புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் ஐயா கண்ணன் அவர்களின் மறைவு கலையுலகத்திற்கே ஏற்பட்டப் பேரிழப்பு! – சீமான் புகழாரம்

15

புகழ்பெற்ற பழம்பெரும் இயக்குனர் பீம் சிங் அவர்களின் மகனும், புகழ்பெற்ற ஒளிப்பதிவாளருமான ஐயா கண்ணன் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயருற்றேன். அப்பா பாரதிராஜாவின் மிகுதியானப் படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி, ‘பாரதிராஜாவின் கண்கள்’ எனத் திரையுலகினரால் போற்றப்படும் அளவுக்கு அப்பா மனதில் நினைத்தவற்றைத் துல்லியமாகக் காட்சியாகக் கொண்டு வரும் பேராற்றல் கொண்டவர்.

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, நம்மையெல்லாம்
கண் இமைக்காமல் பார்க்கும் காட்சிகளமைந்த பல திரைப்படங்களன் ஒளிப்பதிவினை செய்தவர்.

மண் வாசனையையும், கிராமத்து வாழ்வியலையும் திரைக்குள் அப்படியே பிரதிபலிக்கும் அப்பாவின் படங்களின் காட்சிப்பதிவுக்கு ஐயாவின் தலைசிறந்த ஒளிப்பதிவும் ஒரு காரணம். குட்டுபட்டாலும் மோதிர கையால் குட்டு பட வேண்டும் என்று அப்பா பாரதிராஜா அவர்களுடன் பணியாற்றும் அனுபவத்தை பகிரும்போது திரைத்துறையினர் பலரும் கூற கேட்டுள்ளேன்.
அத்தகைய சிறப்புமிக்க கலைஞனின் விரலைவிட்டு அகலாத ஒரு மோதிரம் போலவே ஒளிர்ந்தவர் ஐயா கண்ணன் என்றால் அது மிகையல்ல!

கிட்டதட்ட அப்பா பாரதிராஜா அவர்களின் வலதுகரம் போலவே உறுதுணையாக இருந்தவர்.
அப்பா பாரதிராஜா அவர்கள் ஒளிப்பதிவாளர் கண்ணன் அவர்களுக்கு அமைத்து கொடுத்த தளம் மிகச்சிறப்பானது.
ஒரு கலைஞனுக்கு தன் திறமையை முழுமையாய் வெளிபடுத்த பரந்து விரிந்து தளம் அமைந்துவிட்டால் அதைத்தாண்டி வேறெங்கும் செல்லவேண்டிய தேவை ஏற்படாது என்பதற்கு தம் வாழ்வையே உதாரணமாக்கி வாழ்ந்து காட்டிஞவர் ஐயா கண்ணன் அவர்கள்.

‘பசும்பொன்’ திரைப்படத்தில் பணியாற்றியபோது அவரோடு பழகிய நினைவுகள் நெஞ்சில் நிழலாடுகின்றன. பழகுவதற்கு இனியப் பண்பாளர்.இயற்கை வேளாண்மையை விரும்பி செய்த ஓர் இயற்கைக் காவலர்.

ஐயா கண்ணன் அவர்கள் ‘கடவுள் பூக்கள்’ படத்திற்கு தேசிய விருதைவிட உயர்ந்ததெனக் கருதப்படும் சாந்தாராம் விருதையும், ‘கண்களால் கைது செய்’ படத்திற்கு மாநில அரசின் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதையும் பெற்றுள்ளார்கள்.

அவரது மறைவு அவரது குடும்பத்தினருக்கும், அப்பா பாரதிராஜாவுக்கும் மட்டுமல்ல கலையுலகத்திற்கே ஏற்பட்டப் பேரிழப்பு! அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலகினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, இத்துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி