சிறப்பு முகாம்களில் உள்ளோரை விடுதலை செய்க, இல்லையேல் மறியல் போராட்டம் – சீமான்

10

அயல் நாட்டினர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணையின்றி சிறைப்படுத்தியுள்ள தங்களை தமிழக அரசு உடனடியாக விடுவித்து, மற்ற முகாம்களில் உள்ள தங்கள் குடும்பத்தினருடன் வாழ அனுமதிக்க வேண்டும் என்று கோரி, செங்கல்பட்டிலுள்ள சிறப்பு முகாம்களில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 14 பேர் இன்றுடன் 15 நாட்களாக பட்டிணிப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இவர்களில் 9 பேரின் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் செங்கல்பட்டு அரசினர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் அவர்களின் நியாயமான கோரிக்கை பற்றிப் பேச காவல் துறை உயர் அதிகாரிகளோ அல்லது தமிழக அரசின் மறுவாழ்வுத் துறையினரோ அல்லது மாவட்ட நிர்வாகமோ இதுவரை வரவில்லை. மருத்துவமனையில் சேர்க்கபட்டுள்ளவர்களில் ஒருவருக்கு சிறுநீரகத்தில் கல் உருவாகி ஆபத்தான நிலையில் உள்ளார். மற்றொருவர் முதுகுத் தண்டில் ஏற்பட்ட பாதிப்பால் அடிக்கடி இழுப்பு ஏற்படுகிறது. இவருக்கு உடனடியாக உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டியதுள்ளது, ஆனால் செய்யப்படவில்லை.

செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் மீது தமிழக காவல்துறையின் க்யூ பிரிவு தொடர்ந்த வழக்குகளில் இருந்தெல்லாம் அவர்கள் பிணைய விடுதலை பெற்றுள்ளார்கள். அவ்வாறு இருந்தும் அவர்களை அயல்நாட்டினர் சட்டத்தின் கீழ் கால வரையின்றி, நீதிமன்றத்தில் நிறுத்தாமலேயே தடுத்து வைத்திருக்கின்றனர். சட்ட ரீதியாக தங்கள் மீதான வழக்குகளை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தாமல் இப்படி நீண்ட காலமாக தடுத்து வைத்திருப்பதை எதிர்த்தும், தங்களை இதர முகாம்களில் வாழ்ந்துவரும் குடும்பத்தினருடன் வாழ அனுமதிக்குமாறு கோரியும் இவர்கள் பல முறை பட்டிணிப் போராட்டம் நடத்தியுள்ளனர். அரசுடன் பேசி விடுவிப்போம் என்று ஒவ்வொரு முறையும் உறுதிமொழி அளித்து அவர்களின் போராட்டத்தை மாவட்ட நிர்வாகம் முடித்துவிட்டு, பிறகு ஒப்புக்கொண்டதை நிறைவேற்றாமல் தட்டிக்கழித்து வருகிறது. இந்த நிலையில்தான் அவர்கள் மீண்டும் பட்டிணிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குடி நீர் உள்ளிட்ட போதுமான அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். என்ன காரணத்திற்காக எங்களை தடுத்து வைத்துள்ளீர்கள் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டதற்கும், உரிய பதிலை மாவட்ட நிர்வாகம் தரவில்லை. தமிழ்நாட்டின் முகாம்களில் தஞ்சமடைந்துள்ள ஈழத்து சொந்தங்களை மிரட்டவே இந்த சிறப்பு முகாம்களை தமிழக காவல் துறையின் க்யூ பிரிவினர் பயன்படுத்தி வருகின்றனர். இதைச் சொல்லி மண்டபம் முகாமிலுள்ள, முன்று குழந்தைகளுக்குத் தாயான ஒரு பெண்ணை மிரட்டி, புணர்ச்சிக்கு அழைத்துள்ளனர். தமிழ்நாட்டில் ஆட்சி மாறிய பிறகும் க்யூ பிரிவின் அச்சுறுத்தலும், அராஜகமும் தடையின்றி தொடர்கிறது. வன்னி முள்வேலி முகாம்களில் சிங்கள படையினர் நம் சொந்தங்களை எப்படியெல்லாம் துன்புறுத்துகிறார்களோ அதற்கு சற்றும் குறைவின்றி, இங்கு க்யூ பிரிவு காவலர்கள் அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கேயே இருந்து செத்திருக்கலாம் என்று சொந்துபோய் கூறும் அளவிற்கு க்யூ பிரிவினரின் அராஜகம் தலைவிரித்தாடுகிறது.

ஈழத் தமிழர்கள் அரசியல் சம உரிமை பெறும்வரை போராடுவேன் என்று சட்டப் பேரவையிலேயே தமிழக முதல்வர் கூறினார். ஆனால், இங்குள்ள காவல் துறையினர் சிங்கள இராணுவத்தினருக்கு இணையாக அவர்களை துன்புறுத்துகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டவே இந்த உண்மைகளைக் கூறுகிறோம். எதற்காக சிறப்பு முகாம்? என்பதே எங்களது கேள்வியாகும். அகதிகளாக வந்தவர்களை அயல்நாட்டினர் சட்டத்தின் கீழ் தடுத்து வைப்பது மனித உரிமை பறிப்பல்லவா? சிங்கள அரசின் இனப் படுகொலையில் இருந்து தங்களைக் காத்துக்கொள்ள அகதிகளாக வந்தவர்களை உரிய மரியாதையுடன் பாதுகாப்புடன் நடத்துவது நமது அரசின் கடமையல்லவா? இந்த நாட்டில் அகதிகளாக தஞ்சமடைந்த திபெத்தியர்களுக்கும், பர்மா அகதிகளுக்கும் வழங்கப்படும் சுதந்திரமும், பாதுகாப்பும் ஈழத் தமிழ் சொந்தங்களுக்கு மறுக்கப்படுவது ஏன்?

எனவே, இந்த உண்மைகளையேல்லாம் சீர்தூக்கிப் பார்த்து, சிறப்பு முகாம்களில் உள்ளோர் அனைவரையும் விடுவித்து, மற்ற முகாம்களில் அவர்கள் வாழ அனுமதிக்க வேண்டும் என்று தமிழக முதல்வரை நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது. நம் சொந்தங்களின் நியாயமான கோரிக்கை ஏற்கப்பட்டு அவர்கள் விடுவிக்கப்படாவிட்டால், சிறப்பு முகாம்களின் முன்னால் நாம் தமிழர் கட்சி மறியலில் ஈடுபடும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறது.

முந்தைய செய்தி27 – 06 – 2012 அன்று திருச்சியில் நடந்த “கச்சதீவை மீட்க கோரும் ஆர்பாட்டம்”
அடுத்த செய்திசிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்ட நினைக்கும் கேரளா அரசை கண்டித்து எல்லை முற்றுகை போராட்டம். (படங்கள் இணைப்பு )