இறுதிக்கட்ட போரின் மேற்குலகின் பங்கு: விக்கி லீக்ஸ் அதிரடித்தகவல் !

33

இறுதிக்கட்டப் போரின் போது விடுதலைப்புலிகளுடனான போரினை முடிவுக்கு கொண்டுவருவதற்கு மேற்குலக இராஜதந்திரிகள் எவ்வாறு முனைப்புடன் செயற்பட்டனர் என்பது தொடர்பான 38 ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சினால் கசிந்த விடயங்களையும் விக்கலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

இதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

அரசாங்கப் படைகள் அதே தீவிரத்தில் போரைத் தொடருமானால் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் பலியாக நேரிடும் எனவும், அது அனைத்துலகின் கண்டனங்களுக்கும் போர் மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கும் இட்டுச் செல்லுமென றொபர்ட் ஓ பிளேக் இலங்கையின் அன்றைய வெளியுறவு அமைச்சருடனான சந்திப்பின் போது 2009 மார்ச் மாதம் எச்சரித்துள்ளார். அதேவேளை போரில் விடுதலைப் புலிகளின் தோல்வி உறுதிசெய்யப்பட்டு விட்டதாகவும் அழிவு ஏற்படுவதற்கு முன்னர் சரணடையுமாறு விடுதலைப் புலிகளின் தலைமையுடன் தொடர்புகளைக் கொண்டிருந்த ஒரேயொரு மேற்குலக நாடான நோர்வே இராஜதந்திரிகள் விடுதலைப்புலிகளிடம் எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தனர். ஆனால் விடுதலைப்புலிகள் அதற்குச் செவிசாய்க்கவில்லை.

இரத்த ஆற்றைத் தடுப்பதற்கு நாங்கள் முழுமூச்சாகச் செயற்பட்டோம். எங்களால் முடிந்ததைச் செய்ததாக நாம் உணர்கின்றோம். எனினும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதை பார்க்கும்போது விரக்தியாக இருந்தது என்று இலங்கைக்கான அன்றைய நோர்வே தூதுவர் டோர் ஹெட்ரம் தெரிவித்துள்ளார். 2009 மே மாதம் போர் வலயத்திற்குள் பொதுமக்கள் எவருமே இல்லை என இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது. அந்தக் கூற்று உண்மையல்ல என்பதையும் பல்லாயிரக்கணக்கில் பொதுமக்கள் உயிராபத்திற்குள் சிக்கியிருப்பதையும் எடுத்துரைக்கும் பல்வேறு அறிக்கைகள் அமெரிக்கக் தூதுவருக்குக் கிடைத்துள்ளன. அழிவுகளைத் தடுக்கும் நோக்கில் இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் பிளேக் தொடர்பு கொண்டுள்ளார்.

காயப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்களை வெளியில் எடுத்து வருவதற்கான அனுமதியை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திற்கு வழங்க முடியாது என பசில் ராஜபக்ஸ பிளேக்கிடம் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் சரணடைவதற்கு தயாராக இருப்பதாகவும் செஞ்சிலுவைச் சங்கத்தின் உலங்கு வானூர்திகளை அனுப்புமாறு கோத்தபாய ராஜபக்ஸவிடம் கோரியபோது நாம் அதற்கான கட்டத்தை கடந்துவிட்டோம் என்று அவர் பதிலளித்துள்ளார். அழிவைத் தடுப்பது தொடர்பாக கொழும்பிலிருந்த இராஜதந்திரிகள் கொண்டிருந்த கருத்தினையே உலகெங்கும் பலரும் கொண்டிருந்தனர். இவர்களில் நோர்வே வெளியுறவு அமைச்சகத்தின் தலைவர் ஜான் எக்லண்டும் ஒருவராவார்.

விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவலை நோர்வேயின் Aftenposten தொகுத்து வெளியிட்டுள்ளது.

5 பெப்ரவரி 2009 :
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு ஏற்படுத்துவது கடினமாகி வருவதாக இலங்கைக்கான நோர்வே தூதுவர் டோர் ஹெட்ரம் அமெரிக்க இராஜதந்திரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.

5 மார்ச் 2009 :

விடுதலைப் புலிகள் தாம் முறியடிக்கப்பட்டுவிட்டதை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை சரணடைவினை ஒரு தெரிவாக ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை. பொது மக்கள் தங்கியுள்ள இடங்களை நோக்கி இலங்கைப் படைகள் ஆட்டிலறி தாக்குதல்களை மேற்கொள்வதை பசில் ராஜபக்ஸ ஆமோதிக்கிறார் போன்ற தகவல்களை டோர் ஹெட்ரம் அமெரிக்க அதிகாரிகளுக்கு தெரிவிக்கின்றார்.

19 மார்ச் 2009 :
அரசாங்கம் பல்லாயிரக் கணக்கான பொதுமக்களை பலியாக்க முனைவதாகவும் அவ்வாறு நிகழுமானால் அனைத்துலக கண்டனங்களுக்கும் போர் மீறல் குற்றச்சாட்டுகளுக்கும் அது இட்டுச் செல்லும் என அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட் பிளேக் இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை எச்சரிக்கிறார்.

27 ஏப்ரல் 2009 :
இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லாகம இணைத் தலைமை நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் ஆகிய நாடுகளை சந்திப்பதற்கான அழைப்பினை விடுக்கிறார்.
இணைத்தலைமை நாடுகள் அங்கம் வகிக்கும் நோர்வே அழைக்கப்படவில்லை. இணைத் தலைமை நாடுகளில் ஒன்றாக இனி நோர்வே பார்க்கப்படமாட்டாது என போகொல்லாகம தெரிவித்தார். ஏனைய மூன்று நாடுகளின் கடும் எதிர்ப்புக்குப் பின்னர் தனது நிலைப் பாட்டை மாற்றுவதாக அவர் கூறினார்.

5 மே 2009 :
செய்மதி மூலம் பெறப்பட்ட ஒளிப்படங்கள் மகிந்த ராஜபக்ஸவிற்கு அமெரிக்காவினால் காட்டப்படுகின்றது.
போர்க்கள நிலைமை கள் தொடர்பாக தன்னைவிட அமெரிக்காவுக்கு அதிக தகவல்கள் தெரிந்திருப்பதாக மகிந்த ராஜபக்ஸ ஒப்புக்கொள்கிறார். அவரது ஜெனரல்களால் மேற்கொள்ளப்படும் படைநடவடிக் கைகள் தொடர்பாக ராஜபக்ஸவிற்கு எந்தளவுக்கு தெரியும் என அமெரிக்க ராஜதந்திரிகள் மத்தியில் கேள்வி எழுகின்றது.

7 மே 2009 :
தனது நேரத்தின் 60 விழுக் காட்டினை இலங்கை விவகாரங்களுக்கு செலவிடுவதாக பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபான்ட் தெரிவிக்கின்றார்.

13 மே 2009 :
இலங்கை அரசாங்கத்தை பொய்யர்கள் எனக் கூறிய மிலிப்பான்ட் தமிழ் பொதுமக்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு எதிராக அனைத்துலக சமூகம் குரல் எழுப்ப வேண்டும் என்கிறார்.

13 மே 2009 :
இலங்கை விவகாரத்தில் உரிய நடவடிக்கைகளை ஐ.நா. பாதுகாப்பு அவை மேற்கொள்ளாதுவிடின் அது ஒரு வரலாற்றுத்தவறு என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்துகின்றது.
பாதுகாப்பு அவையின் ஒரு அமர்வில் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகியன தீர் மானம் நிறைவேற்ற முயன்றபோது சீன மற் றும் ரஷ்யா எதிர்க்கிறது.

15 மே 2009 :
போர்ப்பகுதியில் படைத் துறைத்தலைமை மேற்கொள்ளும் நடவடிக் கைகள் தொடர்பாக மகிந்த ராஜபக்ஸ, பசில் ராஜபக்ஸ மற்றும் கோத்தபாய ராஜபக்ஸ ஆகியோருக்கு சரியான முறையில் அறிவிக்கப்படுகிறதா என்பது தொடர்பாக இந்திய வெளியுறவு ஆலோசகர் சிவசங்கர் மேனன் சந்தேகம் கொள்கிறார்.

17 மே 2009 :
பேரழிவைத் தடுக்கும் நோக்கில் இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு பிளேக் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டார்.
காயப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்களை வெளியில் எடுத்து வருவதற்கான அனுமதி அனைத்துலக செஞ் சிலுவைச் சங்கத்திற்கு வழங்க முடியாது என ஜனாதிபதியின் ஆலோகரும் அவரது சகோதரருமான பசில் ராஜபக்ஸ பிளேக்கிடம் தெரிவித்துள்ளார்.

26 மே 2009 :
ரொபேர்ட் ஓ பிளேக் இலங்கையிலிருந்து விடைபெறுகிறார். சமாதானத்தை வெல்லுமாறு தனது இறுதி வேண்டுதலில் அரசாங்கத்திற்கு வலியுறுத்துகின்றார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவர்கள் சரணடையச் சென்றபோது சரணடைவை உறுதிப்படுத்த எதையுமே செய்யவில்லை என வெளியுறவு அரசியல் ஆலோசகர் பாலித ஹோகன்ன முன்னர் தெரிவித்தார். ஆனால் பிறிறொரு சந்தர்ப்பத்தில் அதற்கு முரணாக ஹோகன்ன கூறியமையை பிளேக் கவனத்தில் எடுத்துள்ளார்.

27 மே 2009 :
ஐக்கிய நாடுகளின் அவையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார். இடம் பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டி ருந்த முகாம்களின் நிலைமைகள் மிக மோசமாக உள்ளதாக அவர் கூறுகிறார்.

01 யூன் 2009 :
அடுத்த ஐந்து ஆண்டு களில் படைத்துறை ஆளணிகளை இரட்டிப் பாக்கும் திட்டத்தினை அரசாங்கம் கொண்டி ருப்பதாக பாதுகாப்பு அமைச்சகத்தின் இரகசிய ஆவணத்திலிருந்து தெரியவருகின்றது.

15 யூலை 2009 :

அனைத்துலக மனி தாபிமான சட்டங்களை இலங்கை அரச படை கள் கடுமையாக மீறியதாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்தது. பொது மக்களுடன் கலந்திருந்ததாக விடுதலைப் புலிகள் கண்டிக்கப்படுகின்றனர். ஆனால் புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தினரா என்பது தொடர்பாக முடிபெடுப்பது கடினம் என செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்தது.

செஞ்சிலுவைச்சங்கம் உட்பட்ட ஏனைய தொண்டு நிறுவனங்களை காயப்பட்டவர்களுக்கு மருந்து வழங்கும் மற்றும் குருதி செலுத்தும் பணிகளை முன்னெடுக்க விடாது அரசாங்கம் தடுத்துள்ளது. எனவே இறந்த சிறுவர்களின் தொகையை கணக்கிடுவதை தாம் கைவிட்டதாக செஞ்சிலு வைச் சங்கத்தின் தெற்காசியத் தலைவர் கூறுகிறார்.

31 ஓகஸ்ட் 2009 :

அமெரிக்க வெளியு றவு அமைச்சகத்தைச் சேர்ந்த போர்க்குற்றங் களுக்கான பொறுப்பதிகாரி கிளின் வில்லி யம்சனுக்கும் நோர்வேக்கும் இடையில் ஒஸ்லோவில் சந்திப்பு நிகழ்கிறது.

போர்ப்பகுதியில் அமெரிக்காவின் பிரசன்னம் இல்லாதிருந்தமையால் போர் மீறல்கள் தொடர்பான தடயங்கள்-சாட்சியங்களை பெறுவதில் சிக்கல்கள் இருப்பதாகவும் கூறிய கிளின் வில்லியம்சன் இறுதி நாளில் நடந்தவை தொடர்பான தகவல்களை நோர்வேயிடம் கேட்டிருந்தார்.
விடுதலைப் புலிகளின் அரசியல் தலைமை மீதான கொலைகள் சந்தேகத்திற்கிடமானவை என நோர்வே இராஜ தந்திரிகள் தெரிவித்துள்ளனர்.

18 செப்ரம்பர் 2009 :
அமெரிக்காவின் நிலைப்பாடு தொடர்பாக தான் குழப்பம் அடைந்துள்ளதாக மகிந்த ராஜபக்ஸ விசனம் கொள்கிறார். பயங்கரவாதத்தை ஒழிக்குமாறு முதலில் கூறிய அமெரிக்கா, தான் அதைச் செய்து முடித்துள்ள போது விமர்சிப்பதாகவும் அமெரிக்க இராஜதந்திரிகளிடம் ராஜபக்ஸ கூறுகிறார்.

26 ஓக்டோபர் 2009 :
போர் மீறல்கள் தொடர்பான அமெரிக்க செனட் அவையின் அறிக்கையைப் பெறுவதற்கு இலங்கை அர சாங்கத்தின் எந்தவொரு பிரதிநிதியும் முன் வரவில்லை.

17 டிசம்பர் 2009:
மகிந்த ராஜபக்ஸ நாட்டை தவறான பாதையில் இட்டுச்சென்றுவிட்டதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க குற்றம் சாட்டுகிறார்.

ராஜபக்ஸ குடும்பத்தினை படிப்பறிவற்ற � பண்பாடற்ற பாதகர்கள் என வர்ணிக்கிறார். நாட் டின் அரசியல் காலநிலை பழிவாங்கல் அச் சுறுத்தல் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளதாகவும் எவருமே அரசாங்கத்தை விமர்சிக்கும் நிலையில் இல்லை எனவும் கவலை தெரிவிக்கின்றார்.

2 பெப்ரவரி 2010 :
சரணடைய முனைந்த போது விடுதலைப்புலிகளின் அரசியல் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டதான குற்றச் சாட்டு பொய்யானது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவிக்கின்றார். போன்ற தகவல்களை Aftenposten தொகுத்து வழங்கியுள்ளது.

நன்றி :தமிழ் சி.என்.என்

முந்தைய செய்திஇலங்கையில் நடைபெற்ற மனிதஉரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க ஆதரவு – பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சகம்.
அடுத்த செய்திSUMMMARY OF CONVENTION ON UN REPORT ON SRI LANKA – New Delhi