இலங்கை போர்குற்ற நடவடிக்கை மேல் கட்ட நடவடிக்கை குறித்து பான்கிமூன் ஆலோசனை.

9

இலங்கை விவகாரம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன என்பது குறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் தீவிரமாக ஆலோசித்து வருகிறார் என்று அவரது பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்தார்.ஐ.நா. செய்திகளை வழங்கும் “இன்னர் சிற்றி பிரஸ்” நிறுவனத்தின் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளிக்கையிலேயே பர்ஹான் ஹக் இவ்வாறு தெரிவித்தார்.

நிபுணர் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் பொதுச் செயலர் சிபார்சு செய்தால் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் அல்லது பொதுச் சபையில், இலங்கை மீதான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமா என்பது தொடர்பில் வாக் கெடுப்பு நடத்தப்படுமா என்று பேச்சாளரிடம் “இன்னர் சிற்றி பிரஸ்” கேட்டதற்கு, “நாங்கள் செய்வதைப் பொறுத்திருந்து பாருங்கள்” என்றார் ஹக்.

நிபுணர் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் ஐ.நாவில் என்ன செய்ய முடியும் என்று, ஐ.நாவின் சிறுவர் மற்றும் ஆயுத முரண்பாடுகள் தொடர்பான ஆலோசகர் ராதிகா குமாரசுவாமியிடம் “இன்னர் சிற்றி பிரஸ்” கேட்டதற்கு, “இந்த விவகாரத்தை உறுப்பு நாடுகளில் ஒன்று கையில் எடுத்தால் அதனடிப்படையில் பொதுச் செயலாளர் நடவடிக்கை எடுப்பார்” என்று தெரிவித்தார்.

அதேவேளை, எந்த ஒரு சபையிலும் இலங்கைப் பிரச்சினை பற்றிய விவகாரம் விவாதத்துக்கு வந்தால், தான் ஒரு இலங்கையர் என்ற வகையில் அதிலிருந்து தள்ளியே இருப்பார் என்றும் ராதிகா கூறினார்.

முந்தைய செய்திஐ.நா நிபுணர் குழு அறிக்கை – புதுடில்லி மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்
அடுத்த செய்தி“போபால் தீர்ப்பு மறுபரிசீலனை இல்லை”