ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் ஆ.ராசா மற்றும் நீரா ராடியாவுக்கு சி.பி.ஐ சம்மன் அனுப்பட்டுள்ளது

22

2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் நிகழ்ந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. டிராய் முன்னாள் தலைவர் பிரதீப் பைஜாலிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அரசியல் தரகர் நீரா ராடியாவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடில் முறைகேடு நிகழ்ந்ததால் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இதை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டு விசாரணைக் குழு (ஜேபிசி) அமைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் குளிர் காலக் கூட்டத் தொடர் முழுவதையும் முடக்கின.இந்த விவகாரத்தில் மெத்தனமாக செயல்படுவதாக சிபிஐ மீது உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த விஷயத்தில் ராசா மீது நடவடிக்கை எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பிரதமரின் மெத்தனத்தை கடுமையாகக் குறை கூறினர்.

இந்நிலையில் தனது பதவியை கடந்த மாதம் 14-ம் தேதி ராசா ராஜிநாமா செய்தார். இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் ராசாவின் வீடு, அலுவலகம், அவரது உறவினர், நண்பர்களின் வீடுகளில் இரண்டு முறை சோதனை நடத்தினர். இது தவிர, அரசியல் தரகராக செயல்பட்ட வைஷ்ணவி கம்யூனிகேஷன்ஸ் நிறுவன உரிமையாளர் நீரா ராடியாவின் அலுவலகங்கள், வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தியது. அரசு பங்கு விற்பனைப் பிரிவின் செயலரும், டிராய் அமைப்பின் தலைவருமாக இருந்த முன்னாள் அதிகாரி பிரதீப் பைஜால் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

இப்போது அடுத்த கட்ட நடவடிக்கையாக ஆ. ராசாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சிபிஐ அதிகாரிகள் தில்லியில் உள்ள ராசாவின் வீட்டில் இந்த நோட்டீûஸ ஒட்டியுள்ளனர். குற்றவியல் சட்டப்பிரிவு 160-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்தக் குற்றப் பிரிவின் கீழ் நோட்டீஸ் பெற்றவர்கள், சிபிஐ அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு நேரில் ஆஜராகி பதிலளிக்க வேண்டும். இப்போது ராசா, சென்னையில் உள்ளார். அவர் எப்போது நேரில் ஆஜராவார் என்பது தெரியவில்லை.ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் சில நிறுவனங்களுக்கு ராசா சலுகை காட்டியதால் அரசுக்கு குறைந்தபட்சம் ரூ.22 ஆயிரம் கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக சிபிஐ மதிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்க முடிவு செய்துள்ளது.

டிராய் முன்னாள் தலைவர் பிரதீப் பைஜாலிடம் சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை விசாரணை நடத்தினர். 1966-ம் ஆண்டின் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான பைஜால், அரசு பங்கு விற்பனைத் துறையின் செயலராகவும் பணியாற்றியுள்ளார். சுமார் மூன்றரை மணி நேரம் வரையில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. தனது விளக்கத்தை அளித்ததாக விசாணைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பைஜால் தெரிவித்தார். என்ன விளக்கம் கொடுத்தீர்கள் என செய்தியாளர்கள் கேட்டவுடன், ஆத்திரமடைந்த பைஜால், உங்களுக்கு ஆங்கிலம் தெரியாதா? என்று கேட்டபடி, வேறு எதுவும் சொல்வதற்கில்லை என்று கூறியபடி காரில் ஏறிச் சென்றார்

முந்தைய செய்திசென்னை பல்கலைகழகத்தில் ராகுல் காந்தியின் அரசியல் நிகழ்ச்சி – செந்தமிழன் சீமான் கண்டன அறிக்கை.
அடுத்த செய்தி27.12.2010 அன்று இராமநாதபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக இலங்கைக்கு மின்சாரம் வழங்குவதை எதிர்த்து மாபெரும் பொதுக்கூட்டம்.