தாத்தா இரட்டைமலை சீனிவாசன் 75ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு | செய்தியாளர் சந்திப்பு

385

பெற்றோர்களையும் மாணவர்களையும் தனியார் கல்விக்கூடங்களை நோக்கி படையெடுக்கவே புதிய கல்விக்கொள்கை வழிவகுக்கும்! – சீமான் எச்சரிக்கை | நாம் தமிழர் கட்சி

சமூகநீதிப் போராளி நமது தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 75ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு இன்று 18-09-2020 காலை 11 மணியளவில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மலர் வணக்கம் செலுத்தினார்.

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சீமான் அவர்கள் கூறியதாவது,

பிறப்பின் வழியே உயர்ந்தவன், தாழ்ந்தவன் எனப் பேதம் பாராட்டுகிற, வேற்றுமைப் போற்றுகிற கோட்பாட்டுக்கு எதிராக ஒரு மாற்று வழியை உருவாக்கிக் கொள்ளாதவரை நமக்கு விடுதலை இல்லை என்று போதித்த புரட்சியாளர் எங்கள் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் நினைவு நாள் இன்று. அவர் அண்ணல் அம்பேத்கருக்கும் முன்னவர். பறையர் என்று யார் கேட்டாலும், நான்தான் பறையனென்று எழுந்து நில்; எச்சொல் இழிசொல்லென்று உன்னை நோக்கி வீசப்படுகிறதோ அச்சொல்லை எழுச்சிச்சொல்லாக மாற்றாதவரை விடுதலை இல்லை என்று கற்பித்தவர் தாத்தா இரட்டைமலை சீனிவாசன்.

ஒடுக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டு ஆழ்தளத்தில் அழுத்தி வைக்கப்பட்டிருக்கிற அடிமைத் தமிழ்ச்சமூகத்தின் விடுதலைக்காகப் புரட்சி செய்த போராட்டக்காரர். மனித குலத்தின் எதிரிகளாக இருக்கிற சாதி, மத உணர்வுகளைப் பின்னுக்குத் தள்ளி மானுடச்சமூகம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். குறிப்பாக, தமிழின மக்கள் ஓர்மைப்பட்டு வலிமைப்பெற வேண்டும் எனப் போராடியவர். அவர் வழியிலே சாதி, மதப் பாகுபாடற்ற சமநிலைச்சமூகம் அமையப் பாடுபட்டு வருகிற தமிழ்ப்பிள்ளைகள் நாங்கள் தாத்தாவின் கனவினை நிறைவேற்ற இந்நாளில் உறுதியேற்கிறோம். அவருக்குப் பெருமிதத்தோடு நாம் தமிழர் கட்சி புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறது.

‘நீட்’ தேர்வை மாநில அரசால் தடுக்க முடியும். நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் இருந்தாலும் நாங்கள் மக்கள் மன்றத்தில் அரசியல் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்போம். அமைப்புகள், கட்சிகள் போராடுவதைத் தாண்டி அரசு இதில் போராடினால் இந்தப் போராட்டம் பெரிய எழுச்சியை ஏற்படுத்த முடியும். இதற்கு ஒரு முடிவு காண முடியும். இல்லையென்றால் நம் பிள்ளைகளின் உயிரிழப்பை நம்மால் தடுக்க முடியாது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ஒழிப்போம் என்கிறது திமுக. யாரோடு சேர்ந்து ஒழிப்பீர்கள்? நீட் தேர்வை வரவேற்கிறோம் என்று கூறும் காங்கிரசோடு சேர்ந்தா? தற்போது ஒரு கொதிநிலை இருக்கிறது, இளைஞர்கள், மாணவர்களிடம் அரசின் மீது வெறுப்புணர்வும் பெற்றோர்களிடம் மனக்காயமும் இருக்கிறது அதைத் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொள்ளவேண்டும் என்கிற அரசியல் இலாபத்திற்காகப் பேசுகிறார்கள். உண்மையில் உளச்சான்றோடு பார்த்தால் திமுக-காங்கிரஸ் இதைப்பற்றிப் பேசவே கூடாது; அமைதியாகத் தான் இருக்க வேண்டும். ஏனென்றால் அதைப்பற்றிப் பேசுவதற்கான அருகதை, தகுதி, நேர்மை எதுவுமே அவர்களுக்கு இல்லை.

இந்தி திணிப்பைத்தான் தி.மு.க. எதிர்க்கிறதே தவிர மொழியை அல்ல என்கிறார்கள். இந்தியை ஏற்கிறோம் எதிர்க்கிறோம் என்பதல்ல; உங்களுடைய மொழிக்கொள்கை என்ன? அதில் உறுதியாக இருக்கிறீர்களோ? கல்வி என்பது மாநில உரிமை; அதை மீட்பதே தீர்வாகும். இந்தியை ஏற்காத மாநிலங்களில் இந்தியைத் திணிக்க மாட்டோம் என்றார்கள்; ஆனால் இந்தி திணிக்கப்படாத இடமே இல்லை. பல இடங்களில் சாலைகளில் உள்ள மைல்கற்களில், மத்திய அரசு அலுவலகங்களில், சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரை தொடர்வண்டி நிலையங்களில் ஆங்கிலம் மற்றும் இந்தி மட்டுமே உள்ளது. தமிழ் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலை எதனால் வந்தது என்று பார்த்தால், யார் இந்தியைத் திணித்தார்களோ கட்டாயப்படுத்தினார்களோ அவர்களை எதிர்த்து ஆட்சிக்கு வந்தபிறகு அரசியல் லாபத்திற்காகத் தேர்தல் வெற்றிக்காக அவர்களுடனே கூட்டணி வைத்தது தான் என்ற உண்மை புரியும். மாநில தன்னாட்சியை முழங்கியவர்கள் மாநில தன்னாட்சியைப் பறித்துக்கொண்டு திரும்பத்தர மறுத்தவர்களுடனே கூட்டணி வைத்ததும் மாநில உரிமைகள் எந்த எதிர்ப்புமின்றி மொத்தமாகப் பறிபோனது என்பதே மறுக்கவியலா உண்மை.

நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் எத்தனை உயிர்கள் பறிபோயிருக்கும் இந்நிலையில் புதிய கல்விக்கொள்கை வந்தால் 3,5 மற்றும் 8 ஆம் வகுப்பு பிஞ்சு குழந்தைகள் பொதுத்தேர்வுகளை எவ்வாறு எதிர்கொள்வார்கள்? தேர்வு அச்சத்தால் மனக்காயம்பட்டு கருகி விழுவார்கள் என்பதை அரசுகள் கவனத்தில் கொள்ளவேண்டும். பள்ளிக்கல்வித்துறை வெளியிடும் 10ஆவது மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண்களுக்கு எந்தப் பயனும் இல்லாத சூழல் நிலவுகிறது. ஒரு மாணவன் 3, 5, 8, 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் திறம்பட எதிர்கொண்டு முதல் தரத்தில் தேர்ச்சிபெற்றால் கூட நீட் தேர்வில் வெற்றிபெறாவிட்டால் மருத்துவப்படிப்பில் சேரமுடியாது என்பதும், அனைத்து வகுப்புகளிலும் குறைந்தப்பட்ச மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிபெற்ற மாணவன் நீட் தேர்வில் வெற்றிபெற்றால் மட்டும் போதும் மருத்துவம் படிக்கத் தகுதியானவன் என்பதும் இந்தக் கோட்பாடுகள் எத்தகைய கேவலமானது என்பதை உணர்த்தும். அதனால் தான் அதனை ஒழிக்கப் போராடுகிறோம். ஏற்கனவே கல்வியும் மருத்துவமும் தனியார்மயமாகிக்கொண்டிருக்கின்ற வேளையில் இப்புதிய கல்விக்கொள்கை, இயல்பாகவே அனைத்து பொதுத்தேர்வுகளையும் மாணவர்கள் எதிர்கொள்ள அரசு கல்விக்கூடங்களை விடத் தனியார் கல்விக்கூடங்களே சரியானது என்ற எண்ணத்தைப் பெற்றோர்கள் மனதில் விதைத்து அவர்களைத் தனியார் கல்விக்கூடங்களை நோக்கி படையெடுக்கவே வழிவகுக்கும்.

[WRGF id=103556]