மாதந்தோறும் அதிகரிக்கப்படும் எரிகாற்று உருளையின் விலை! ஈவிரக்கமற்றக் கொடுஞ்செயல்! – சீமான் கண்டனம்

133

பாஜக ஆட்சியின் கொடுங்கோல் செயல்பாடுகளால் எரிபொருள், எரிகாற்று உருளையின் விலையேற்றம், வேலைவாய்ப்பின்மை, தொழில் முடக்கம், பணவீக்கம், அத்தியாவசியப்பொருட்களின் விலையுயர்வு என நாட்டின் பொருளாதார நிலை மக்களை நேரிடையாகத் தாக்கி, வாட்டி வதைக்கும் இக்கொடிய நிலையில் மீண்டும் எரிகாற்று உருளையின் விலையை உயர்த்தியிருப்பது ஈவிரக்கமற்றக் கொடுஞ்செயலாகும்.

பொதுத்துறை நிறுவனங்களைக் குத்தகைக்குவிட்டு பொருளீட்டும் இழிநிலைக்கு நாட்டைத் தள்ளிவிட்டு, மக்கள் தோளில் சுமையேற்றி ஒப்பேற்றும் இத்தகைய ஈனச்செயலை நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். தனது கொடுங்கோன்மை ஆட்சி முறையினால் ஒவ்வொரு மாதமும் விலையை உயர்த்தி, நாட்டு மக்களை நாளும் வதைக்கும் பாஜக அரசுக்கு எனது வன்மையானக் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்!