

#JoinNTKFamily மற்றும் #நாம்தமிழராய்இணைவோம்

தகவல் தொழில்நுட்பப் பாசறை முன்னெடுக்கும் இப்பெரும் முயற்சிக்குக் கட்சியின் மாவட்ட, தொகுதி, நகரம், பகுதி, வட்டம், ஒன்றியம், கிளை உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்து பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் மற்றும் நாம் தமிழர் உறவுகள் ஒவ்வொருவரும் உறுதுணையாக இருந்து நடைபெறவிருக்கிற ஒரு மாதம் ஒரு இலட்சம் உறுப்பினர்கள்! என்ற மாபெரும் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வை வெற்றி நிகழ்வாக மாற்றத் துணைநிற்க வேண்டுமென்று பேரன்புடன் கேட்டுக்கொள்கிறோம்!

நன்றி,
தகவல் தொழில்நுட்பப் பாசறை
நாம் தமிழர் கட்சி