தன்னாட்சியையும், தன்னுரிமையையும் நிலைநாட்டத் தேசிய இனங்கள் ஒன்றாய் சங்கமிப்போம்! – சீமான் அழைப்பு

35

சீக்கிய இன மக்களின் இனப்படுகொலை நாளை நினைவுகூர்ந்து வல்லாதிக்க உணர்வுக்கு எதிராகத் தன்னாட்சியையும், தன்னுரிமையையும் நிலைநாட்டத் தேசிய இனங்கள் ஒன்றாய் சங்கமிப்போம்!

  • சீமான் அழைப்பு

இந்தியாவை ஆண்ட காங்கிரசு கட்சியால் சொந்த நாட்டிலேயே அடித்தும், சுட்டும் கொல்லப்பட்டு சீக்கிய இன மக்கள் இனப்படுகொலைக்கு ஆட்பட்ட நினைவைச்சுமந்து 36 ஆம் ஆண்டில் ஆறா ரணத்தோடு அடியெடுத்து வைக்கிறோம். அம்மையார் இந்திரா காந்தியின் ஆட்சியில் வாக்குச்செலுத்தி ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த இந்நாட்டின் குடிகளையே ‘தேசத்துரோகி’ என விளித்து, ‘பயங்கரவாதிகள்’ எனப் பழிசுமத்தி இராணுவத்தை ஏவி, ஆயுதத்தைக் கொண்டு அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டு சீக்கியர்களைக் கொன்றுகுவித்த கொடுந்துயரை அவ்வளவு எளிதாக எவரும் கடந்து சென்றுவிட முடியாது. அம்மையார் இந்திரா காந்தி ஆபரேஷன் புளூ ஸ்டார் எனும் பெயரில் சீக்கியப் புனிதத் தலங்களைத் தாக்கியழித்ததும், அடக்குமுறையின் உச்சமாக சீக்கியர்களின் உயர் புனிதத்தலமாக இருக்கிற பொற்கோயிலுக்குள் அத்துமீறி நுழைந்து கோரத்தாக்குதலை நிகழ்த்தி அப்பாவி மக்களைக் கொன்றொழித்ததும் இந்திய வரலாற்றின் இருண்டப் பக்கங்களாகும். 30 ஆண்டுகளைக் கடந்தும் அப்படுகொலைக்கு உரிய நீதி கிடைக்காத நிலையில் சீக்கிய இன மக்கள் அப்படுகொலையை நெஞ்சிலேந்தி தங்கள் முன்னோர்களுக்குக் கண்ணீர் வணக்கம் செலுத்தி நினைவுகூர்ந்து வருகின்றனர். ‘யாதும் ஊரே! யாவரும் கேளிர்!’ எனும் உயர்நெறிப் பண்பாட்டுக்குச் சொந்தக்காரர்களாக விளங்கும் தமிழர்கள் நாம் சகதேசிய மக்களாகிய சீக்கியச் சகோதரர்களின் துயரத்தில் பங்கேற்று அவர்களோடு அநீதிக்கெதிராகக் கரம்கோர்க்கிறோம்!

சீக்கியர்களைப் போலவே தமிழர்கள் நாமும் இனப்படுகொலைக்கு ஆட்பட்டு, 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழத்தில் நடைபெற்று வரும் நம்மினப்படுகொலைக்கு நீதிகேட்டு உலகரங்கில் கூக்குரலெழுப்பி வருகிறோம். இத்தோடு, தாய்த்தமிழகத்திலும் பல்வேறு துன்பத்துயரங்களுக்கும், எண்ணிலடங்கா இன்னல்களுக்கும் ஆளும் அரசுகளால் உள்ளாக்கப்பட்டு சொந்த மண்ணிலேயே இரண்டாந்தரக் குடிமக்களாக தமிழ்த்தேசிய இனமக்கள் நடத்தப்பட்டு வருகிறோம்.

இத்தருணத்தில், இனப்படுகொலையின் வலியை உணர்ந்த சீக்கிய இன மக்களும், தமிழ்த்தேசிய மக்களும் ஒன்றிணைந்து நிற்க வேண்டியது காலக்கடமையாகிறது.

ஆகவே, இந்தியாவை ஆளும் பாஜக, காங்கிரசு எனும் இருவேறு கட்சிகளின் ஒற்றைக்கட்சி ஆதிக்கத்தை அடியோடு தகர்க்கவும், தேசிய இனங்களின் தன்னாட்சியையும், தன்னுரிமையையும் நிலைநாட்டவும் இந்திய ஒன்றியத்திலுள்ள அனைத்துத் தேசிய இனங்களும் ஒன்றிணைந்து சங்கமிக்க வேண்டுமென பேரழைப்பு விடுக்கிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி