முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

என் உயிரோடு கலந்து வாழ்கிற எனதன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!…

0

என் உயிரோடு கலந்து வாழ்கிற எனதன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

https://t.co/H4kTobMDgh

மண்ணின் மகத்தானப் படைப்பாளி எனது ஆருயிர் இளவல் சேரன் (@directorcheran) அவர்களது இயக்கத்தில் #JOURNEY எனும் குறுந்தொடர் வெளியாகியிருக்கிறது. தமிழ்த்திரையுலகின் ஆகச்சிறந்தப் படைப்பாளிகளில் தம்பி சேரனும் ஒருவர். அவர் படைத்த பாரதி கண்ணம்மா, பொக்கிஷம், வெற்றிக்கொடி கட்டு, தவமாய் தவமிருந்து, ஆட்டோகிராப், பாண்டவர் பூமி, பொற்காலம் போன்றவை மிகச்சிறந்தப் படைப்புகள்; காலம் கடந்தும் மக்கள் மனதில் நிற்கும் தலைசிறந்தத் திரைப்படங்கள்! எளிய மனிதர்களுடைய வாழ்வியலை திரைமொழியில் மிக அழகாகக் காட்சிப்படுத்தும் ஆகப்பெரும் படைப்பாளி தம்பி சேரன். அவர் தன்னுடைய மொத்த ஆற்றலையும் ஒன்றுதிரட்டி படைத்தப் படைப்பாகத்தான் இந்த ‘Journey’ என்கிற குறுந்தொடரைப் பார்க்கிறேன். இது தம்பி சேரனின் பயணம்!

இதயத்துடிப்பு நின்றுபோனவன் மட்டும் இறந்தவனல்ல; இலட்சியம் இல்லாதவனும்கூட இறந்துபோனவன்தான். மூச்சை நிறுத்திக் கொண்டவன் மட்டும் இறந்துபோனவனல்ல; முயற்சியை நிறுத்திக் கொண்டவனும் இறந்துபோனவன்தான். இந்தக் கருத்துக்களை வலியுறுத்தி இன்றைய இளைஞர்கள் எதை நோக்கிச் செல்கிறார்கள்? அவர்களுக்கு என்ன மாதிரியான தேடல் இருக்கிறது? எது அவர்களுடைய இலக்காக இருக்கிறது? எது அவர்களுடைய இலக்காக இருக்க வேண்டும்? என்பது போன்ற ஆழமான சிந்தனைகளை இந்தக் குறுந்தொடர் விதைக்கிறது. இன்றைய தலைமுறை கற்கும் கல்வி என்பதே தொழில் சார்ந்த, வர்த்தகம் சார்ந்த ஒன்றாக மாறிவிட்டது. இந்தக் கல்வியைப் படித்தால் இவ்வளவு வருமானம், வெளிநாட்டில் வேலை என்றுதான் கற்பிக்கப்படுகிறது. ஒரு மாணவன், மாவட்ட ஆட்சியராக தான் ஆக வேண்டும் என்கிற எண்ணம் கொண்டால், அது வெறும் தொழில் தேர்வுதானே ஒழிய, இலக்கல்ல; தான் மாவட்ட ஆட்சியரானப்பிறகு, கையூட்டுபெறாமல், ஊழல்செய்யாமல், உண்மையும், நேர்மையுமாக இருந்து, மக்களுக்குச் சேவைசெய்வேன் எனும் குறிக்கோளை ஏற்றால், அதுதான் உண்மையான இலக்கு! ஒருவன் தான் பெரிய இயக்குநராக வேண்டும் என எண்ணினால், அது வெறும் தொழில் தேர்வுதான். இயக்குநரானப் பின்பு, ஆகச்சிறந்தப் படங்களை, ஆபாசமில்லாத, அதீத வன்முறைகள் இல்லாத, சிறந்த கலைப் படைப்புகளை மண்ணுக்கும், மக்களுக்குமாக படைக்கப் போகிறேன் என்னும் குறிக்கோள் கொண்டால் அதுதான் இலக்கு! அப்படி ஐந்து கதாபாத்திரங்களை, கதை மாந்தர்களாக எடுத்துக்கொண்டு, தத்தளித்துக் கொண்டிருக்கும் அந்த இளைஞர்களின் உள்ளத்தில், வேளாண்மையின் முக்கியத்துவத்தை, அதன் அவசியத்தை ஊன்றுகிறது இக்கதை. நீங்கள் எந்த வேலையும் செய்யலாம். ஆனால், அதற்கு அடிப்படை விவசாயம்தான். வேளாண்மை செய்யாமல் வாழ முடியாது என்கிற ஆழமான கருத்தை இப்பயணம் வலியுறுத்துகிறது.

500 அடிக்குக் கீழேயுள்ள நீரை ஆழ்துளைக்கிணறுகள் மூலம் நாம் உறிஞ்சிவிட்டால், மரங்கள் அதேபோல தன் வேரை அனுப்பி நீரை உறிஞ்சிக் கொள்ள முடியுமா? புல், பூண்டு, செடி, கொடி, மரங்கள் என யாவற்றுக்கும் நாம் செய்யும் பெரும் துரோகம் இல்லையா அது? மகிழுந்து இல்லாமல், அலைபேசி இல்லாமல், தொலைக்காட்சி இல்லாமல் மனிதனால் வாழ முடியும். ஆனால், நீரும், சோறும் இல்லாமல் வாழவே முடியாது. அதைக் கடந்த ஆண்டுகளில் 'கொரோனா' எனும் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரி நமக்கு உணர்த்தியது. நல்ல வேலைக்குச் சென்றால், இலட்சக்கணக்கில் கை நிறைய சம்பாதிக்கலாம் என நினைக்கிறார்கள். அரிசி, பருப்பு, காய்கறி போன்றவைகளைக் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம் என எண்ணுகிறார்கள். ஆனால், கடைகளுக்கு அவை எப்படி வரும்? என்பதை யாரும் சிந்திப்பதே இல்லை. குண்டூசி, தீப்பெட்டியிலிருந்து அவனவன் உற்பத்திசெய்யும் பொருட்களுக்கு அவனே விலையைத் தீர்மானிக்கிறான். ஆனால், வேளாண் குடிமகன் தான் விளைய வைக்கும் எந்தப் பொருளுக்கும் விலையைத் தீர்மானிக்க முடிவதில்லை; வாங்குபவன்தான் தீர்மானிக்கிறான். இதுதான் இங்கே முரணாக உள்ளது. வாகனங்களை விற்பவர்கள், அலைபேசிகளை விற்பவர்கள், சாராயத்தை விற்பவர்கள், புகையிலைகளை விற்பவர்கள் என எல்லோரும் பல கோடிகளுக்குச் சொத்து சேர்த்து வைத்திருக்கிறார்கள். ஆனால், உலகத்திற்கே உணவளித்து, உழவுசெய்யும் வேளாண் குடிமகன் பிச்சைக்காரனாக இருக்கிறான்; வாழ முடியாமல் தற்கொலை செய்து இறந்துபோகிறான். மகிழுந்து இல்லை; அலைபேசி இல்லை என்று எந்த நாட்டிலும் புரட்சி வந்ததில்லை. ஆனால், நீரும், சோறும் இல்லையென்றால், எந்த நாட்டிலும் புரட்சி வராமல் இருந்ததில்லை. வெனிசூலா, சோமாலியா, நைஜீரியா போன்ற நாடுகள் வேளாண்மையைக் கைவிட்டதால், பிச்சை எடுக்கின்றன அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதாரச்சரிவை நாம் கண் முன்னே பார்த்தோம்.
(1/3)

Exit mobile version