மூவரின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற இடைக்கால தடை விதித்தது உயர் நீதிமன்றம்!

30

மூவரின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற சென்னை உயர் நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்தது.

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதை 8 வாரங்களுக்கு நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததை தொடர்ந்து, அவர்களுக்கு வரும் 9-ம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்ற தேதி குறிக்கப்பட்டிருந்தது.

இந்தத் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதை நிறுத்தி வைக்கக் கோரியும், இந்தத் தண்டனையை குறைக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மூவரின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் நேற்று ஏற்றுக் கொண்டது.

இந்த நிலையில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் நாகப்பன், எம்.சத்தியநாராயணன் ஆகியோரை கொண்ட பெஞ்ச் முன்பு இன்று இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்கள் மூவர் சார்பில் பிரபல மூத்த வழக்கறிஞர்கள் ராம்ஜெத் மலானி, காலின் கான்சால்வேஸ், வழக்கறிஞர் வைகை ஆகியோர் ஆஜராகினர்.

ராம் ஜெத்மலானி விவாதம்…

உயர் நீதிமன்றத்தில் ராம் ஜெத்மலானி மனுதாரர் சார்பில் கூறுகையில், “ராஜீவ் காந்தி கொலை வழக்கை பொறுத்தவரை நீதிமன்ற நடவடிக்கைகள் 1999 உடன் முடிவடைந்துவிட்டது. 3 பேர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனுவை 10 நாளில் ஆளுனர் தள்ளுபடி செய்து விட்டார். கருணை மனுவை ஆளுனர் ரத்து செய்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

ஆளுனரின் உத்தரவை ரத்து செய்த உயர் நீதிமன்றம், அவர்களின் கருணை மனுவை மீண்டும் பரிசீலிக்கும்படி உத்தரவிட்டது. இரண்டாவது முறையாக கருணை மனு தாக்கல் செய்யப்பட்டது. 5 மாதத்தில் இது குறித்து முடிவெடுக்கப்பட்டது.

பின்னர் 3 பேரும் 2000-வது ஆண்டில் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பியிருந்தார்கள். 11 ஆண்டு கால தாமதத்திற்கு பின்னர் 27.08.2011-ல் முடிவெடுத்து ஜனாதிபதி கருணை மனுவை நிராகரித்திருக்கிறார்.

இதற்கு இடைப்பட்ட காலத்தில் 5 முறை ஜனாதிபதிக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. இவ்வளவு கால தாமதம் செய்து முடிவெடுப்பது சட்டத்துக்கு முற்றிலும் முறம்பானது. அரசியல் சாசனம் 21-ல் வழங்கப்பட்ட உரிமைகளுக்கு எதிரானது. அந்தச் சட்ட பிரிவின்படி விரைந்து முடிவெடுத்து அறிவிக்க வேண்டும். ஆனால் 11 ஆண்டு காலம் கால தாமதம் செய்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்திருப்பது அரசியல் சட்டத்துக்கு எதிரானது.

11 ஆண்டு கால தாமதத்தால் 3 பேரும் சொல்லொண்ணா துயரத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள். மனதளவிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே ஜனாதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்,” என்று மலானி கூறினார். இதே கருத்தை மற்ற வழக்கறிஞர்களும் வலியுறுத்தினார்கள்.

வழக்கறிஞர் விவாதத்துக்குப் பின்னர் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற நீதிபதிகள் இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும் இதற்கு 8 வார காலத்துக்குள் பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எம்.ரவீந்திரன், தமிழக அரசின் சார்பில் அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணன் ஆகியோர் ஆஜரானார்கள்.

வழக்கு விசாரணையின் போது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ஆகியோர் நீதிமன்றத்தில் இருந்தார்கள்.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை கேட்பதற்காக நீதிமன்றத்திற்கு வெளியே மதிமுக, நாம் தமிழர் கட்சித் தொண்டர்களும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்தார்கள்.

நீதிபதிகளின் உத்தரவு பற்றிய தகவல் கிடைததும், நீதிமன்ற வளாகத்தில் குவிந்த மக்கள் மகிழ்ச்சியில் கோஷங்களை எழுப்பினர்.

முந்தைய செய்திமூவர் தூக்கு தண்டனையை ஆயுளாக குறைக்க வேண்டும்: தமிழக பேரவையில் ஒருமனதாக தீர்மானம்!
அடுத்த செய்திதமிழக சட்டப் பேரவைத் தீர்மானம்: தமிழக முதல்வருக்கு நன்றி