‘ஜெய் பீம்’ திரைப்படத்திற்கு எழுந்திருக்கும் சிக்கலையும், தகவல் பிழையால் ஒரு சமூக மக்களிடையே எழுந்திருக்கும் முரணையும் உடன்பட்ட பேச்சுவார்த்தைகளின் மூலம் உடனடியாக தீர்க்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

6445

‘ஜெய் பீம்’ திரைப்படத்திற்கு எழுந்திருக்கும் சிக்கலையும், தகவல் பிழையால் ஒரு சமூக மக்களிடையே எழுந்திருக்கும் முரணையும் உடன்பட்ட பேச்சுவார்த்தைகளின் மூலம் உடனடியாக தீர்க்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

ஒடுக்கப்பட்ட இருளர் சமூக மக்களின் வாழ்வியலைப் பேசும் அரியப்படைப்பாக தமிழ்ச்சமூகத்தால் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிற, ‘ஜெய் பீம்’ திரைப்படம் குறித்து எழுந்திருக்கிற முரண்களையும், கருத்துவேறுபாடுகளையும் அறிந்தேன். தொல்குடிச்சமூகத்தின் வலிகளைப் பேசும் காவியமாகத் திரைப்படத்தைப் படைத்துவிட்டு, அதில் தமிழினத்தின் இன்னொரு பெரிய சமூகத்திற்கு பகைமையையும், காயத்தையும் உருவாக்கும் வகையிலானவற்றை செய்வது படைப்பின் நோக்கத்தையே முழுமையாக சிதைத்துவிடும் பேராபத்தாகும். ஒரு படைப்பு என்பது ஒட்டுமொத்தச் சமூகத்திற்குமானதுதான். அதில் எவரையும் காயப்படுத்துவதோ, மறைமுகமாகச் சீண்டுவதோ ஏற்புடையதாகாது. சமத்துவமும், சமூக நீதியுமே இறுதி இலக்கெனும்போது எல்லோரையும் அரவணைத்து, அவர்களையும் நமக்கானவர்களாக மாற்றி உள்வாங்கிச்செல்வதே படைப்புக்கு நேர்மை செய்வதாகும். அந்தவகையில், ‘ஜெய் பீம்’ திரைப்பட உருவாக்கத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியமைப்பு, முக்கியக்கதாபாத்திரத்தின் பெயர் குறித்து எழுந்திருக்கும் எதிர்மறையான விமர்சனங்களை அறிகிறேன். இப்படத்திலிருக்கிற இந்நெருடல்கள் ஒட்டுமொத்தப்படத்தையே ஒரு சமூகத்திற்கு எதிரானதாகக் கட்டமைக்கவிட வழிவகுத்துவிடக்கூடாது என்பதில் பெரும் அக்கறை கொண்டு நிற்கிறேன். ராஜாக்கண்ணு மரணத்தின்போது பாதிக்கப்பட்டவர்களுக்காக நாங்களும் களத்தில் நின்றபோது எங்களை எதற்காகப் பகையாளியாகக் குறியீடுகள் மூலம் காட்ட வேண்டுமென எழுப்பும் கேள்வி மூலம் வெளிப்படும் ஆதங்கத்தையும், அச்சமூகத்தின் உணர்வையும் புரிந்துகொள்கிறேன். தெரிந்தோ, தெரியாமலோ இத்திரைப்படத்தில் இடம்பெற்றுவிட்ட இம்முரண்களை பேச்சு வார்த்தையின் மூலம் சரிசெய்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.

நான் அறிந்த வரையில், தம்பி சூர்யா சிக்கலுக்கான தீர்வை நோக்கித்தான் செல்வாரே ஒழிய, புதிதாக ஒரு சிக்கலை உருவாக்க விரும்பமாட்டார். தமிழ்ச்சமூகத்தின் மீது பெரும்பற்று கொண்ட கலைஞனாகத் திகழும் தம்பி சூர்யா, பேசப்படாத விளிம்புநிலை மக்கள் அனுபவிக்கும் கொடுந்துயரங்களையும், பெரும் பாடுகளையும் பேச வேண்டுமெனும் சமூகப்பொறுப்புணர்வோடே இத்திரைப்படத்தைத் தயாரித்திருக்கிறார். அவரும், இத்திரைப்பட உருவாக்கத்தில் ஈடுபட்டப் படக்குழுவினரும் உயர்ந்த நோக்கம் கொண்டே உழைத்திருக்கிறார்கள். இருந்தபோதிலும், உண்மைச்சம்பவத்தை அடியொற்றி எடுக்கிறபோது தகவல் பிழைகளும், வரலாற்றுப்புனைவுகளும் இருந்துவிடக்கூடாது என்பதிலும், படைப்பில் இடம்பெற்றுவிட்ட பிழைகள் ஒரு சமூகத்திற்கு எதிரானதாக மாறி, அத்திரைப்படத்திற்குக் கரும்புள்ளியாகிவிடக்கூடாது என்பதிலும் படக்குழுவினர் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. திரைப்படம் எடுத்துக்கொண்ட கதைக்களத்தையும், அதில் பொதிந்திருக்கும் முக்கியக்கருப்பொருளையும் திரைமொழியில் காணும்போது கெடுவாய்ப்பாக, நானும் அப்பிழைகளைக் கதையோட்டத்தில் கவனிக்கத் தவறிவிட்டேன். முன்பே, அறிந்திருந்தால் இந்தளவுக்கு சிக்கலாய் வெளிவராது தடுத்திருக்க வாய்ப்பு அமைந்திருக்கும்.

ஆகவே, திரைப்படத்திலுள்ள பிழைகளை நட்பு முரணாகவே கருதி, உறவோடும், உடன்பட்ட பேச்சுவார்த்தைகளின் மூலமும், ‘ஜெய் பீம்’ திரைப்படத்திற்கு எழுந்திருக்கும் சிக்கலையும், தகவல் பிழையால் ஒரு சமூக மக்களிடையே எழுந்திருக்கும் முரணையும் ஒருசேர படக்குழுவினர் உடனடியாக தீர்க்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகுமரி மாவட்டத்தைச் சார்ந்த தம்பி சுரேஷ்குமாரை சாதிய வன்மம் கொண்டு ஆணவப்படுகொலை செய்தவர்களை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திபாகிஸ்தான் கடற்படையினரால் கொல்லப்பட்ட மராத்திய மீனவரது மரணத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் சிங்களக் கடற்படையினரால் கொல்லப்படுகிற தமிழக மீனவர்களுக்கு அளிக்கப்படாததேன்? தமிழர்கள் இந்நாட்டின் குடிமக்கள் இல்லையா? – சீமான் கண்டனம்