புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் 64ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – தலைமையகம்

159

செய்திக்குறிப்பு: புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் 64ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு | நாம் தமிழர் கட்சி

இந்திய அரசியல் சாசனத்தை வகுத்த பேராசான்! உலகெங்கிலும் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குறியீடு! இழந்துவிட்ட உரிமைகளைப் பிச்சைக்கேட்டுப் பெறமுடியாது; போராடித்தான் பெற்றாகவேண்டும். கற்பி! ஒன்று சேர்! புரட்சி செய்! என்று போதித்த புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களினுடைய 64ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 06-12-2020 தலைமை அலுவலகமான இராவணன் குடிலில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.

அறிவைத் தேடி ஓடுங்கள் நாளைய வரலாறு உங்கள் நிழலை தேடி ஓடிவரும் என்று போதித்த அறிவாசான் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவுநாள் இன்று தாங்கள் வாழும் நாட்டை விடத் தாங்கள் பின்பற்றும மதம்தான் பெரியது என ஒரு நாட்டின் மக்கள் கருதிவிட்டார்களானால் அந்நாடு நாசமாவதை யாராலும் தடுக்க முடியாது என்று கற்பித்திருக்கிறார். சாதிய உணர்ச்சி மேலோங்கி இருக்கும் சமூகத்தில் பொதுநலன் அறவே இருக்காது என நமக்கு அறிவுறுத்துகிறார். ஆண்டாண்டு காலமாய். அடிமைப்படுத்தப்பட்டு, ஒடுக்கப்பட்டு, பிற்ப்படுத்தப்பட்ட மக்களாகிய நாங்கள் அறிவாசான் அண்ணல் அம்பேத்கர் வழியில் எழுச்சியும், புரட்சியுமாக எழுந்து வந்து, ஒருங்கிணைந்து நின்று, எமக்கான அரசியல் வலிமையைப்பெற்று, இழந்த உரிமைகளை மீட்போம், இருப்பதைக் காப்போம் என இந்த நாளில் உறுதியேற்கிறோம்.

ஐயா ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்துத் தேர்தலில் போட்டியிடுதென்று முடிவுசெய்துவிட்டார். நாங்களும் களத்தில் சந்திப்போம் என்று முடிவுசெய்துவிட்டோம். ஆனால் இப்போது சில கேள்விகளை எழுப்ப விரும்புகிறேன், இத்தனை ஆண்டுகள் உங்கள் ரசிகர் மன்றத்தை நிர்வகித்த செயல்பாட்டாளர்களில் ஒருவருக்குக் கூடவா உங்கள் கட்சியை நிர்வகிக்கத் தகுதி இல்லை? அதில் ஒருவரை நீங்கள் ஏன் தேர்வு செய்யவில்லை? உங்கள் ரசிகர் மன்றத்தில் இத்தனை ஆண்டுகளாக இருந்த ஒருவர் கூடவா உங்களுக்கு ஒருங்கிணைப்பாளராகத் தேர்ந்தெடுக்க முடியவில்லை. உங்கள் கட்சி தலைமை நிர்வாகிகளில் ஒருவர் அர்ஜுனமூர்த்திப் பா.ஜ.க, மற்றொருவர் தமிழருவி மணியன் காங்கிரஸ், இருவரையும் வைத்துக்கொண்டு எப்படி மாற்றம் கொண்டு வருவீர்?’ அரசியலில் ரஜினியின் தேவை என்று என்ன இருக்கிறது? எந்தப் பிரச்சனைக்காக ரஜினி குரல் கொடுத்திருக்கிறார்? எந்தப் பிரச்சனைக்காகப் போராடியிருக்கிறார்? வேளாண் சட்டங்கள் குறித்து ரஜினியின் கருத்தென்ன? நீட் தேர்வு குறித்து அவரது நிலைப்பாடு என்ன? ரஜினியின் தேவை எங்கு உள்ளது? பாஜகவிற்குதான் ரஜினிகாந்தின் தேவை உள்ளது. 60 நாளில் ஆங்கிலம் கற்பது எப்படி என்பது போல 30 நாட்களில் முதல்வராவது எப்படி என்று அவரது அரசியல் ஆசை உள்ளது. வேண்டுமென்றால் நாடு தழுவிய அவரது புகழைப் பயன்படுத்தி மோடியை வீழ்த்தி பிரதமராக வரட்டும். அம்மையார் ஜெயலலிதா, ஐயா கருணாநிதி இருக்கும் போதே நாங்கள் கட்சி தொடங்கி எதிர்த்து அரசியல் செய்தோம். அவர்கள் இருந்தபோது ஊழல் இலஞ்சம் இல்லையா? அன்றைக்கு மாற்றம் தேவைப்படவில்லையா? அப்போது ஏன் மாற்றத்தை கொண்டுவருவேன் என்று ரஜினிகாந்த் கட்சி தொடங்கவில்லை? தற்போது பாஜகவின் அழுத்தம் காரணமாகக் கட்சி தொடங்குவதாக அறிவித்திருக்கிறார் என நான் உறுதியாக நினைக்கிறேன். மோடி ரஜினி எனும் புதிய முகமூடி அணிந்து வருகிறார் என்பதே உண்மை.  கூட இருந்து யாரோ ரஜினிகாந்தைத் தூண்டிவிடுகிறார்கள். மொத்தமாகவே தமிழர்களை அறிவு கெட்ட கூட்டம் என நினைக்கிறார் ரஜினிகாந்த் . டெல்லியில் நடைபெறும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி பங்கேற்கிறது. நாளையும் எங்கள் பிள்ளைகள் பங்கேற்றுப் போராடவிருக்கிறார்கள். காவல் துணை ஆய்வாளர்கள் தேர்வில் தமிழ்வழியில் பயின்றவர்களுக்கான இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

– இவ்வாறு சீமான் கூறியுள்ளார்


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084