தலைச்சிறந்த நூல்களை வாசிப்பதுதான் அவைக்கு அஞ்சாமல் தர்க்க வாதத்தில் வெல்வதற்கான வழி என்பதை, ‘ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா மாற்றங் கொடுத்தற் பொருட்டு’ என்ற குறளின் மூலம் தெளிவுப்படுத்துகிறார் தமிழ்மறை தந்த வள்ளுவப்பெரும்பாட்டன்.
‘வாசிப்பு மனித ஆன்மாவை சமநிலைப்படுத்தும்’ என்கிறார் கிரேக்க அறிஞர் பிளேட்டோ.
‘இன்றைய வாசிப்பாளன் நாளைய தலைவன்’ என்கிறார் மார்கரெட் புல்லர்.
‘நான் என் வாழ்க்கையில் கற்றுக் கொண்ட எல்லா நல்ல விஷயங்களும் புத்தகங்கள் மூலமாகத்தான்’ என்கிறார் முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன்
புத்தகங்கள் என்பது தொட்டுப் பார்த்தால் வெறும் காகிதம்; தொடர்ந்து படித்தால் அதுவே பேராயுதம்!
தலைகுனிந்து படித்தவர்களே உலகில் தலைநிமிர்ந்து நிற்கிறார்கள்!
அறிவை விரிவாக்கு! என்பதே நம்முடைய கொள்கை முழக்கத்தின் முதல் வரி!
எனவே, என்னருந் தமிழிளந்தலைமுறை பிள்ளைகள், தாய்த் தமிழ் உறவுகள் சுவாசிப்பதைப் போல வாசிப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். அதற்கு ஆகப்பெரும் வாய்ப்பாக தற்போது சென்னையில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சி அமைந்துள்ளது. வருகின்ற 08.01.26 முதல் 21.01.26 வரை நடைபெறவிருக்கும் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு என்னரும் தம்பி-தங்கைகள் ஒவ்வொருவரும் அவசியம் சென்று, நல்ல புத்தகங்களைத் தேடி வாங்கி சேகரித்து வாசித்து, தர்க்க வாதத்தில் தலைசிறந்தவர்களாகத் தங்களை வளர்த்துக்கொள்ள வேண்டுமென அன்புடன் அறிவுறுத்துகிறேன்.
அதோடு, டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தாருக்கு இந்த ஆண்டு சென்னை புத்தக கண்காட்சியில் பங்குபெற தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை கே. கே. நகரில் அமைந்துள்ள டிஸ்கவரி புக் பேலஸ் புத்தக நிலையத்தில் ஜனவரி 9 முதல் 31 வரை தள்ளுபடி விலையில் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. ஆகவே, சென்னை புத்தக கண்காட்சிக்கு வரும் அன்பு உறவுகள் மறக்காமல், டிஸ்கவரி புக் பேலஸ் புத்தக நிலையத்திற்கும் சென்று அறிவை வளர்க்கும் நல்ல புத்தகங்களை வாங்கி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி




