அறிவிப்பு: வாக்குப்பதிவு எந்திரத்தில் தெளிவற்று அச்சடிக்கப்பட்டுள்ள விவசாயி சின்னம் – சீமான் பத்திரிகையாளர் சந்திப்பு | சென்னை(சேப்பாக்கம்)

55

அறிவிப்பு: வாக்குப்பதிவு எந்திரத்தில் தெளிவற்று அச்சடிக்கப்பட்டுள்ள விவசாயி சின்னம் – சீமான் பத்திரிகையாளர் சந்திப்பு | சென்னை(சேப்பாக்கம்) | நாம் தமிழர் கட்சி

தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. இதில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் சரிபாதி தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடவிருக்கும் அனைத்து வேட்பாளர்களுக்கும் பொதுச் சின்னமாக “விவசாயி(Ganna Kisan)” சின்னத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. சின்னம் கிடைக்கப்பெற்ற நாளில் இருந்து மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் நாம் தமிழர் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் வாக்குப்பதிவு எந்திரத்தில் ஓட்டப்பட்டிருக்கும் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் அடங்கிய பட்டியலில் நாம் தமிழர் கட்சியின் “விவசாயி” சின்னம் மட்டும் மிகவும் சிறியதாகவும், தெளிவற்று மங்கலாக, கண்களுக்கு எளிதில் புலப்படாதவகையில் அச்சடிக்கப்பட்டுள்ளது. இது நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க விரும்பும் முதியவர்கள், படிக்காத பாமரர்கள் மற்றும் கண்பார்வை குறைபாடு உடையவர்களுக்கு விவசாயி சின்னத்தைக் கண்டறிந்து வாக்களிப்பது மிகவும் கடினமானதாக இருக்கும். இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அஞ்சல் மற்றும் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட “விவசாயி(Ganna Kisan)” சின்னத்திற்கும் வாக்குப்பதிவு எந்திரத்தில் அச்சடித்து ஓட்டப்பட்டுள்ள விவசாயி சின்னத்திற்கும் மாபெரும் வேறுபாடு உள்ளது. இது ஆளும் அதிகாரவர்க்கத்திற்கு அடிபணிந்து இந்தியத் தேர்தல் ஆணையம், நாம் தமிழர் கட்சிக்கு செய்துள்ள திட்டமிட்ட சதி. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தொடர்ந்த வழக்கை, வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் அடங்கிய பட்டியல் அச்சடிக்கப்பட்டு ஓட்டப்படும் பணிகள் நிறைவடைந்ததைக் காரணங்காட்டி நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

இந்தியத் தேர்தல் ஆணையமும் நீதிமன்றமும் கைவிட்ட நிலையில், திட்டமிட்டு மழுங்கடிக்கப்பட்டுள்ள நமது விவசாயி சின்னத்தைப் பத்திரிகையாளர்கள் வாயிலாக மக்களிடம் கொண்டுசேர்க்கும் விதமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நாளை 16-04-2019 செவ்வாய்க்கிழமை, நண்பகல் 12 மணியளவில் சென்னை, சேப்பாக்கத்திலுள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் சிறப்புப் பத்திரிகையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவ்வயம் அனைத்து செய்தி ஊடகங்களும் தங்கள் செய்தியாளர்களை அனுப்பி, செய்தி சேகரித்து வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர்

 

முந்தைய செய்திதென் சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை
அடுத்த செய்திபூந்தமல்லி, திருவள்ளூர், திருபெரும்புதூர் வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை