சாமந்தன்பேட்டையில் மீன்பிடி இறங்குதளம் அமைக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

545

நாகை மாவட்டம், சாமந்தன்பேட்டையில் மீன்பிடி இறங்குதளம் அமைக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

தூண்டில் வளைவுடன் கூடிய மீன்பிடி இறங்குதளம் அமைக்க வேண்டும் எனும் சாமந்தன்பேட்டை மீனவமக்களின் நெடுநாள் கோரிக்கையை தமிழக அரசு இதுவரை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டு வைத்திருப்பது வன்மையான கண்டனத்திருக்குரியது.

நாகை மாவட்டம், நாகூரை அடுத்துள்ள சாமந்தன்பேட்டையில் ஐயாயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். புதுமீன்களின் விற்பனைக்குப் பெயர்பெற்ற இப்பகுதியில் முறையான மீன்பிடி இறங்குதளம் இல்லாத காரணத்தால் சுமார் 5 கி.மீ தொலைவிற்கு மீன்களை எடுத்துச்சென்று விற்பனை செய்யவேண்டிய நிலையுள்ளது. இதனால், கூடுதலான வாகன வாடகை மற்றும் எரிபொருள் செலவுகளும், தேவையற்ற காலதாமதமும் ஏற்படுவதால் மீன்களை விற்பனை செய்வதில் மீனவ மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, சாமந்தன்பேட்டை பகுதியில் தூண்டில் வளைவுடன் கூடிய மீன்பிடி இறங்குதளம் அமைக்க வேண்டுமென்று கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியைச் சேர்ந்த மீனவ மக்கள் போராடி வருகின்றனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் தேதியன்று, அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் 110 விதியின்கீழ் சாமந்தன்பேட்டையில் மீன்பிடி இறங்குதளம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்தார். ஆனால், அவரது வழியில் செயல்படுவதாகச் சொல்லும் தமிழக அரசு ஐந்தாண்டுகளாகியும் மீன்பிடி இறங்குதளம் அமைக்க, இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்துவதென்பது மீனவ மக்களை வஞ்சிக்கும் கொடுஞ்செயலன்றி வேறில்லை.

கடந்த ஒரு வாரகாலமாக மீன்பிடி இறங்குதளம் அமைக்க வலியுறுத்தி சாமந்தன்பேட்டை மீனவர்கள் மீண்டும் வேலைநிறுத்தம் உள்ளிட்டப் பல்வேறு தொடர்ப்போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக நாகை மற்றும் காரைக்கால் பகுதி மீனவர்களும் போராட்டத்தில் குதித்துள்ள நிலையில், போராடும் மீனவர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைக்குச் செவிசாய்க்க முன்வராதது, தமிழக அரசின் அலட்சியப்போக்கை வெளிக்காட்டுவதாகவே உள்ளது. ஆகவே, தமிழக அரசு உடனடியாகப் போராடும் சாமந்தன்பேட்டை மீனவர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் நியாயமான, நெடுநாள் கோரிக்கையான தூண்டில் வளைவுடன் கூடிய மீன்பிடி இறங்கு தளத்தை உடனடியாக அமைத்துத் தர வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திநாமக்கல் சட்டமன்றத் தொகுதி – புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு தின நிகழ்வு
அடுத்த செய்திமதுராந்தகம் தொகுதி -அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு