காவல்துறையினருக்கு நவீன தற்காப்பு ஆயுதங்கள் கையளிக்காத அலட்சியப்போக்கே தீரமிக்க காவலர் பூமிநாதன் இழப்பிற்கு காரணம்! – சீமான் வேதனை

68

திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் ஆடு திருடும் கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட செய்தி கடும் அதிர்ச்சியளிக்கிறது. காவல்துறையில் நிலவும் ஆட்கள் பற்றாக்குறை மற்றும் நவீன தற்காப்பு ஆயுதங்கள் கையளிக்காத தமிழ்நாடு அரசின் தொடர் அலட்சியப்போக்கே தீரமிக்க காவலர் இழப்பிற்கு முக்கியக் காரணமாகும்.

இனியாவது, தமிழ்நாடு அரசு விழிப்படைந்து காவல்துறையில் உள்ள குறைபாடுகளை களைவதற்கு சீரிய நடவடிக்கை எடுத்து சீர்படுத்த வேண்டுமென்று தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

அர்ப்பணிப்புணர்வோடு கடமையாற்றி வீரமரணமடைந்த தீரமிக்க காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் அவர்களுக்கு எனது வீரவணக்கம். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், சக காவல்துறையினருக்கும் எனது ஆறுதல்களைத் தெரிவித்து துயரத்தில் பங்கேற்கிறேன்.