இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்த  இனவிரோத பாஜகவையும் அதனைத் தூக்கிச் சுமந்து வரும் அதிமுகவையும் தேர்தல் களத்தில் பழிதீர்த்து வீழ்த்தி முடிப்போம்! – சீமான் சூளுரை

3034

இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்த  இனவிரோத பாஜகவையும் அதனைத் தூக்கிச் சுமந்து வரும் அதிமுகவையும் தேர்தல் களத்தில் பழிதீர்த்து வீழ்த்தி முடிப்போம்! – சீமான் சூளுரை

ஐ.நா.வின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் இனப்படுகொலைப் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்கக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை, இந்திய நாடு ஆதரிக்காது வெளிநடப்புச் செய்திருப்பது பேரதிர்ச்சியளிக்கிறது. தமிழர்களை இந்துக்கள் என்று பொய்யுரைத்துத் தமிழகத்தில் மத அரசியல் செய்து வாக்குவேட்டையாட முற்படும் பாஜக, தமிழர்கள் பக்கம் நிற்காது சிங்களர்கள் பக்கம் நின்று ஈழப்படுகொலையை மூடி மறைக்கத் துணைபோவது வன்மையான கண்டனத்திற்குரியது.

பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட தமிழர்களுக்குத் தொடர்பற்ற அந்நிய நாடுகள்கூட ஐ.நா. மனித உரிமை பேரவையில் முன்மொழியப்பட்ட தீர்மானத்தை ஆதரித்துள்ளன. இத்தீர்மானம் பன்னாட்டு விசாரணை கோராத வலுவற்ற தீர்மானமாக இருந்தபோதிலும், குறைந்தபட்சமாக அதனைக்கூட  ஆதரிக்காது இந்திய அரசு வெளிநடப்புச் செய்திருப்பது உலகெங்கும் வாழும் தமிழர்களிடம் பெரும் கொந்தளிப்பையும், தீராத ஆத்திரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நிற்பதுதான் அறம் எனும் அடிப்படை மானுடக்கோட்பாட்டை ஏற்காது, இனப்படுகொலைக்கு ஆளாக்கிய சிங்களர்களின் பக்கம் இந்தியாவும், அதன் ஆட்சியாளர்களும் நிற்பது வரலாற்றுப் பெருங்குற்றமாகும். ஆதிகாலந்தொட்டு இந்நாட்டை ஆழமாக  நேசித்துப் போற்றி வந்த தமிழர்களின் மனதில் இது பெரும் ரணமாகவும், ஆறா வடுவாகவும் அமைந்து, வருங்காலத் தலைமுறைப்பிள்ளைகளிடம் இந்திய நாட்டு உணர்வே முழுமையாக  அற்றுப் போகும் நிலைக்குக் கொண்டு வந்துவிட்டார்கள். ஒற்றை மொழியாதிக்கத்தினால் பாகிஸ்தானிலிருந்து பிளந்து பிரிந்து தனி நாடானது வங்காளதேசம். எத்தனையோ அநீதிகளும், வஞ்சித்தல்களும், துரோகங்களும் தமிழர்களுக்கு இழைக்கப்பட்டப்போதும் பெருந்தன்மையோடு சகித்துக்கொண்டு இந்தியாவின் குடிமக்களாக வாழ்ந்து, இந்நாட்டை நேசித்து நிற்கிற தமிழர்களை இழிவானவர்களென நினைத்து குறைமதிப்பீடு செய்தால் அதற்கான எதிர்வினையைக் காலமும், வரலாறும் கட்டாயம் கையளிக்கும் என எச்சரிக்கிறேன்.

இந்தியப் பெருநாடு நாடாவதற்கு முன்பிருந்தே நீடித்து நிலைத்து வாழக்கூடிய பூர்வக்குடியினர் தமிழர்கள் நாங்கள். இந்நாட்டின் விடுதலைக்காக அளப்பெரும் ஈகங்களையும், உயிர்க்கொடைகளையும் செய்திட்ட ஒரு பேரினத்தின் மக்கள் தமிழர்கள் நாங்கள். அத்தகைய ஒரு தொன்மை இனம் அருகாமை நாட்டினுள் ஈழப்பெருநிலத்தில் அழித்தொழிக்கப்பட்டபோது அதனைத் தடுத்துக் காத்து நின்றிருக்க வேண்டிய இந்திய நாடும், அதன் ஆட்சியாளர்களும், தங்கள் தனிப்பட்ட வன்மத்திற்குப் பகைதீர்க்க ஈழப்பேரழிவை முன்னின்று நடத்தியது மன்னிக்கவே முடியாத வரலாற்றுப் பெருந்துரோகமாகும். அன்றைக்குக் காங்கிரசு – திமுகக் கூட்டணி ஆட்சி அதனைச் செய்து ஈழப்படுகொலையை முன்னின்று நடத்தியபோது அதனை வேடிக்கைப் பார்த்து மெளனமாக ஆதரித்துக் கொண்டிருந்த பாஜக, இன்றைக்கு வெளிப்படையாகத் தனது ஆதரவினைத் தெரிவித்துச் சிங்களப் பேரினவாதத்தின் படுகொலையை நியாயப்படுத்தி மூடி மறைக்கத் துணைபோயிருப்பது மிகப்பெரும் அநீதியாகும்.

ஐ.நா. பேரவையில் பன்னாட்டு விசாரணைகோரும் வகையில் தீர்மானத்தை மாற்ற வலியுறுத்தி தமிழர்களுக்கு ஆதரவாக நின்றிருக்க வேண்டிய இந்தியப் பெருநாடு, இலங்கையின் வெளியுறவுச் செயலாளர் ஜெயநாத் கொலம்பகே கூறியது போலவே, இலங்கைக்கு ஆதரவாக வெளிநடப்புச் செய்திருப்பது, இந்நாட்டில் வாழும் பத்து கோடி தமிழர்களை அலட்சியப்படுத்தி அவமதிக்கும் கொடுஞ்செயலாகும். 2013 ஆம் ஆண்டு ஐ.நா. அவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தைத் திரைமறைவில் நீர்த்துப்போகச் செய்த, அன்றைய திமுக அங்கம் வகித்த காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செய்த அதே தமிழர் விரோதப்போக்கினையும், நயவஞ்சகத்தினையும் பாஜக தற்போது செய்திருப்பதன் மூலம் காங்கிரசும், பாஜகவும் தமிழர் இன நலனிற்கு ஒருபோதும் ஆதரவாய் நிற்காது என்பது மீண்டுமொரு முறை  மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

மறைந்த அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இனப்படுகொலை நிகழ்த்திய இலங்கைப் பேரினவாத அரசு மீது பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டுமென்று தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். அவரது வழியில் செயல்படுவதாகக் கூறும் அதிமுக அரசு, இத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கக் கூட்டணிக்கட்சியான பாஜகவை வலியுறுத்தி பேசாமல் கள்ள மௌனம் காத்ததும், பாஜக அரசின் சிங்கள ஆதரவுப்போக்கிற்குத் துணையாக நிற்பதும் தமிழர்கள் முதுகில் குத்தும் கொடுந்துரோகமாகும். இவையாவும் வாக்களித்து ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த  தமிழர்களின் உள்ளத்து உணர்வுகளைத் துளியளவும் மதியாது செயல்படும் பெரும் இறுமாப்பின் வெளிப்பாடாகும். இலங்கைக்கு எதிரான தீரமானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென உலகெங்கும் வாழும் தமிழர்கள் பலமுறை வலியுறுத்திய பிறகும்கூட, அதைச் சிறிதும் மதிக்காது தீர்மானத்தை ஆதரிக்காது வெளிநடப்புச் செய்திருப்பது உலகத்தமிழர்களின் நெஞ்சங்களைக் கொதிப்படையச் செய்துள்ளது.

இரண்டு இலட்சம் தமிழர்களை இலங்கை இனப்படுகொலை செய்யும்போது  ஆயுதம் கொடுத்து, பணம் கொடுத்து, சர்வதேச அளவில் இலங்கைக்கான ஆதரவு வட்டத்தை உருவாக்கி தமிழர்களைக் கொன்று குவிக்கத் துணைபோன காங்கிரசுக்கும், அவர்களோடு நின்று ஒத்து ஊதிய திமுகவுக்கும் அப்படுகொலையில் எப்படிப் பங்குண்டோ, அதேபோல அக்குற்றத்திலிருந்து இலங்கையைக் காப்பாற்றத் துணைபோனதில் பாஜக, அதிமுகவுக்கும் பங்குண்டு என்பதைத் தமிழ்ப்பேரினத்தின் மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். உலகத்தமிழினம் இவ்வரலாற்றுத் துரோகங்களை ஒருபோதும் மறக்காது; மன்னிக்காது. ஆகவே, ஆயிரமாயிரம் ஆண்டுக் காலத்திற்கு மேலான இனப்பகை கொண்டு தமிழர்களை வஞ்சித்து முதுகில் குத்திய வரலாற்றுப்பகைவன் பாஜகவையும், அதனைத் தூக்கிச் சுமந்து வரும் இனவிரோத அதிமுகவையும் இத்தேர்தல் களத்தில் பழிதீர்த்து வீழ்த்தி முடிப்போமென எனச் சூளுரைக்கிறேன்.

 செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதிருச்செங்கோடு, குமாரபாளையம் செந்தமிழன் சீமான் பரப்புரை
அடுத்த செய்திமொடக்குறிச்சி, ஈரோடு செந்தமிழன் சீமான் பரப்புரை