இனமான உணர்வோடு ஒன்றுகூடுவோம்!

484

இனமான உணர்வோடு ஒன்றுகூடுவோம்!

13 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாட்களில் ஈழப்பெருநிலத்தில் இலட்சக்கணக்கில் இனப்படுகொலை செய்யப்பட்ட நம் உறவுகளை நினைவுகூரவும், வீழ்ந்த இடத்திலிருந்து மீள் எழுச்சிப்பெற்று, அவர்கள் விட்டுச்சென்ற தாயக இலட்சியக் கனவினை தொடர்ந்து முன்னெடுத்து வெல்லவும், நாளை மே 18 அன்று சென்னை – பூவிருந்தவல்லியில் நடைபெறவிருக்கும் மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டத்திற்கு வருகை தரும் என் அன்பிற்கினிய தம்பி-தங்கைகள், பெருமதிப்பிற்குரிய பெற்றோர்கள், உயிர்க்கினிய உறவுகள் கவனத்திற்கு..,

தமிழ்நாட்டின் சின்னஞ்சிறு கிராமங்கள் முதல் பெரிய நகரங்கள் வரை ஒவ்வொரு பகுதியிலிருந்தும் பொதுக்கூட்டத்திற்கு வருகை தரும் பொழுதும், கூட்டம் முடித்துவிட்டு, இரவு திரும்பிச் செல்லும்போதும் மிகவும் பாதுகாப்பாகப் பயணிக்க உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இருசக்கர வாகனங்களில் பயணிக்கும்போது தலைக்கவசம் அணிந்தும், நான்கு சக்கர வாகனங்களில் பயணிக்கும்போது இடவார் அணிந்தும், மிதமான வேகத்தில், சாலைவிதிகளை முறையாகப் பின்பற்றியும் பயணியுங்கள். குறிப்பாக, தென் மாவட்டங்களிலிருந்து பங்கேற்கும் உறவுகள் இடையிடையே போதிய ஓய்வெடுத்துப் பயணத்தைத் தொடர அன்புடன் கோருகிறேன். ஏனென்றால் நமது பாதுகாப்பு என்பது நாட்டின் பாதுகாப்பு மட்டுமல்ல, நமது இனத்தின், மொழியின், அதன் மேன்மைமிக்க உரிமையின் பாதுகாப்பு என்பதை நினைவில்கொண்டு நீங்கள் அனைவரும் மிகுந்த பொறுப்புடன் செயலாற்ற வேண்டுமாய் உரிமையுடன் வேண்டுகிறேன்.

அதுமட்டுமின்றி, தற்போது சென்னை புறநகர் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் உறவுகள் மாற்று உடை, தொப்பி, கைபேசி கவசப்பை ஆகியவற்றை மறக்காமல் எடுத்து வாருங்கள். ஈழத்தாயகத்தில் குண்டுமழைக்கே அஞ்சாத நாம், சாதாரண குளிர் மழைக்கா அஞ்சா போகிறோம்? எனவே இயற்கை இடர்களை கருத்தில் கொள்ளாமல் வரலாறு காணாத வகையில் இனவுணர்வோடும் இன விடுதலைக் கனவோடும் பெருந்திரளாக ஒன்றுகூடுவோம்.

உண்மையும், நேர்மையுமாகத் தமிழ் மண்ணிற்கும், மக்களுக்குமான தூய தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுக்கும் நெடும்பயணத்தில் அரசியல் தெளிவோடு என்னோடு உடன்வரும் என் அன்பிற்கினிய தம்பி, தங்கைகள் நமது தலைவர் கற்றுத்தந்த ஒழுக்க நெறியை மனதில் நிறுத்தி, பாதுகாப்பாக வருகை புரிந்து, கட்டுப்பாட்டுடன் கூட்டத்தில் பங்கேற்று, பாதுகாப்பாக உங்கள் வாழ்விடங்களுக்கு மீண்டும் திரும்பினீர்கள் என்ற செய்தியைக் கேட்பதே எனக்கு முழுமையான மன நிறைவையும், மகிழ்வையும் தரும். அதை நீங்கள் அனைவரும் நிறைவேற்றுவீர்கள் என்று முழுமையாக நம்புகிறேன்.

உங்கள் அனைவருக்கும் எனது புரட்சிகர வாழ்த்துகள்!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திசென்னை, மெரீனா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுக்க ‘மே 17’ இயக்கத்தினருக்கு அனுமதியளிக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திவரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு! – பேரறிவாளன் விடுதலை குறித்து சீமான் நெகிழ்ச்சி