விழுப்புரம் அருகே இறந்த ஆதித்தொல்குடி சமூகத்தினரின் உடலைப் புதைக்க எதிர்ப்புத் தெரிவிப்பதா? – சீமான் கண்டனம்

97

விழுப்புரம் அருகே இறந்த ஆதித்தொல்குடி சமூகத்தினரின் உடலைப் புதைக்க எதிர்ப்புத் தெரிவிப்பதா? – சீமான் கண்டனம்

விழுப்புரம் அருகே ஆதித்தொல்குடியைச் சேர்ந்த அம்மா அமுதா அவர்களது இறந்த உடலைப் புதைக்க இடம்தராத அந்த ஊரைச் சேர்ந்த ஒரு சாராரைக் கண்டித்தும், நிலையான இடுகாடு அமைத்துத் தர வலியுறுத்தியும் இறந்தவரின் உடலை வைத்துக்கொண்டு, மூன்று நாட்களாக அவரது உறவினர்கள் நடத்தி வரும் அறப்போராட்டம் குறித்தான செய்தியறிந்து பெரும் வேதனையடைந்தேன். அப்பகுதியைச் சேர்ந்த கோட்டாட்சியர் உடலைப் புதைக்க இடமளித்தும், அவ்விடத்திலும் புதைக்கவிடாமல் எதிர்ப்புத் தெரிவிப்பது கடும் கண்டனத்திற்குரியது.

நாகரீகமும், தொழில்நுட்பமும் வளர்ந்துள்ள 21ஆம் நூற்றாண்டிலும் இடுகாட்டில் சாதி பார்த்து, புதைக்க இடமளிக்க அனுமதி மறுக்கும் சமூகத்தின் அவல நிலைகண்டு வெட்கித் தலைகுனிகிறேன். சாதியையும், சாதியின் பெயரால் நடந்தேறும் தீண்டாமைக்கொடுமைகளையும் எதன்பொருட்டும் ஏற்க முடியாது. இறந்தவரின் உடலைப் புதைக்க அனுமதிகேட்டு மூன்று நாட்களாகப் போராடி வரும் அம்மக்களின் கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டியது அரசின் தார்மீகக்கடமையாகும்.

ஆகவே, இவ்விவகாரத்தில் திமுக அரசு உடனடியாகத் தலையிட்டு, இறந்துபோன அம்மா அமுதாவின் உடலை நல்லடக்கம் செய்ய உரிய ஏற்பாடுகளையும், பாதுகாப்பினையும் செய்துதர வேண்டுமெனவும், போராடிவரும் ஆதித்தொல்குடி சமூகத்தினருக்கு நிரந்தரமான இடுகாட்டினை ஏற்படுத்தித் தர தகுந்த முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி