தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் வழியில் இன விடுதலைக்காய் பயணிப்போம் – சீமான்

184

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் நினைவு தினத்தை ஒட்டி நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கை

‘உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு” என்னும் உன்னத லட்சியத்தை தம் இறுதி வாழ்நாள் வரை நெஞ்சினில் ஏந்தி தமிழின விடுதலைக்காகவும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் வாழ்நாளை அர்ப்பணித்தவரும் நாம் தமிழர் இயக்கத்தின் நிறுவனருமான தமிழர் தந்தை அய்யா சி.பா.ஆதித்தனாரின் 30 ஆவது ஆண்டு நினைவு நாள் நாளை. இன்னாளில் தமிழர் தந்தை அய்யா சி.பா.ஆதித்தனார் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி தனது வீர வணக்கத்தைச் செலுத்துகிறது.

உலகமெல்லாம் பரந்து வாழும் தமிழரை ஒரே குடையில் இணைக்க வேண்டும், தமிழர் தன்மானத்துடனும் இனமானத்துடனும் தரணியில் வெற்றி நடை போட வேண்டும், தமிழருக்கென்று தனித்தாயகம் காணவேண்டும் என்னும் தீராத தாகம் கொண்டவர் ஐயா ஆதித்தனார் அவர்கள். அதற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர். அந்த உயரிய லட்சியத்தை அடைவதற்காக நாம் தமிழர் இயக்கத்தைத் தொடங்கினார். தமிழ் இனத்திற்காக அரசியலிலும் சமூக நோக்கிலும் தமிழர் தந்தை ஆற்றிய பணிகள் கணக்கிலடங்காது. தமிழனுக்கு ஒரு இன்னல் என்றாலும் தமிழ் மொழிக்கு ஒரு இன்னல் என்றாலும் அதனைத் துணிவுடன் எதிர்த்துப் போராடத் தயங்காதவர் அய்யா ஆதித்தனார் அவர்கள்.

நாம் தமிழர் கட்சியின் சார்பாக 1958 ஆம் ஆண்டு சுதந்திரத் தமிழ்நாடு கோரும் மாநாடு மன்னார்குடியில் தந்தை பெரியாரின் தலைமையில் நடத்தப்பட்ட்து. அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை  நிறைவேற்ற நடைபெற்ற போராட்டத்தின் வாயிலாக தந்தை பெரியாரும் அய்யா ஆதித்தனாரும் 1960 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் நாள் கைது செய்யபட்டு 91 நாட்கள் கோவைச் சிறையில் அடைக்கப் பட்டார்கள். அதைப்போல 1966 ஆம் ஆண்டு நடைபெற்ற விவசாயிகளின் போராட்ட்த்தில் கலந்து கொண்டமைக்காக தமிழர் தந்தை அப்பொழுதைய காங்கிரஸ் அரசால் கைது செய்து கை விலங்கிடப்பட்டு தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். கைதும் சிறைச்சாலையும் அவரது போராட்ட உணர்வையும் தமிழருக்காய் போராடும் அவரது உள்ள உறுதியையும் சிறிதும் குலைக்கவில்லை. தமிழருக்காய் தொடர்ந்து களம் பல கண்டார்.

உயர்தட்டு மக்களிடம் இருந்த பத்திரிக்கை படிக்கும் பழக்கத்தை சாமானிய மக்களுக்கும் கொண்டு போய்ச் சேர்த்ததில் அய்யாவின் பங்கு அளப்பரியது. ஒரு இனத்தின் அடையாளம் மொழி மட்டுமே. ஆகவே அந்த மொழியை கடைக்கோடித் தமிழனுக்கும் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும், அப்பொழுது தான் மொழியை எக்காலத்திலும் எவராலும் அழிக்க முடியாது என்னும்  உயரிய எண்ணத்துடன் தமிழர்களின் அடையாளமான  தினத்தந்தி நாளிதழை 1942 ஆம் ஆண்டில் தொடங்கினார் எந்த நோக்கத்தில் இதழை ஆரம்பித்தாரோ அந்த நோக்கத்தை வெற்றிகரமாக தமிழர் தந்தை நிறைவேற்றினார். அய்யாவின் முயற்சியால் கடைக்கோடித் தமிழனுக்கும் தமிழ் போய்ச் சேர்ந்தது. மேலும் இன்று நாடெங்கிலும் உள்ள மேடையெங்கும் ஒலிக்கும் மாண்புமிகு என்னும் சொல்லை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியவர் தமிழர் தந்தை அவர்கள்.

ஆகவே காசி அனந்தனின் வைர வரிகளான, “காலத்தினால் வந்த ஆதித்தனாருக்கொரு காவியம் செய்து வைப்போம். நீலத்திரைக் கடல் போல் கிளம்பிய நெஞ்சனை வாழ்த்தி வைப்போம், வேலொத்த சொற்கள் முழக்கும் அருந்தமிழ் வீரன் வழி நடப்போம்” என்பதை இந்நாளில் நம் நெஞ்சினில் நிறுத்தி தமிழ் மொழிக்காய் பாடுபட்ட தமிழர் தந்தை ஐயா வழியில் பயணிப்போம்.

முந்தைய செய்திஇந்தியாவை மிரட்டும் இலங்கை – சீனா செல்கிறார் பீரீஸ்
அடுத்த செய்திதமிழர் தந்தை சி.பா ஆதித்தனார் அவர்களின் சிலைக்கு செந்தமிழன் சீமான் அவர்கள் வீரவணக்கம் செலுத்துகிறார்.