முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

“பாலுக்கு அழாத குழந்தை, கல்விக்கு ஏங்காத மாணவன், வேலைக்கு அலையாத…

0

"பாலுக்கு அழாத குழந்தை, கல்விக்கு ஏங்காத மாணவன், வேலைக்கு அலையாத இளைஞன் இதுவே என் கனவு இந்தியா" என்றார் இளையப் புரட்சியாளர் பகத்சிங். விடுதலைபெற்று 76 ஆண்டுகாலம் ஆகிவிட்டது. கல்விக்கு ஏங்காத மாணவனோ, வேலைக்கு அலையாத இளைஞனோ இல்லை என்கிற நிலை இன்னும் உருவாகவில்லை. இரவு உணவு இல்லாமல் இன்னும் கோடிக்கணக்கான பிள்ளைகள் உறங்கப்போகிறார்கள்; பாலுக்குக் குழந்தைகள் அழுது கொண்டுதான் இருக்கின்றன. பகத்சிங் கண்ட அந்தக் கனவு இன்னும் நிறைவேறாதுதான் இருக்கிறது. அதை நிறைவேற்றத் துடிக்கிற எழுச்சிமிக்க, சிந்தனை வளம்மிக்க, தன்னலமற்ற ஒரு மனிதனின் கனவு தான் இந்த ‘Journey’ என்கிற தம்பி சேரனின் பயணம்!

தம்பி சத்யாவின் மிகச் சிறப்பான பின்னணி இசை, தம்பி ஏகாம்பரத்தின் அருமையான ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, கலை, இயக்கம் என எல்லாமே இக்குறுந்தொடரில் சிறப்பாக அமைந்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக இது தம்பி சேரனினுடைய கனவு! அதை மிக அழகாக திரையில் கூறியிருக்கிறார். நாம் ரசிப்பதற்கு எத்தனையோ குறுந்தொடர்கள் வந்திருக்கின்றன. ஆனால், இந்தக் குறுந்தொடர் நாம் சிந்திப்பதற்கு, அதன்வழி நடப்பதற்கானது! புத்தகம் என்பது தொட்டுப் பார்த்தால் காகிதம்; தொடர்ந்து படித்தால் பேராயுதம். உள்ளிருப்பது தாள்கள் அல்ல; நம்மை நல்வழி நடத்தும் கால்கள்! அதுபோன்று இக்குறுந்தொடர் வெறும் பொழுதுபோக்குக்காக அல்ல! வருங்காலத் தலைமுறையின் நெஞ்சுக்குள் நஞ்சு விழாமல், நல்ல மணிகளை விதைத்து, ஒரு வளமான சமூகத்தை உருவாக்குவதற்கான ஐந்து வீரிய விதைகளை விதைத்திருக்கிற ஒரு குறுந்தொடர் சேரனின் இந்தப் பயணம். அதை தயாரிக்க முன் வந்த சோனி நிறுவனத்திற்கு என்னுடைய பேரன்பும், வாழ்த்துகளும், நன்றியும்!
இந்தக் குறுந்தொடர் மாபெரும் வெற்றியடைய என் உள்ளம் நிறைந்த அன்போடு வாழ்த்துகிறேன். உலகமெங்கும் பரவி வாழ்கிற என் உயிருக்கினிய உறவுகள் இக்குறுந்தொடருக்குப் பேராதரவு தந்து வெற்றிபெறச் செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

(3/3)

Exit mobile version