சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் வெல்லட்டும்

26

சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் வெல்லட்டும்:

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும், காமன்வெல்த் மாநாடு கொழும்புவில் நடைபெற்றால் அதனை புறக்கணிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 4 கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் முன்னெடுத்துள்ள பட்டிணிப் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி ஆதரிக்கிறது 

இந்திய இலங்கை கடல் எல்லையைத் தாண்டி வந்து மீன் பிடித்தார்கள் என்று கூறி, நமது நாட்டின் மீனவர்களை சிங்கள கடற்படையினர் தாக்குவதும், அவர்களின் வலைகளை அறுத்தெறிவதும், அவர்கள் பிடித்து வைத்துள்ள மீன்களை கவர்ந்து செல்வதும், அவர்களை மிக கீழ்த்தரமாக நடத்தி அவமானப்படுத்துவதும், பிறகு அவர்களை இலங்கைக்கு கடத்திச் சென்று சிறையில் அடைப்பது அன்றாட நிகழ்வாகிவிட்டது. இப்படிப்பட்ட நிகழ்வுகளை தடுத்து நிறுத்துமாறு தமிழ்நாட்டின் முதல்வர்களாக இருந்தவர்களும், இருப்பவரும் ஓராயிரம் முறை கடிதம் எழுதியும் உருப்படியான நடவடிக்கை எதையும் மத்திய அரசு எடுக்கவில்லை. எல்லைத் தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களை தாக்கக்கூடாது என்று ஐ.நா.கடல் சார் சட்டமிருந்தும் ஏன் தாக்குகீறீர்கள் என்று கேள்வியும் எழுப்பியதில்லை. 

ஆனால், சிங்கள மீனவர்கள் அதே எல்லையைத் தாண்டி மீன் பிடிக்க வரும்போது இந்திய கடலோர காவற்படையால் கைது செய்யப்பட்டால் தாக்கப்படுவதில்லை. மாறாக, அவர்களை மாப்பிளை போல் உபசரித்து திருப்பி அனுப்புகிறது மத்திய அரசு. இதன் பொருள் என்ன? தமிழக மீனவர்கள் இந்தியர்கள் இல்லையா? என்றுதான் நாம் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறோம், ஆனால் பதில் இல்லை. இப்போதுதான் முதல் முறையாக இந்தியாவிற்கான இலங்கைத் தூதரை அழைத்து மத்திய அரசு கண்டித்ததாக செய்திகள் கூறுகின்றன.

அதுபோலவே, இலங்கையின் பூர்வீகக் குடிகளான தமிழர்கள் அங்கு இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டபோது அதற்கு ஆதரவு தந்தது இந்திய மத்திய அரசு. இதனை அந்நாட்டு அதிபர் ராஜபக்சவும், அவருடைய தம்பி கோத்தபய ராஜபக்சவும் வெளிப்படையாகவே கூறினார்கள். இந்தியாவின் ஆதரவு இல்லாமல் இருந்திருந்தால் புலிகளை எங்களால் தோற்கடித்திருக்க முடியாது என்று கூறினார்கள். இப்படி இலங்கை அரசுக்கு ஆதரவாகவே செயல்பட்டுவரும் அரசு, கொழும்புவில் வரும் நவம்பரில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்று உலகத் தமிழினம் தொடர்ந்து வற்புறுத்தியும் இதுவரை செவிசாய்கவில்லை.

ஈழத் தமிழினத்தின் நிரந்திர விடிவிற்காக தமிழக சட்டப் பேரவை நிறைவேற்றிய தீர்மானங்களை இப்போதுள்ள இந்திய மத்திய காங்கிரஸ் அரசு எப்படி நிறைவேற்றும்? அதுதான் தமிழினப் படுகொலைத் துணை போன அரசாயிற்றே! எப்படி தமிழருக்கு உதவும்? இலங்கை தமிழர்களின் நல்வாழ்வில் அக்கறையுள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறி வருகிறார். அது உண்மையானால், கொழும்புவில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டை வேறொரு நாட்டின் தலைநகருக்கு மாற்றினால்தான் இந்தியா பங்கேற்கும் என்று கூற வேண்டும். இதுதான் சட்டக் கல்லூரி மாணவர்கள் வைக்கும் நியாயமான கோரிக்கையாகும்.

எனவே சட்டக் கல்லூரி மாணவர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. இது எந்த ஒரு அரசியல் கட்சியின் தலையீடும் இன்றி சுதந்திரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் விரும்புகிறது. ஏனெனில் மாணவர்களின் போராட்டத்திற்கு உதவுவதுபோல் வந்து, போராடும் மாணவர்களை பிரித்தாளும் சதிகள் நடந்தது மாணவ சமுதாயம் மறந்திருக்காது என்ற கருதுகிறோம். மாணவ சமுதாயம் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு அவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளே தலைமையாகும். அதையே உறுதியாக பற்றிக்கொண்டு போராட வேண்டும் என்றும், அரசியல் சூழ்ச்சிகளுக்கு பலியாகிவிடக் கூடாது என்றும் நாம் தமிழர் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. 

செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

முந்தைய செய்திபயிற்சி வகுப்புகள் 10-08-2013
அடுத்த செய்திதகவல் அறியும் உரிமை சட்டத் திருத்தம் ஜனநாயகத்திற்கு எதிரானது