தமிழ்த்தேசிய இனத்தின் ஆன்ம விருப்பமான தமிழீழத்தேசத்தைப் படைத்திட தலைவர் உதித்தத் திருநாளில் ஒவ்வொரு தமிழரும் உறுதியேற்போம்! – சீமான்

335

தமிழ்த்தேசிய இனத்தின் ஆன்ம விருப்பமான தமிழீழத்தேசத்தைப் படைத்திட தலைவர் உதித்தத் திருநாளில் ஒவ்வொரு தமிழரும் உறுதியேற்போம்!

  • சீமான்

நவம்பர் 26!

இன்றைய நாள் வரலாற்றின் வீதிகளில் தாழ்ந்து வீழ்ந்து கிடந்த தமிழர் என்ற தேசிய இனம் தன்னைத் தானே தலை உயர்த்தி நிமிர்ந்து பார்க்கின்ற புனித நாள். அழித்தொழிக்கப்பட்ட அடிமைத்தேசிய இனமாக உலக வீதிகளில் நாம் அலைந்தாலும் நமது உள்ளத்துக்குள் எரிகின்ற விடுதலை நெருப்பு இன்னும் அணையாமல் இருப்பதற்கான ‘ஒற்றைப் பெயர்’ பிறந்த நன்னாள்.

அது நம் தேசியத் தலைவர் அன்பு அண்ணன் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் பிறந்த புனிதத் திருநாள்.

இந்த உலகில் வாழ்கின்ற ஒவ்வொரு தேசிய இனமும் தனது மொழி, நிலம், உரிமைகள், பண்பாட்டு விழுமியங்கள், தேசிய இனத்தின் இறையாண்மை ஆகியவற்றைக் காப்பாற்ற போராடி வருகிற பெரும் கதையே உலக வரலாறாக அறியப்படுகிறது. கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக் குடி எனப் போற்றப்படுகின்ற தமிழர் என்கின்ற தேசிய இனமும் பன்னெடுங்காலமாக தனது மொழி, நிலம், பண்பாட்டு அடையாளங்களைக் காப்பாற்றுவதற்கு போராடி வருகிறது. காலம் காலமாக உயிரைத் துச்சமாகக் கருதி, மானத்தையும், வீரத்தையும் உயிராகக் கருதி களத்தில் நின்ற பெருமாவீரர்கள்தான் தமிழ்த்தேசிய இனத்தின் தெய்வங்களாக, இறை வடிவங்களாக மாறி இருக்கிறார்கள். வரலாற்றுப் பெருமிதங்கள் நிறைந்த தமிழர் வரலாற்றில் நேர் எதிர் நின்று எதிரிகளை நோக்கி மாபெரும் வீரத்துடன் வேலெடுத்து பாய்ந்த முருகன், வாளெடுத்து சுழன்று திசை எட்டும் புலிக்கொடி பறக்க வைத்த சோழன், என காலப் பெருமையின் நீண்டு துலங்கும் பட்டியலில் அறம் வழி நின்று மறம் போற்றி வாழ்ந்து, ‌ தன் பெயரை தங்க எழுத்துக்களால் பொறித்து தனித்துவம் கண்ட தலைவராக மிளிர்ந்து சுடர்கிற சூரியனாய் விளங்குபவர்தான் நமதுயிர்த் தலைவர், அன்பு அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.

இந்த உலகில் வாழ்கின்ற 12 கோடி தேசிய இன மக்களைக் கொண்ட தமிழினத்தின் இருபெரும் தாய் நிலங்களாக தாயகத்தமிழகமும், தமிழீழமும் இருந்து வருகின்றன. நடுவே பாய்ந்துப் பூரிக்கின்ற கடலலைகள் இரு பெரும் நிலங்களையும் பிரித்தாலும் குருதி முழுவதும் நிறைந்திருக்கின்ற மரபணுக்களின் ஒத்திசைவு உணர்வால், ஒரு தாயின் வயிற்றில் தோன்றிய ஒரே கருவறைப் பிள்ளைகள் என்கின்ற உறவால் ஒற்றைத் தேசிய இனத்தின் மக்களாக தமிழராகிய நாங்கள் வாழ்கின்றோம்.

நீண்ட நெடிய வரலாற்றுத் தொடர்ச்சி, எக்காலம் தோன்றியது என அறிய முடியாத அளவுக்கு இலக்கண, இலக்கிய செழுமைகளுடன் கூடிய மொழி முதுமை போன்ற பெரும் சிறப்புகள் தமிழினத்திற்கு இருந்தாலும் இறையாண்மையுடன் கூடிய ஒரு நாடு இல்லையே என்ற ஏக்கம் ஒவ்வொரு தமிழ் மகனின் மனதிற்குள்ளும் ஆழ்மனத்துக்கமாக பன்னெடுங்காலமாக இருந்து வந்தது. சிங்களப்பேரினவாத கரங்களுக்குள் நம் தாய் நாடான தமிழீழம் சிக்கித் தவித்த போது இதை மீட்க யாராவது எங்கிருந்தோ வர மாட்டார்களா? என்கிற தவிப்பு நம்மிடையே இருந்து வந்தது.

நம் மனதிற்குள் இருந்த அந்தத் துக்கத்தைத் துடைத்தெறிவதற்காக, ஏங்கித் தவித்த ஏக்கத்தை அழித்து முடிப்பதற்காக காலம் அளித்த கரிகாலனாக நம்மிடையே தோன்றி, சமகாலத்தில் தமிழர் என்ற தேசிய இனத்திற்கு முகமாக, முகவரியாக , ஊக்கமாக, ஆற்றலாக அடையாளமாக திகழ்பவர்தான் நம் தேசியத் தலைவர் அவர்கள்.

தனது அறநெறிப் போற்றி வாழ்ந்த வாழ்க்கை முறையினால், ஓங்கி உயர்ந்த ஒழுங்கு நடவடிக்கைகளால் இதுவரை தோன்றிய புரட்சியாளர்களில் நம் தேசியத் தலைவர் அண்ணன் பிரபாகரன் அவர்கள் ஆகச் சிறந்தவராகிறார். படையின் எண்ணிக்கையில் வெற்றியல்ல; எண்ணத்தில்தான் வெற்றி என்பதைப் பாருக்கு எடுத்துச் சொன்னதோடு மட்டுமில்லாமல் அதை நடைமுறைப்படுத்தி வரலாற்றில் வீரக்காவியமாக மாற்றி நிறுத்தியதும் தலைவர் பிரபாகரன் மட்டும் தான்.

ஒரு மக்களின் தலைவனின் வாழ்க்கை எவ்வாறு அமையவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் அவர் விளங்கினார். மக்களோடு மக்களாக எளிய வாழ்க்கை வாழ்ந்து இறுதிவரை மக்களின் விடுதலைக்காகக் களத்திலே நின்று, எதிர்த்து நின்ற எதிரியைக்கூட உளப்பூர்வமாக வென்று காட்டியவர்தான் நம் தலைவர் பிரபாகரன் அவர்கள். அவர் கட்டமைத்த ஈழ சோசலிசக் குடியரசு இதுவரை தோன்றிய உலக நாடுகள் அனைத்திற்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்தது. மது, புகை ஊழலற்ற, பாதுகாப்பான, மக்கள் நலன் பேணுகின்ற, மொழி பண்பாட்டு அடையாளங்களை பாதுகாக்கிற , சுற்றுப்புறச் சூழலியல் கருத்துக்களை உள்ளடக்கிய தாய்மைப் பொருளாதாரத்தைப் போற்றி வளர்த்த ஒரு பொதுமை அரசாக தலைவர் பிரபாகரன் கட்டியெழுப்பினார்.

அவர் கனவுப் பூமியாய் கட்டமைத்த நம் தமிழீழத் தேசத்தை உலக வல்லாதிக்கங்களின் துணையோடு சிங்களப் பேரினவாதம் இன்று அடிமைப் பூமியாக மாற்றி வைத்திருக்கிறது. வரலாறு காணாதத் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை வைத்து, உலக நாடுகளின் துணைகொண்டு நமது விடுதலைப்போராட்டத்தை சிங்கள அரசு தற்காலிகமாக முறியடித்து வைத்திருக்கிறது. போர் முடிந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் உலக அரங்கில் நமக்கென நீதி இன்றும் கிடைக்கவில்லை. இவ்உலகில் எல்லாத் தேசிய இனங்களையும் போல நமக்கும் சகலவிதமான உரிமையுடன் வாழக்கூடிய இறையாண்மை மிக்க ஒரு தேசம் இன்றளவும் அமையவில்லை.

நம் உயிர் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் கரங்களில் இருந்த விடுதலைப் போராட்டம் இன்று உலகத் தமிழர்களின் தோள்களுக்கு மாற்றப்பட்டிருக்கிறது. எது நடந்தாலும் என்ன நிகழ்ந்தாலும் தமிழீழ நாட்டிற்கான விடுதலைப்போராட்டத்தை எந்த சூழ்நிலையிலும் கைவிடாமல் தொடர்ந்து எடுத்துச் செல்வதுதான் நம்முயிர் தலைவர் மீதான நமது ஆழ்ந்தப் பற்றுறுதியை இவ்வுலகிற்கு எடுத்துக்காட்டுகிற உன்னதப்பணி என்பதை இப்புனித நாளில் உணர வேண்டும்.

இப்பூமிப்பந்தில் இறுதித்தமிழன் இருக்கும் வரை தமிழீழம் சாத்தியம்தான் என்பதை நம் சத்தியத்தலைவர் பிரபாகரன் அவர்களது வாழ்க்கையிலிருந்து நாம் எடுத்துக் கொள்கிற தத்துவமாக இருக்கிறது. மன உறுதி குலையாமல், விடுதலை நோக்கம் சிதையாமல் தமிழினம் தனது விடுதலைப்பாதையில் தொடர்ந்து முன்னேற வேண்டும் என்பதுதான் நம் தலைவர் பிறந்த நாளில் நாம் எடுத்துக்கொள்ளும் ஆணையாக அமைகிறது. உலகம் முழுக்க வாழ்கின்ற எம் தாய்த்தமிழ் உறவுகளுக்கு தேசியத் தலைவர் என்னுயிர் அண்ணன் மேதகு வே. பிரபாகரன் அவர்களது 66 ஆவது அகவை தினத்தில் தமிழர் எழுச்சி நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

தமிழ்த்தேசிய இனத்தின் ஆன்ம விருப்பமான தமிழீழத்தேசத்தைப் படைத்திட தலைவர் உதித்தத் திருநாளில் ஒவ்வொரு தமிழரும் உறுதியேற்போம்!

வாழ்க தலைவர் பிரபாகரன்!

வெல்க தமிழீழம்!

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திமதுரை மத்திய தொகுதி – தலைவர் பிறந்தநாள் விழா
அடுத்த செய்திதலைவர் பிறந்தநாள் – தமிழர் எழுச்சி நாள் விழா – மதுரவாயல் | சீமான் வாழ்த்துரை [ புகைப்படங்கள் – காணொளி ]