எரிபொருள், எரிகாற்று உருளையின் விலையை உயர்த்தி, ஏழைகளின் வயிற்றிலடித்துவிட்டு, சுங்கக்கட்டணத்தின் விலையையும் உயர்த்த எண்ணுவது மக்களின் இரத்தத்தைக் குடிக்கும் கொடுஞ்செயல்!
– சீமான் கண்டனம்
தமிழ்நாட்டிலுள்ள 14 சுங்கச்சாவடிகளிலும் 8 விழுக்காடு வரை கட்டணத்தை உயர்த்துவதற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை முடிவெடுத்திருப்பதாகவும், அது செப்டம்பர் 1 முதல் நடைமுறைக்கு வருமெனவும் வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் விலையை நாடெங்கிலும் பன்மடங்காக உயர்த்தி, அத்தியாவசியப்பொருட்களின் கட்டற்ற விலையேற்றத்திற்கு வழிவகுத்துவிட்டு, சமையல் எரிகாற்று உருளையின் விலையையும் அதிகரிக்கச்செய்துவிட்டு, இப்போது சுங்கச்சாவடிக் கட்டணத்தையும் உயர்த்த எண்ணும் மத்தியில் ஆளும் பாஜக அரசின் வன்செயல் பெரும் சினத்தையும், கடும் எதிர்ப்பையும் மக்கள் மனங்களில் ஏற்படுத்தியிருக்கிறது. தவறான பொருளாதாரக் கொள்கைகளினாலும், மிகமோசமான ஆட்சிமுறையினாலும், கூட்டிணைவு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அளவுக்கதிகமான வரிச்சலுகைகளினாலும் நாட்டின் பொருளாதாரத்தை மொத்தமாய்ச் சூறையாடிவிட்டு, அதனை ஈடுசெய்ய நாட்டு மக்கள் மீது நாளும் சுமையேற்றும் பாஜக அரசின் எதேச்சதிகாரச் செயல்பாடுகள் யாவும் கடும் கண்டனத்திற்குரியது.
கொரோனா நோய்த்தொற்றுக்காக நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கினால் நாடு முழுமைக்கும் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரும் பொருளாதார நலிவு, பாஜக அரசின் பிழையான பொருளாதார முடிவுகளால் உருவாகியிருக்கும் பொருளாதார முடக்கம், வேலையிழப்பு, வருமானமின்மை, பணவீக்கம், சிறு குறுந்தொழில்களின் வீழ்ச்சி, எரிபொருள், எரிகாற்று உருளையின் விலையேற்றம், அதன்மூலம் எதிரொலித்த இன்றியமையாத பொருட்களின் விலையுயர்வு போன்றவற்றினால் நாற்புறமும் சுழன்றடிக்கும் பெருஞ்சிக்கலில் சிக்குண்டு, மீள முடியாமல் மக்கள் தவித்துக்கொண்டிருக்கையில் தமிழகத்திலுள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை உயர்த்தப்போவதாக முடிவெடுத்திருக்கும் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் முடிவு வெந்தப் புண்ணில் வேலைப்பாய்ச்சும் கொடுங்கோன்மையாகும். எரிபொருட்கள் மற்றும் எரிகாற்று உருளையின் விலையேற்றத்திற்கு எதிராக அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள், மண்ணுரிமைப் போராளிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என ஒட்டுமொத்தச் சமூகமுமே போராடி, அவற்றின் விலையைக் குறைக்கக் குரல்கொடுத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் சுங்கக்கட்டணத்தை உயர்த்தத் திட்டமிடுவது வாக்குச்செலுத்தி ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த மக்களின் இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் கொடுஞ்செயலாகும். எரிபொருள் மற்றும் எரிகாற்று உருளையின் விலையை உயர்த்தி, ஏழைகளின் வயிற்றலடித்துவிட்டு இப்போது சுங்கக்கட்டணத்தின் விலையையும் உயர்த்துவது துளியும் உளச்சான்றில்லாத கொடுங்கோல் ஆட்சியின் வெளிப்பாடேயாகும். ஏற்கனவே, விலைவாசி உயர்வு விண்ணை முட்டுமளவுக்கு உயர்ந்து செல்கையில் அதனைக் குறைக்கவோ, மட்டுப்படுத்தவோ எதுவொன்றையும் செய்யாத மத்தியில் ஆளும் பாஜக அரசு, நெருடலோ, தயக்கமோ, குற்றஉணர்ச்சியோ, ஏதுமின்றித் தற்போது சுங்கக்கட்டணத்தை உயர்த்த முனைவது அடித்தட்டு உழைக்கும் மக்கள் மீது தொடுக்கப்படும் பொருளியல் போராகும்.
ஆகவே, மண்ணின் மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, தமிழகத்திலுள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை உயர்த்தும் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் முடிவை உடனடியாகக் கைவிடச் செய்ய வேண்டுமென ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசை வலியுறுத்துகிறேன். அதனைச் செய்யத் தவறும்பட்சத்தில், தமிழகத்திலுள்ள சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு மிகப்பெரும் மக்கள்திரள் போராட்டத்தை முன்னெடுப்போம் என எச்சரிக்கிறேன்.
செந்தமிழன் சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி