காவல் மக்களுக்கான சேவை | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு 

7828

காவல் மக்களுக்கான சேவை | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு 

குற்றவாளிகளைப் பிடித்துக் கூண்டில் நிறுத்துவதல்ல காவல் துறையின் வேலை; குற்றவாளிகளே உருவாகாத ஒரு சமூகத்தை உருவாக்குவதுதான் காவல்துறையின் வேலை!
— தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்

காவலர்களின் சீர்கேடு

  • காவல்துறை அரசியல்வாதிகளின் ஏவல்துறையாக இருக்கிறது. இந்த நிலை உடனடியாக மாற்றி அமைக்கப்படும். நாம் தமிழர் அரசு, நேர்மையாகப் பணியாற்றுபவர்களுக்குப் பதவி உயர்வில் முன்னுரிமை அளிக்கும். காவல் துறை கம்பீரமும் நம்பிக்கையும் உள்ளதாகவும் மாற்றப்படும்.

காவலர்கள் பற்றாக்குறை

  • 222 பேருக்கு ஒரு காவலர் இருக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மன்றம் வரையறுத்துக் கூறியுள்ளது. ஆனால் தமிழகத்தில் 632 நபர்களுக்கு ஒரு காவலர் என்று இருக்கிறார். நாம் தமிழர் அரசு 200 பேருக்கு ஒரு காவலர் என்று தரத்தை உயர்த்தும். அதற்கேற்பப் புதிய ஊழியர்களைப் பணியில் அமர்த்தும்.

ஏன் அவசியம்

  • டெல்லி – 83,000 காவலர்கள்
  • மும்பை – 45,000 காவலர்கள்
  • கல்கத்தா – 23,000 காவலர்கள்
  • சென்னை – 14,000 காவலர்கள்
  • மற்ற மாநிலத் தலைநகரங்களை ஒப்பிடும்போது சென்னையில் குறைவான காவலர்களே பணியில் இருக்கிறார்கள். மாநிலத் தலைநகரத்தின் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கப் புதிய கட்டமைப்புடன் கூடுதல் ஊழியர்கள் பணிமர்த்தப்படுவார்கள்.

முதன்மையானவர்கள் (வி.ஐ.பி.)

  • தமிழகத்தில் 632 பேருக்கு ஒரு காவலர்தான் இருக்கிறார். ஆனால் (அரசியல் முக்கிய நபர்களுக்கு) ஒரு அரசியல் வி.ஐ.பி.க்கு மூன்று காவலர் என்றிருக்கிறார்கள். இந்த அவலத்தை நாம் தமிழர் அரசு மாற்றும். காவல் என்பது மக்களுக்கான சேவை செய்வதற்கு மட்டுமேதான்.

அதிகப் பணிச்சுமை

  • காவல் நிலையத்தில் சட்டம் -ஒழுங்குப் பாதுகாப்பிற்கு என்று இருக்கும் காவலர்கள் தான், குற்றங்களைத் தடுக்க வேண்டும். நடந்த குற்றங்களுக்கு விசாரணையை நடத்த வேண்டும். புலனாய்வு தேவை என்றால் அதையும் இவர்களே செய்ய வேண்டும்.

பல மடங்கு வேலை

  • இவ்வளவு வேலைகளுக்கு இடையில் இருக்கும் இந்தக் காவலர்களே தான் அரசு மற்றும் தனியார் பொது நிகழ்ச்சிகளுக்கான பாதுகாப்பு-க் காவலுக்கும் போக வேண்டும். அரசியல்வாதிகளின் நிகழ்ச்சிக்கும் பாதுகாப்பைக் கொடுத்தாக வேண்டும்.

இரண்டு பிரிவு

  • அதனால் பாதுகாப்பு பொது நிகழ்ச்சிகளுக்கான காவல் பிரிவைத் தனியாக அமைக்க வேண்டும். அது தனியாக இயங்க வேண்டும். குற்றத் தடுப்பு நடவடிக்கைகளுக்கான காவல் பிரிவைத் தனி அமைப்பாக இயக்க வேண்டும். காவலர்களின் பணிச் சுமையைக் குறைக்க நாம் தமிழர் அரசு இந்த மாற்றத்தைக் கொண்டு வரும்.

பெண் காவலர்களுக்கு 6 மணி நேர வேலை

மற்ற அரசு ஊழியர்களைப் போல் காவலர்களுக்கும் எட்டு மணி நேர வேலை கட்டாயமாக்கப்படும். பெண் காவலர்களுக்கு ஆறு மணி நேர வேலை சட்டமாக்கப்படும். கூடுதலான காவலர்களை நியமித்து வெற்றிடம் நிரப்பப்படும். இதனால் சுமார் 25,000 பெண் காவலர்ககுப் புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். காவலர்களின் பணிச்சுமை குறையும்.

ஊதிய உயர்வு

  • மத்தியக் காவல் படையில் இருப்பவர்களுக்கு இணையாக மாநிலக் காவல் பணியில் உள்ளவர்களுக்கும் ஊதியம் வழங்கப்படும். வீட்டு வசதிகள் உட்பட மற்ற நலத் திட்டங்கள் அனைத்தும் மத்தியக் காவல் படை ஊழியர்களுக்கு இணையாக வழங்கப்படும்.

அடிப்படை வசதிகள்:

  • காவலர்களுக்கான பழைய குடியிருப்புகள் அனைத்தும் மறு சீரமைப்பு செய்து தரப்படும். தேவையைக் கருதிப் புதிய குடியிருப்புகள் மாவட்டம் தோறும் உருவாக்கித் தரப்படும். அந்தக் குடியிருப்புகளில் வணிக வளாகங்கள், விளையாட்டுத் திடல், உடற் பயிற்சிக் கூடம், மருந்துக் கடைகள் அனைத்தும் அமைக்கப்படும். காவலர்கள் தங்கள் குடும்பத்தோடு இருக்கும் சூழலை உருவாக்கித் தருவோம்.

மத்தியக் காவல் படையில் இருப்பவர்களுக்கு இணையாக மாநிலக் காவல் பணியில் உள்ளவர்களுக்கும் ஊதியம் வழங்கப்படும்.

இடமாற்றம்,- பதவி உயர்வு

துறைசார்ந்த பதவி உயர்வுகள், மற்றும் இடமாற்றங்கள் வெளிப்படைத் தன்மையோடு நடத்தப்படும். நேர்மையான பணியாளர்களுக்குப் பதவி உயர்வில் முன்னுரிமை அளிக்கப்படும். துறைசார்ந்த புகார்கள் உடனுக்குடன் விசாரித்து முடிக்கப்படும். கால தாமதம் இருக்காது.

இராணுவ மருத்துவமனை போல்

காவலர்களின் குடியிருப்புகளிலேயே ஆரம்ப சுகாதார மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும். தவிர இராணுவத்தினருக்குத் தனி மருத்துவமனை இருப்பதைப் போன்று காவல் துறையினருக்கும் தனி மருத்துவ மனைகள் ஏற்படுத்தப்படும். இந்த மருத்துவ மனைகளில் அனைத்து வகை உயர் சிகிச்சைகளும், அறுவை சிகிச்சைகளும் அளிக்கப்படும்.

தனித் தனிப் பிரிவு

சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கும் பிரிவில் உள்ளவர்களே குற்றவழக்குப் புலன் விசாரணைகளிலும் இறங்குகிறார்கள். இந்த முறையை நாம் தமிழர் அரசு மாற்றும்.

அனைத்து வித நிகழ்ச்சிகளுக்குமான பாதுகாப்பை அளிக்கும் பிரிவு தனியாகவும், வழக்குகளுக்குப் புலன் விசாரணை செய்யும் பிரிவு தனியாகவும் உருவாக்கப்படும். இதனால் பணிச்சுமை குறையும். விரைவான புலன் விசாரணைகளும் நடக்கும்.

குற்றத் தடுப்புப் பிரிவு (Preventive Force)

குற்றங்கள் நடந்த பிறகு நடவடிக்கையை எடுப்பதை விடக் குற்றங்களே நடக்காமல் தடுக்க வேண்டும் என்பதே நாம் தமிழர் அரசின் நோக்கம். அதற்காக வேண்டி 50,000 புதிய காவலர்கள் நியமிக்கப்படுவார்கள். இவர்களுக்கு உடல் தகுதி, சீருடை ஏதும் இருக்காது. அறிவுத் திறன் மட்டுமே பயன்படுத்தப்படும்.

மக்களோடு மக்களாக

50,000 புதிய காவலர்களுக்குச் சர்வதேசத் தரத்தில் உளவுப் பயிற்சி அளிக்கப்படும். இந்த ஊழியர்கள் மக்களோடு மக்களாக ஊடுருவியிருப்பார்கள். எங்கெல்லாம் குற்றங்கள் நடக்க வாய்ப்பிருக்கிறது என்பதை அறிந்து தகவலைத் கொடுப்பார்கள்.

தடுப்புக் காவல் படை

உடனே அந்த இடங்களுக்குத் ‘தடுப்புக் காவல் படை’ யின் தனிப்பிரிவு சென்று குற்றங்களைத் தடுத்து நிறுத்தும். இரு பிரிவினருக்கு இடையே சிக்கல் எழுந்திருக்கிறது. அதனால் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது என்ற தகவல் மக்கள் மத்தியில் இருந்தே கிடைத்துவிடும். அதன் பேரில்தான் உடனடித் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படும். இது அனைத்துவிதக் குற்றங்களுக்கும் பொருந்தும். இந்த உளவாளிகள் பற்றிய தகவல் அனைத்தும் கமுக்கமாகவே வைக்கப்படும்.

நண்பன்

ஒவ்வொரு பகுதியிலும் உள்ள காவலர்கள், அந்தப் பகுதி மக்களுடன் மாதம்தோறும் கலந்துரையாடலை நடத்த வேண்டும். உள்ளூர்ப் பிரதிநிதிகளும் அதில் கலந்துகொள்ள வேண்டும். இப்படிக் கலந்துரையாடும் போது அப்பகுதியில் நடக்க உள்ள குற்றங்கள் பற்றிய தகவலும் உடனுக்குடன் கிடைத்துவிடும் காவல்துறை மக்களுக்கு நண்பனாகவும் மாறும்.

சீருடை மாற்றம்

  • இன்று இருக்கும் காக்கி வண்ணத்திலான சீருடையில் மாற்றம் கொண்டுவரப்படும். புதிய நீல வண்ணத்திலான சீருடைகள் வழங்கப்படும். உடை என்பது உளவியல் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியது. அதற்கேற்பவே சீருடையில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது.
  • சொந்த மக்களைப் பாதுகாக்கத்தான் காவல்துறையே தவிர சொந்த மக்கள் மீது எப்போதும் தடியடி நடத்தும் துறையாக இருக்கக்கூடாது என்பதில் நாம் தமிழர் அரசு உறுதியாக இருக்கும்.

இடமாற்றம், பதவி உயர்வு

  • துறைசார்ந்த பதவி உயர்வுகள், இடமாற்றங்கள் வெளிப்படைத் தன்மையோடு நடத்தப்படும். நேர்மையான பணியாளர்களுக்குப் பதவி உயர்வில் முன்னுரிமை அளிக்கப்படும். துறைசார்ந்த புகார்கள் உடனுக்குடன் விசாரித்து முடிக்கப்படும். கால தாமதம் இருக்காது.

கணினிக் கண்காணிப்பில்

  • உளவுத்துறைப் பணிகளைத் தவிர்த்து மற்ற அனைத்தும் வெளிப்படையாக இயங்கும். ஒவ்வொன்றும் ஆவணப்படுத்தப்படும். காவல் நிலையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். காவலர்களுக்கு நவீன சிறியரக கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட சீருடைதான் வழங்கப்படும்.
  • பணி நேரத்தின் போது அவரது செயல்பாடு, விசாரணை முறை அனைத்தும் கணினியில் பதிவாகும்.

காலக்கெடு

  • பாதிப்பிற்குள்ளாகும் பொதுமக்கள் மனு கொடுப்பதும், அதன் மீதான விசாரணகளும், முடிவுகளும் முறைப்படி ஆவணப்படுத்தப்படும். எதிலும் ஒளிவுமறைவு இருக்காது. இதன் மூலம் அப்பாவிகள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்வது முற்றாகத் தடுக்கப்படும். ஒவ்வொரு புகார் மனுமீதும் குறிப்பிட்ட நாள்களுக்குள் தீர்வுகள் கிடைக்க காலக்கெடு வரையறுக்கப்படும்.

தனிப்பயிற்சி

  • பணியமர்வுக்குப் பின்பு அவர்களுக்கு மேலும் தேவையான பயிற்சிகள் வழங்கப்படுவதில்லை. ஆசிரியர்களுக்கு, எப்படியெல்லாம் புதிய வகையில் பாடங்களை போதிக்க வேண்டும் என்று வகுப்புகள் மாதம் தோறும் நடத்தப்படுகிறதோ அப்படி, காவல் துறையினருக்கும் புதிய பயிற்சி வகுப்புகளுக்கான மையம் அமைக்கப்படும்.
  • அந்தப் பயிற்சியில் உலகளவில் ஏற்பட்டுள்ள புதிய புலனாய்வு விசாரணைப்போக்குகள் அனைத்தும் பயிற்றுவிக்கப்படும்.

சொந்த மக்களைப் பாதுகாக்கத்தான் காவல்துறையே தவிர சொந்த மக்கள் மீது எப்போதும் தடியடி நடத்தும் துறையாக இருக்கக்கூடாது என்பதில் நாம் தமிழர் அரசு உறுதியாக இருக்கும்.

பெண் காவலர்கள்

பெண் காவலர்களின் மகப்பேறு உள்ளிட்ட அனைத்து வகை உயர் மருத்துவமும், காவல் துறையினருக்கான தனி மருத்துவமனையில் பெற்றுக்கொள்ளலாம். அதற்கென்று தனிப்பிரிவு உருவாக்கப்படும். மகப்பேற்றுக் காலத்திற்கு முன்பாக 3 மாதமும், மகப்பேற்றுக்குப் பின்பாக 6மாதமும் விடுப்பு அளிக்கப்படும்.

தனிச்சிக்கல்கள்

பெண் காவலர்களின் பணியில் அவர்களுக்கு ஏற்படும் சிக்கல்களில் தனிக் கவனம் செலுத்தப்படும். மேல் அதிகாரிகளால் ஏற்படுத்தப்படும் தேவையற்ற அழுத்தங்கள், பாலியல் சீண்டல்கள் உள்ளிட்ட அனைத்துப் புகார்களின் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கான பாதுகாப்பான சூழ்நிலையை நாம் தமிழர் அரசு வழங்கும்.

அரசியல் தலையீடு இருக்காது

அரசியல்வாதிகளின் விருப்பத்திற்குக் காவல்துறை அதிகாரிகளைப் பணிமாற்றம் செய்வதும், காவல்துறை அதிகாரிகள் அவர்களுக்குக் கீழான ஊழியர்களை முறையற்றுப் பணிமாற்றம் செய்வதும் நாம் தமிழர் அரசில் இருக்காது. ஒரு பணியிடத்தில் குறைந்தது 3 ஆண்டுகள் வேலை செய்வார்கள். தேவையற்ற இடமாற்றம் இருக்காது. அரசியல் தலையீடு இன்றி மிகச் சுதந்திரமாகப் பணியாற்றுவார்கள்.

நவீன உள்கட்டமைப்பு

காவலர்களின் பணியிடத்தில் உள்ள கட்டமைப்புகள் அனைத்தும் நவீனத் தரத்திற்கு உயர்த்தப்படும். ஊர்திகள், தொலைத் தொடர்புச் சாதனங்கள், தடயவியலுக்கான நவீனக் கருவிகள் உள்ளிட்ட அனைத்தும் சர்வதேசத் தரத்திற்கு மாற்றப்படும்.

நடவடிக்கைகள்

பழிவாங்கும் முறைகளில் நடந்துகொள்வது

  • மக்களுக்கு விரோதமாக நடந்து கொள்வது
  • போதிய சாட்சியங்கள் இன்றி வழக்குப் போடுவது,
  • பொய் வழக்குப் போடுவது,
  • விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்வது,
  • இலஞ்சம், ஊழல் ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகும் காவல் துறையினர் மீது குற்றம் சுமத்தப்பட்ட உடன் இடைக்காலப் பணி நீக்கம் செய்யப்படுவர், இக்காலகட்டங்களில் அவர்களுக்கு ஊதியம் மறுக்கப்படும் விசாரணையில் குற்றம் நிருபிக்கப்பட்டால் நிரந்தரப் பணி நீக்கம் செய்யப்படுவர்.

பெண் காவலர்களின் மகப்பேறு உள்ளிட்ட அனைத்து வகை உயர் மருத்துவமும், காவல் துறையினருக்கான தனி மருத்துவமனையில் உருவாக்கப்படும். மகப்பேற்றுக் காலத்திற்கு முன்பாக 3 மாதமும், பின்பாக 6 மாதமும் விடுப்பு அளிக்கப்படும்.

இலஞ்சம், ஊழல் ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகும் காவல் துறையினர் மீது குற்றம் சுமத்தப்பட்ட உடன் இடைக்காலப் பணி நீக்கம் செய்யப்படுவர், இக்காலகட்டங்களில் அவர்களுக்கு ஊதியம் மறுக்கப்படும். விசாரணையில் குற்றம் நிருபிக்கப்பட்டால் நிரந்தரப் பணி நீக்கம் செய்யப்படுவர்.

வாய்ப்பு அளிக்கப்படும்

குற்றங்களில் ஈடுபடும் காவல் துறையினருக்கு என்று தனியாக ‘மனச் சீர்திருத்த மையம்’ ஒன்று தொடங்கப்படும. பணி இடைநீக்கத்திற்கு உள்ளாகும் காவல் துறையினர், அந்த ஒரு மாத காலமும் ‘மனச் சீர்திருத்த வகுப்பில் தினமும் சென்று கலந்து கொள்ள வேண்டும். பயிற்சி பெற்றுக்கொண்டதற்கான சான்றுகளைக் கொண்டு வந்தால் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

நிரந்தரமாகப் பணி நீக்கம்

இரண்டாவது முறையாகக் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி, விசாரணையில் அது நிருபிக்கப்பட்டால் நிரந்தரமாகப் பணி நீக்கம் செய்யப்படுவார்கள். அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த யாருக்கும் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு எந்த அரசுச் சலுகைகளும், உரிமைகளும் வழங்கப்படாது தடுத்து வைக்கப்படும்.

குற்றவாளிகளைக் கண்டுபிடித்தாக வேண்டும்

குற்ற வழக்குகளில் அரசுத் தலையீடு சுத்தமாக இருக்காது. சுதந்திரமான விசாரணையை நடத்தலாம். ஆனால் உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். குற்றம் சாட்டப்பெற்றவர்கள் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டால் வழக்கை அத்தோடு முடித்துக் கொள்ளக் கூடாது.

உண்மையான குற்றவாளிகளைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு அரசு சரியான இழப்பீட்டை வழங்கும். இழப்பீட்டில் பாதித் தொகை, வழக்கை நடத்திய விசாரணை அதிகாரியின் சம்பளத்தில் இருந்தே பிடித்தம் செய்யப்படும்.

உயர் பதவிகளில்

தமிழகக் காவல் துறையில் பணிபுரியும் ‘இந்தியக் காவல் பணி’ (ஐ.பி.எஸ்) அதிகாரிகளில் வேற்று மாநில அதிகாரிகளும் உள்ளனர். அவர்கள் தமிழர்களின் சமூகப் பண்பாட்டுப் பழக்க வழக்கங்களையும் அவர்களின் அரசியல் மற்றும் உளவியல் தன்மைகளையும் புரிந்து கொள்ளக் கூடியவர்களாக இருப்பதில்லை. எனவே தமிழ் மொழி அதிகாரிகள் மட்டுமே அரசின் முக்கிய உச்சப் பதவிகளில் பணியமர்த்தப்படுவார்கள்.

 

மனநல மருத்துவமனை

“சிறைக்கூடம் என்பது குற்றவாளிகளைத் தண்டிக்கும் கொலைக்களம் அன்று. அது மனநல மருத்துவமனை என்று அண்ணல் காந்தி சொல்கிறார்.

  • ஒருவன் கொலை செய்கிறான், அது சட்டப்படி குற்றம். சட்டமே ஒரு கொலை செய்கிறது அது எப்படிச் சரியாகும்?
  • கொலைக்குத் தண்டனை கொலைதான் என்றால் நாடே சுடுகாடாகும். அது நாகரீகமிக்க அறிவார்ந்த சமூகத்தின் செயல் அன்று.
  • தண்டனை என்பது கூடுதல் உழைப்பு. சிறையில் கொடுக்கும் தண்டனையை உற்பத்தியில் செலுத்தி உற்பத்தியைப் பெருக்குவோம்.

அனைவரும் விடுதலை

பத்தாண்டுக்கும் மேலாகத் தண்டனை பெற்றுவரும் அனைவருக்கும் விடுதலை.

  • இலஞ்சம்-ஊழலில் சிக்கிய ஊழியர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள், பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவர்கள், சாதிப் மதப் பெருமைக்கு, கூலிக்குக் கொலைச் செய்பவர்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது.

நில அபகரிப்பு மோசடி

  • அப்பாவி மக்களிடம் ஏமாற்றி அபகரித்துக் கொண்ட நிலங்கள் அனைத்தும் மீட்கப்பட்டு உரியவர்களிடம் கொடுக்கும். அத்தகைய குற்றங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்கப்படும்.

வேண்டாம் மரண தண்டனை

  • எந்த ஒரு குற்றத்திற்கும் தண்டனை வேண்டாம் என்பது அன்று நமது நிலைப்பாடு. தண்டனை மரணமாக இருக்கக்கூடாது என்பதே நமது கொள்கை முடிவு.
  • தண்டனை என்பது ஒருவன் தான் செய்த குற்றத்திற்கு வருந்தித் திருந்தி மறுபடியும் வாழ வாய்ப்பு கொடுப்பதுதான். ஆனால்,‘மரணம்’ என்பது தண்டனை அல்ல. அது ஒரு முடிவு.
  • மரண தண்டனை குற்றம் செய்து மரணித்தவனுக்கு மட்டுமன்று. அவனைப் பெற்றவருக்கும், உடன் பிறந்தோர்க்கும், அவன் மனைவிக்கும், பெற்ற குழந்தைகளுக்கும் தான் அது தண்டனையாக அமைகிறது. எனவேதான் இத்தண்டனையை ஒழிக்க நமது அரசு துடிக்கிறது.

தண்டனை என்பது ஒருவன் தான் செய்த குற்றத்திற்கு வருந்தித் திருந்தி மறுபடியும் வாழ வாய்ப்புக் கொடுப்பதுதான். ஆனால்,‘மரணம்’ என்பது தண்டனை அன்று. அது ஒரு முடிவு.

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: மீண்டும் கட்சியில் இணைப்பு | க.எண்: 2019030027
அடுத்த செய்திஎழுவர் விடுதலை உறுதி | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு