சேலத்தில் காவல்துறை அதிகாரி தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 50 இலட்ச ரூபாய் துயர்துடைப்புத்தொகை வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

567

சேலத்தில் காவல்துறை அதிகாரி தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 50 இலட்ச ரூபாய் துயர்துடைப்புத்தொகை வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகேயுள்ள வெள்ளையம்பட்டியைச் சேர்ந்த முருகேசன் எனும் வாலிபர் மதுபோதையிலிருந்தபோது, காவல்துறை துணை ஆய்வாளர் பெரியசாமி கொடூரமாகத் தாக்கியதில், உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன். எளிய மக்கள் மீது அரச வன்முறையைப் பாய்ச்சும் இதுபோன்ற கொடுஞ்செயல்கள் வன்மையான கண்டனத்திற்குரியது.

மனித மூளையை மழுங்கடித்து, தன் நினைவை இழக்கச் செய்வதோடு மட்டுமல்லாது, உயிரை மெல்ல மெல்ல குடிக்கும் மதுவே சமூகத்தில் ஏற்படும் அத்தனை தீங்குகளுக்கும் முழுமுதற் காரணமாக இருக்கிறது என்பதைக்கூறி, அதனை மூடக்கோரி பல ஆண்டுகளாகப் போராடி வரும் நிலையில், வருமானத்திற்காக மதுக்கடைகளைத் திறந்து வைத்து தமிழ் மக்களைக் குடிநோயாளிகளாக மாற்றும் வஞ்சகச்செயலை அறவுணர்ச்சியற்ற இருபெரும் திராவிடக்கட்சிகளும் வழமையாகச் செய்து வருகின்றன. அதன் நீட்சிதான், தற்போது நடந்திருக்கிற படுகொலை என்பதை மறுப்பதற்கில்லை.

கடந்த காலத்தில் மதுக்கடைகளின் இயக்கத்தைத் தீவிரமாக எதிர்த்த திமுக, தங்களது அரசாட்சியின் கீழ் அதுவும் கொரோனா பேரிடர் காலத்திலும் மதுக்கடைகளை முற்றாகத் திறக்க உத்தரவிட்டிருப்பது பேராபத்தென எச்சரித்தும், அதனைத் துளியும் கவனத்திற்கொள்ளாது அலட்சியப்போக்கோடும், அக்கறையின்மையோடும் மதுக்கடைகளைத் திறந்துவிட்டதன் விளைவாகவே ஒரு உயிர் அநியாயமாகப் பறிபோயிருக்கிறது. நோய்த்தொற்று இல்லாத மாவட்டங்களில் மதுக்கடைகளைத் திறந்துவிட்டால், நோய்த்தொற்று இருக்கும் மாவட்டங்களிலிருந்து குடிநோயாளிகள் பயணப்படக்கூடும் என எச்சரித்திருந்தேன். அதனைப் போலவே, சேலம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குச் சென்று மது அருந்திவிட்டு, திரும்புகையிலேயே இக்கோரச்சம்பவம் அரங்கேறியிருக்கிறது. வருமானத்தை முதன்மை இலக்காகக் கொண்டு நிகழப்போகிற அபாயத்தினை உணராத அரசின் அலட்சியப்போக்கே இப்பச்சைப்படுகொலைக்குக் காரணமாக அமைந்திருக்கிறது காவல்துறையை முறைப்படுத்தாததும், அவர்களுக்கு ஓய்வளிக்காது மனரீதியாக அதிகப்படியான அழுத்தங்களையும், பணிச்சுமைகளையும் அளிப்பதன் விளைவாக அவர்கள் மக்கள் மீது தங்களது ஆத்திரத்தினையும், ஆற்றாமையினையும் காட்ட முனைகிறார்கள். இவ்வாறு காவல்துறைக்கு வழங்கப்பட்டிருக்கும் மக்கள் மீதானக் கட்டற்ற அதிகாரமும், எளிய மக்கள் மீது எப்போதும் ஏவப்படும் அடக்குமுறையும் ஒரு குடும்பத்தினை இன்றைக்கு நிலைகுலையச் செய்திருக்கிறது.

ஆகவே, இவ்விவகாரத்தில் காவல்துறையினரின் தாக்குதலினால் உயிரிழந்த முருகேசனின் கொலைக்குக் காரணமான காவல்துறை துணை ஆய்வாளர் பெரியசாமியை மட்டுமல்லாது அதற்கு உடந்தையாக இருந்த காவல்துறை அதிகாரிகள் அத்தனை பேர் மீதும் துறைரீதியாகவும், சட்டப்படியாகவும் நடவடிக்கை எடுத்துத் தக்க தண்டனை அளிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டுமெனவும், உயிரிழந்த முருகேசனின் குடும்பத்திற்கு 50 இலட்ச ரூபாய் துயர்துடைப்புத்தொகை வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதிருச்சி மாநகர் – மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திஇராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகே பொதுக்கிணற்றின் பக்கவாட்டில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு சிறுவன் சுகனேசு உயிரிழக்க காரணமாக இருந்த அதிகாரிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்