மதுபோதையில் பள்ளிச்சிறுமியைக் கொடூரமாகக் கொன்ற கொலைக்குற்றவாளியை உடனடியாகப் போக்சோ சட்டத்தில் கைது செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

2099

அறிக்கை: மதுபோதையில் பள்ளிச்சிறுமியைக் கொடூரமாகக் கொன்ற கொலைக்குற்றவாளியை உடனடியாகப் போக்சோ சட்டத்தில் கைது செய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி

சேலம் மாவட்டம், தாரமங்கலம், கீழ்மட்டையாம்பட்டியைச் சேர்ந்த 9 வயது பள்ளிச்சிறுமியை, அதே ஊரைச் சேர்ந்த தனபால் எனும் நபர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று, அச்சிறுமி கூச்சலிட்டதால் கொலைசெய்த சம்பவம் கேள்வியுற்றுப் பேரதிர்ச்சியடைந்தேன். அறவுணர்ச்சியையும், ஒழுக்கத்தையும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கற்பித்த தமிழ்ச்சமூகத்தில் நடந்தேறும் இதுபோன்ற கொடிய நிகழ்வுகள் ஒட்டுமொத்தச் சமூகத்தையும் வெட்கித் தலைகுனியச் செய்கிறது. வணிகமே நோக்கமாகக் கொண்டு மனிதர்களைப் பண்டமாக மாற்றியிருக்கிற தற்கால ஆட்சியாளர்களின் நவீன சந்தைப்பொருளாதாரக் கொள்கைகளின் வெளிப்பாடாகவே இச்சமூகம் குற்றச்சமூகமாக மாறி நிற்கிறது.

தமிழகத்தில் கொரோனோ ஊரடங்கு தொடங்கப்பட்டுப் பள்ளிகள் மூடப்பட்ட காலத்திலிருந்து வீட்டில் தனியாக இருக்கும் பள்ளிச் சிறுமியர் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாவது தொடர் நிகழ்வாகி வருகிறது. மேலும், இக்கொடியச்செயலில் ஈடுபட்டக் குற்றவாளி மதுபோதையில் இருந்ததும் தெரிய வருகிறது.
ஒருபுறம், ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் நிலையில், மறுபுறம், மதுபானக் கடைகள் மட்டும் தொடர்ந்து இயங்க அரசு அனுமதிப்பது குற்றச்செயல்கள் அதிகரிக்கப் பெருங்காரணமாகிறது. ஏற்கனவே, பாலியல் வன்கொடுமைகள் என்பது தொடர் நிகழ்வாகி மாறிவரும் சூழலில், அதற்கெல்லாம் மூலவேராக விளங்குவது அரசு நடத்தும் மதுபானக்கடைகளேயாகும். அருந்தும் மதுபானங்களால் உடலில் நோயெதிர்ப்பு சக்தி
குறைந்து கொரோனோ நோய்த்தொற்று எளிதில் பரவுவதோடு, மதுபானக்கடைகளில் அலைமோதும் கூட்டநெரிசலின் காரணமாகவும் கொரோனோ அதிகம் பரவுவதைச் சுட்டிக்காட்டி, மதுப்பானக்கடைகளை உயர்நீதிமன்றமே மூட அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மதுபானக்கடைகள் மூடப்பட்டிருந்தால் பள்ளிச்சிறுமி கொல்லப்பட்ட இந்நிகழ்வும் நடந்தேறியிருக்காது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். எனவே, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுபானக்கடைகளை நிரந்தரமாக மூடுவோம் என்று கடந்த காலங்களில் உறுதியளித்த திமுக, புதிதாக ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் தமிழகத்திலுள்ள அனைத்து மதுபானக்கடைகளையும் மூடும் உத்தரவுக்கான கையெழுத்தை முதல் கையெழுத்தாக இட்டு வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்பினையும், நம்பிக்கையையும் நிறைவேற்றிச் சீரழிந்துகொண்டிருக்கும் தமிழ்ச்சமூகத்தைப் பேரழிவிலிருந்து தடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், பள்ளிச்சிறுமியை கொடூரமாகக் கொன்று கொடியச்செயலில் ஈடுபட்டக் குற்றவாளியை உடனடியாகப் போக்சோ சட்டத்திலும், கொலைவழக்கின் கீழும் கைதுசெய்ய வேண்டுமென்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஉயிரிழப்புகளைத் தடுக்கப் போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு விரைந்து செயல்பட்டு உயிர்க்காற்று இருப்பை உறுதி செய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திகபசுரக்குடிநீர் வழங்குதல் – பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி