முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நம்முடைய நாடு தற்சார்புப்பொருளாதாரக் கொள்கையிலிருந்து சந்தைப்பொருளாதாரக் கொள்கைக்கு மாறிவிட்டது; தனியார்…

0

நம்முடைய நாடு தற்சார்புப்பொருளாதாரக் கொள்கையிலிருந்து சந்தைப்பொருளாதாரக் கொள்கைக்கு மாறிவிட்டது; தனியார் மயம், தாராள மயம், உலக மயம் எனும் பொருளாதாரக்கொள்கைகளைக் கொண்டிருக்கிறது.

இன்றைய தலைமுறையினர் மத்தியில் தற்சார்புப்பொருளாதாரத்தின் அவசியத்தை இப்பயணம் விதைக்கும். வேளாண்மை என்பது படிக்காதவர்கள் செய்கிற வேலை என்கிற எண்ணத்தை முதலில் மாற்ற வேண்டும். மென்பொருள் தொழில்நுட்ப உலகின் பிதாமகன் பில்கேட்ஸ், அமெரிக்காவில் இரண்டரை இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் வேளாண்மை செய்கிறார். அதை இந்தத் தலைமுறையினரிடம் வலியுறுத்துவது இப்பயணத்தின் ஒரு பகுதி! மக்கள் சேவையே மகத்தான சேவை; தன்னலமற்று மக்களுக்குத் தொண்டாற்றும் ஒரு தூய உள்ளம்தான் சிறந்த தலைமைப்பண்பாக இருக்க முடியும் என்பதை தம்பி ஆரியினுடைய கதாபாத்திரம் வலியுறுத்துகிறது. "அரசியல் என்பது முழுக்க முழுக்க மக்களுக்கான தேவையும், அதை நிறைவு செய்யும் சேவையும்தான்" என்கிறார் பெருந்தலைவர் காமராசர். எங்களுடைய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள், "அரசியல் என்பது மக்களின் மீது அதிகாரத்தைச் செலுத்துகிற விவகாரம் அல்ல; அது மக்களுக்கு ஆற்றப்படுகிற தொண்டு" என்கிறார். அரசியல் என்பது அனைத்து உயிர்களுக்குமான தேவையும், அதை நிறைவு செய்யும் சேவையும் என்று நாங்கள் கருதுகிறோம். மக்களுக்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வேலைசெய்யும் ஒரு இளைஞன், தன்னிடத்தில் அதிகாரம் இருந்தால் கூடுதலாக செய்யலாம். அதனால், அதிகாரத்தை நோக்கிப் போகும்போது, ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட அதிகாரம் எப்படி இருக்கிறது? என்பதை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டி நிலை உள்ளது. இங்கே அரசியல் கோட்பாடு எனப்படுவது சாதி, மதம், பணம், சாராயம், சாப்பாடு ஆகியவைதான்! இங்கே திட்டங்கள் எனப்படுவது சலுகை, மானியம், போனஸ், இலவசம் ஆகியவைதான். இதற்கு மேலே கூடுதலாக, அளவுக்கதிகமான திரைக்கவர்ச்சி வேறு! ஊழல், இலஞ்சத்தின் விதையே வாக்குக்குக் காசு கொடுக்கும்போதுதான் ஊன்றப்படுகிறது. இந்தக் கட்டமைப்புகளைத் தகர்த்து, ஒருவர் மேலே ஏறி வருவது மிகவும் கடினம் என்பதை தம்பி ஆரியின் கதாபாத்திரம் வலியுறுத்துகிறது.

மனிதத்தைக் காப்பாற்றுவதை விட்டுவிட்டு, மதத்தைக் காப்பாற்ற இங்கே பல இயக்கங்கள் உள்ளன. கும்பிடுவதற்கு உங்களுக்கு கோடி சாமிகள் இருக்கலாம். ஆனால், வாழ்வதற்கு இந்த ஒரு பூமிதான் இருக்கிறது. சாமியைக் காப்பாற்ற இங்கே பெருங்கூட்டம் உள்ளது. ஆனால், வாழ்கிற பூமியைக் காப்பாற்ற ஒருவரும் இல்லை. மதத்தைத் தாண்டியது மனிதம் என்ற கருத்தைத் தம்பி கலையரசன் ஏற்றிருக்கும் அமீர் சுல்தான் கதாபாத்திரம் வெளிப்படுத்துகிறது. தகுதியிருந்தும், திறன் இருந்தும் உரிய இடத்தைத் தொட முடியாமல் ஒரு இளைஞன் இந்த சமூகத்தால் எவ்வளவு தூரம் புறக்கணிக்கப்பட்டுத் தத்தளிக்கிறான்? என்பதை அந்தக் கதாபாத்திரம் அழகாகச் சொல்கிறது. நேர்த்தியான உரையாடல்களுடன், வலிதோய்ந்த வார்த்தைகளுடன் இருக்கும் காட்சிகளை எழுதுவதற்கு இன்றைக்கு சேரன் அளவுக்கு வேறு எவரும் இல்லை. வாழ்க்கையில் தவறுசெய்யாதவர்கள் எவரும் இல்லை. ஆனால், தவறைத் திருத்திக் கொண்டு, அதற்காக வருந்துவது மிகச்சிறந்த மனிதத்துவம். தவறு செய்வது மனித இயல்பு. ஆனால், அதைத் திருத்திக் கொண்டு வாழ்வது ஆகப்பெரும் மாண்பு. செய்யாத தவறுக்காகத் தன்னைத் தானே மனச்சிறையிட்டு வருத்திக் கொள்வதை தம்பி கஸ்யாப் ஏற்றிருக்கும் நிதீஷ் என்கிற கதாபாத்திரம் வெளிப்படுத்துகிறது.

கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு! ‘கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சைப் புகினும் கற்கை நன்றே’ என்கிறார் ஒளவைப்பெருமாட்டி. ‘தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு’ என்கிறார் தமிழ் மறையோன் வள்ளுவப்பெருமகனார். ஆனால், படிக்க முடியாமல் எவ்வளவோ மாணவர்கள் பாதியிலேயே படிப்பை நிறுத்தி விடுகின்றனர்; கட்டணம் செலுத்த முடியாமல் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோகின்றனர். அதற்குக் காரணம், கல்வி வியாபாரமானதுதான். ஒரு நாட்டின் எதிர்காலமே அந்த நாட்டின் வகுப்பறையில்தான் தீர்மானிக்கப்படுகிறது. அந்தக் கல்வி கிடைக்காமல் எத்தனையோ பிள்ளைகள் அறிவுப்பசியோடு அலைகிறார்கள். வயிறு பசிப்பதைப் போல, மூளைக்கும் அறிவுப்பசி உண்டு, அதைக் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது தம்பி பிரசன்னா நடித்திருக்கும் ராகவ் என்கிற கதாபாத்திரம்.

(2/3)

Exit mobile version