தனியார் நிறுவனத்திற்காக வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவைக் குறைக்கும் முடிவை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் நாட்டின் மிகப் பழமையான நீர் பறவைகள் சரணாலயங்களில் ஒன்றாகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாடுகளிலிருந்து, 190க்கும் மேற்பட்ட பறவை இனங்களைச் சார்ந்த , ஏறத்தாழ 40000 பறவைகள் இனப்பெருக்கத்துக்காகவும், உணவு தேவைக்காகவும் தட்பவெப்பச் சூழலுக்காவும் வேடந்தாங்கலை நோக்கி வருகின்றன. பரப்பளவை பொறுத்தவரை சிறியதாக இருந்தாலும் ஆண்டுதோறும் பறவையினங்களைப் பார்வையிட இங்கு வருகை தரும் மக்கள் அதிகம் என்பதால் சிறந்த சுற்றுலாத்தலமாகவும் வேடந்தாங்கல் திகழ்கிறது. தமிழகத்தின் மிக முக்கிய அடையாளமான வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவை 5 கிமீ லிருந்து 3 கிமீ ஆக குறைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாய் வரும் செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
நாம் வாழும் பூமியானது மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல. அனைத்து உயிர்களுக்கும் சொந்தமானதாகும். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலே தமிழர்மறை காட்டும் அறம். பல்லுயிர் என்பது புல், பூண்டு, பூச்சிகள், பறவைகள், விலங்குகள், காடுகள் என அனைத்தும் சேர்ந்ததுதான். பசிக்கும், தலைவலிக்கும் தொடர்பு இருக்கிறது என்கிறது அறிவியல். உடலில் ஒவ்வொரு முனைக்கும் இன்னொரு பகுதிக்கும் தொடர்பு இருக்கிறது என்கிறது அறிவியல். அதைப் போலத் தான் புதர்களும், சோலைகளும், சதுப்பு நில காடுகளும், அடர் காடுகளும், விலங்குகளும், பறவைகளும், ஒட்டு உண்ணிகளும் என ஒவ்வொரு உயிரும் ஒன்றோடு ஒன்றாகப் பின்னிப் பிணைந்து இருக்கிறது. இதில் ஒரு மூலையில் சிக்கல் ஏற்படுத்தினாலும் அது இன்னொரு மூலையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது கடந்தகாலப் புவியியல் வரலாறுகள் சொல்லும் உண்மை.
உலகின் பல நாடுகளிலிருந்து பல ஆயிரக்கணக்கான மைல்களைக் கடந்து, திசை அறிந்து, இயற்கை சீற்றங்களை எல்லாம் கடந்து பறவைகள் வேடந்தாங்கல் வருவதன் காரணம் இங்கு இருக்கிற தட்பவெப்ப சூழலியல்தான். அவ்வாறு வரும் பறைவகளால் ஏற்படும் மகரந்த சேர்க்கை (Pollination) மற்றும் விதை பரவல் அணு மாற்றங்களுக்கு (Genetic Recombination) மிகவும் அவசியமாகும். பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கு மிக முக்கியமானவை பல்லுயிரியமும், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்புமாகும். மனித நடவடிக்கையால் இவைகளுக்கு இடையூறு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகதான் நாட்டில் பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.
தமிழக அரசின் இந்த முடிவானது வனப்பறவைகள் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டம் 1912, இந்தியக் காடுகள் சட்டம் 1927, பாம்பே வனவிலங்குகள் மற்றும் வனப் பறவைகள் பாதுகாப்புச் சட்டம் 1951, விலங்குகளுக்கு எதிரான கொடுமைகள் சட்டம் 1960, வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டம் 1972ஆகிய அனைத்திற்கும் எதிராக உள்ளது என்பதையும் தமிழக அரசு உணர வேண்டும். ஒரு தனியார் நிறுவனத்திற்காக தற்போது வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவைக் குறைக்க முடிவு எடுத்து வனவிலங்கு தேசிய வாரியத்தின் அனுமதிக்காகக் காத்து இருக்கிறது என்பது சிறிதும் அறமற்ற, வேதனை அளிக்கும் செயலாகும். சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கடுமையான எதிர்ப்பையடுத்து தற்போது சரணாலயத்தின் எல்லையை குறைக்கும் எண்ணம் இல்லை என்றும் வேடந்தாங்கல் ஏரியைச் சுற்றியுள்ள 5கிமீ நிலப்பரப்பானது, 0-1 கிமீ மையப்பகுதியாகவும், 1-3 கிமீ பகுதி இடைநிலைப் பகுதியாகவும், 3-5 கிமீ பகுதி சுற்றுச்சூழல் பகுதி எனவும் வகைப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று வனத்துறை தெரிவிக்கும் விளக்கம் போதுமானதாக இல்லை.
ஆளும் அரசு என்பது தன் தேசத்தில் வாழும் அனைத்து உயிர்களையும் பாதுகாப்பதற்கான ஆட்சியை வழங்க வேண்டுமேயன்றி, சில தனியார் நிறுவனங்கள் வளம் கொழிப்பதற்காக அல்ல என்பதை உணர்ந்து, வேடந்தாங்கல் பறவைகள் சரணலாயத்தின் பரப்பளவைக் குறைக்கும் நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் எனவும் இதுகுறித்து சூழலியல் ஆர்வலர்களிடம் பொதுமக்களிடம் எழுந்துள்ள ஐயத்திற்கு தமிழக அரசு சரியான விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
– சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி