பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க விடாமல் நாம் தமிழர் கட்சியினரைத் தடுத்த முன்னாள் கவுன்சிலர் மற்றும் காவல்துறை – திருமுல்லைவாயில்

101

செய்திக்குறிப்பு: பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க விடாமல் நாம் தமிழர் கட்சியினரைத் தடுத்த முன்னாள் கவுன்சிலர் மற்றும் காவல்துறை! ஆதரவாக நின்ற பொதுமக்கள்! – திருமுல்லைவாயில் | நாம் தமிழர் கட்சி

கடுமையான வெயில் மற்றும் வறட்சி காரணமாக தமிழ்நாடு முழுவதும் தண்ணீர் தட்டுபாடு தலைவிரித்தாடுகிறது. அதுவும் தலைநகர் சென்னையிலும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மக்களின் இன்றியமையாதத் தேவைகளுக்குக் கூட அரசு தரப்பில் போதிய தண்ணீர் வழங்கமுடியாத சூழலில் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப பல தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் தாங்களாகவே முன்வந்து தண்ணீர் கிடைக்கும் புறநகர் பகுதிகளில் உள்ள கிணறு, ஆழ்துளைக் குழாய் போன்றவற்றில் இருந்து டேங்கர் லாரி போன்ற வாகனங்களில் தண்ணீர் நிரப்பிக்கொண்டு வந்து பொதுமக்களின் குறைந்தபட்ச தேவைகளைப் பூர்த்தி செய்துவருகிறார்கள்.

இந்நிலையில் ஆவடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 8வது வட்டம், திருமுல்லைவாயில், சரஸ்வதி நகர் பொதுமக்கள் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டால் அவதியுறுகிறார்கள். அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க நாம் தமிழர் கட்சி சார்பாக ஆவடி தொகுதிச் செயலாளர் நல்லதம்பி, இணைச் செயலாளர் சரவணன், இளைஞர் பாசறை செயலாளர் ராஜேஷ் மற்றும் 8 வது வட்டம் நந்தகுமார், சுற்றுச்சூழல் பாசறை ஆவடி கிழக்கு நகரச் செயலாளர் பிரவீன்குமார் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் நேற்று 16-06-2019 காலை 08 மணியளவில் டேங்கர் லாரியில் 25000 லிட்டர் தண்ணீரை நிரப்பிக்கொண்டு சென்று அப்பகுதி பொதுமக்களுக்கு விநியோகித்தனர். அப்போது தண்ணீர் வண்டியை மறித்த அப்பகுதியைச் சேர்ந்த பலராமன் என்பவர், “நான் தான் இந்தப் பகுதி கவுன்சிலர், என்னைக் கேட்காமல் நீங்கள் எப்படி தண்ணீர் வழங்கலாம்”எங்கள் பகுதியில் உங்கள் கட்சியை வளர்க்கப் பார்க்கிறீர்களா? என்றும் மிரட்டியுள்ளார். (புரட்சி பாரதம் கட்சியைச் சேர்ந்தவர். கடந்தமுறை அதிமுகவின் இரட்டைஇலை சின்னத்தில் நின்று ஆவடி 8வது வட்ட நகரமன்ற தலைவராக வெற்றிபெற்றுள்ளார்). அதற்கு நாம் தமிழர் உறவுகள் நீங்கள் தற்போது கவுன்சிலர் இல்லை; முன்னாள் கவுன்சிலர் தான் என்றும், எங்கள் கட்சி பெயர் பொறித்த மேல்சட்டை தான் உங்களுக்கு பிரச்சினை என்றால் நாங்கள் சட்டையைக் கழற்றிவிட்டு தண்ணீர் விநியோகிக்கிறோம்! மிகுந்த சிரமத்திற்கிடையே தூரத்திலிருந்து பெருஞ்செலவு செய்து தண்ணீர் ஏற்றிக்கொண்டு வந்துள்ளோம்! தண்ணீரைக் கொடுக்காமல் சென்றால் மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அந்த நபர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி காவல்துறையை அங்கு வரவழைத்துள்ளார். அங்குவந்த காவல்துறையினர் தண்ணீர் விநியோகித்த நாம் தமிழர் கட்சி உறவுகளிடம் இது குடிப்பதற்கு உகந்த நீர் என்பதற்கு சான்றிதழ் பெற்றுள்ளீர்களா? தண்ணீர் வண்டிக்கு லைசென்ஸ் உள்ளதா? தண்ணீர் விநியோகம் செய்ய முன் அனுமதி பெற்றுள்ளீர்களா? என்று சரமாரியாக கேள்விகேட்டு விசாரணைக்கு கூட்டிச்செல்வதாகவும் தண்ணீர் ஏற்றிவந்த டேங்கர் லாரியையும் பறிமுதல் செய்வதாகவும் மிரட்டியுள்ளனர். அப்போது அங்கு தண்ணீர் பிடித்துக்கொள்ள வந்த பொதுமக்கள் உதவி செய்ய வந்தவர்களுக்குப் பிரச்சினை ஏற்பட்டதை உணர்ந்து நாம் தமிழர் கட்சியினரையும் டேங்கர் லாரியையும் விடுவிக்க காவல்துறையினரிடம் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள் திரளத் தொடங்கியதும் நிலைமை பெரிதாவதை உணர்ந்த திருமுல்லைவாயில் காவல் கண்காணிப்பாளர், நாம் தமிழர் கட்சியினரிடம் கொண்டுவந்த தண்ணீரை வழங்க அனுமதித்துவிட்டு இனிமேல் தண்ணீர் விநியோகம் செய்யவேண்டுமானால் மூன்று நாட்களுக்கு முன்னதாக முன்அனுமதி பெறவேண்டும் என்று எச்சரித்துவிட்டு சென்றார். பின்னர் அப்பகுதி மக்களுக்கு தண்ணீர் முழுவதுமாக விநியோகம் செய்யப்பட்டது. இதனால் மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் நாம் தமிழர் உறவுகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

 


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

முந்தைய செய்திராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை
அடுத்த செய்திஅறிவிப்பு: சூன்-21, அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் – வள்ளுவர் கோட்டம்