சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்தின் மீது நடத்தப்பட்டிருக்கும் கொலைவெறித்தாக்குதல் ஊடகச்சுதந்திரத்தின் மீது விழுந்துள்ள பேரிடி!
– சீமான் கண்டனம்
சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்தின் மீது நடத்தப்பட்டிருக்கும் கொலைவெறித்தாக்குதல் ஊடகச்சுதந்திரத்தின் மீது விழுந்துள்ள பேரிடி!https://t.co/DWYah3VeSL@sathiyamnews @CMOTamilnadu @mkstalin pic.twitter.com/nsgdkDQh4c
— சீமான் (@SeemanOfficial) August 4, 2021
சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்திற்குள் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி உள்நுழைந்து, அங்குப் பணிபுரியும் ஊழியர்களைக் கத்தி முனையில் மிரட்டியும், ஊழியர்கள் மீது தாக்குதல் தொடுத்தும், பொருள்களை உடைத்து அட்டூழியம் செய்ததுமான செய்தியும், அதுதொடர்பான காணொளிக்காட்சிகளும் பெரும் அதிர்ச்சியைத் தருகின்றன. நாடறியப்பட்ட ஒரு காட்சி ஊடகத்தின் அலுவலத்திற்குள் தனியொரு நபர் ஆயுதத்தோடு உள்நுழைந்து, தாக்குதல் தொடுப்பதும், மிரட்டுவதுமானப் போக்கு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு எந்தளவுக்குச் சீர்கெட்டு நிற்கிறது என்பதை வெளிப்படையாகப் படம்பிடித்துக் காட்டும் தக்கச் சான்றுகளாகும். தமிழகத்தில் அச்சு மற்றும் காட்சி ஊடகத்தினர் தொடர்ச்சியாக அச்சுறுத்தப்படுவதும், மிரட்டப்படுவதும், தாக்குதலுக்கு உள்ளாவதுமான சூழல் உருவாகி, ஊடகச்சுதந்திரம் முற்றிலும் கேள்விக்குறியாகியிருப்பது மோசமான சனநாயகச்சீர்கேடாகும். அநீதிகளைப் படம்பிடித்துக் காட்டி, நியாயத்தை நிலைநிறுத்தும் சனநாயகத்தின் நான்காம் தூணான ஊடகங்களே இவ்வளவு பெரிய அச்சுறுத்தலுக்கு வெளிப்படையாக உள்ளாக்கப்படுகிறது என்பது வெட்கக்கேடானது.
களத்தில் செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபடும் செய்தியாளர்கள் மீது தாக்குதல் தொடுத்திட்டவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்காததன் விளைவாகவே தற்போது செய்தி தொலைக்காட்சியின் அலுவலகத்திற்குள் ஒற்றை நபராய் உட்புகுந்து தாக்குதல் நடத்தும் அளவுக்கு நிலைமை மோசமாயிருப்பதற்கு முதன்மைக்காரணமாகும். ஏற்கனவே, ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசாலும், அதன் ஆட்சியாளர்களாலும் ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் நேரடி, மறைமுக அழுத்தங்களுக்கு ஆட்பட்டு ஊடகத்துறையின் குரல்வளை நெரிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தற்காலச்சூழலில், தற்போது சத்தியம் தொலைக்காட்சி அலுவலகம் மீது நடத்தப்பட்டிருக்கும் கொலைவெறித்தாக்குதல் என்பது ஊடகச்சுதந்திரத்தின் மீது விழுந்துள்ள பேரிடியாகும்.
.ஆகவே, சத்தியம் தொலைக்காட்சி அலுவலத்திற்குள் அத்துமீறி நுழைந்து, தாக்குதல் தொடுத்திட்டதாகக் கைதுசெய்யப்பட்ட மர்ம நபர் மீது கடும் சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுத்து, குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தைப் பாய்ச்ச வேண்டுமெனவும், ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவோர் எவராயினும் அவரைக் கடும் சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தி, ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி