தமிழ்நாடு என்ற சுடர்மிகு பெயரை மீண்டும் சூட்ட வேண்டும் என்பதற்காக பெருந்தமிழர் சங்கரலிங்கனார் பட்டினி போராட்டம் நடத்தி தன் இன்னுயிர் ஈந்தார். சென்னை இராச்சியத்திற்கு தமிழ்நாடு எனப் பெயரிட வேண்டும், அனைத்து மொழிகளையும் அலுவல்மொழிகள் ஆக்கிட வேண்டும், நாடு முழுவதும் மதுவிலக்கைக் கொண்டு வரவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 1956 சூலை 27 முதல் தொடங்கி 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த நம்முடைய தாத்தா ஈகி சங்கரலிங்கனர் பிறந்த நாள் இன்று!
ஆனால், அப்பெருமகனின் ஈகத்தை மறைத்து தமிழ்நாட்டிற்கு நாங்கள்தான் தமிழ்நாடு என்று பெயர் வைத்தோம் என்று பெருமை பேசிய திராவிடத் திருவாளர்கள், இன்றைக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் தமிழ்நாடு என்ற பெயரை அழித்து இருட்டடிப்பு செய்துவிட்டனர். தமிழ்நாடு என்று பெயர் வைத்த நாள்தான் ‘தமிழ்நாடு நாள்’ என்று அறிவித்தவர்கள், தமிழ்நாடு என்ற பெயரை அரசின் பேருந்துகளில் எழுத மறுக்கின்றனர். மாநிலத்தின் பெயரைத் தவிர பள்ளி, கல்லூரி, மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து இடங்களிலிருந்தும் தமிழ்நாடு பெயரை எடுத்துவிட்டு வெறும் அரசு கல்லூரி, அரசு மருத்துவமனை என்று மட்டும் எழுதியுள்ள அவலநிலை இன்று உள்ளது. அரசு என்றால் எந்த அரசு? ஒன்றிய அரசா? ஆந்திர அரசா? அல்லது கர்நாடக அரசா? தமிழ்நாடு அரசுதானே! அதனை முழுதாய் எழுதுவதில் என்ன தயக்கம். அண்டை மாநிலங்கள் அனைத்தும் தங்கள் மாநிலப்பெயரை பெருமையோடு பேருந்துகளில் எழுதியிருக்க, திமுக அரசுக்கு மட்டும் தமிழ்நாடு என்ற பெயர் அவமானமாக இருக்கிறது. ‘செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே’ என்று பாட்டன் பாடியது போல நமக்கெல்லாம் என்றைக்கும் இனிக்கும் ‘தமிழ்நாடு’ பெயர் திமுக அரசுக்கு மட்டும் கசக்கிறது. ஆட்சி அதிகார துணைகொண்டு நடைபெறும் இந்த அட்டூழியங்கள் அனைத்திற்கும் விரைவில் முடிவு கட்டுவோம்.
தாத்தா சங்கரலிங்கனார் அவர்களின் நினைவைப் போற்றுகிற இந்நாளில், எதன் பொருட்டும் உயிர் நிகர் ‘தமிழ்நாடு’ பெயரை விட்டுத்தர மாட்டோம். மீண்டும் அனைத்து இடங்களிலும் ‘தமிழ்நாடு’ என்ற பெயரை நிலைப்பெறச் செய்வோம் என்ற உறுதியை ஏற்பதுதான் அப்பெருமகனுக்கு நாம் செலுத்துகிற உண்மையான புகழ் வணக்கமாக இருக்க முடியும்.
தமிழ்நாடு பெயர் சூட்டத் தன்னுயிர் ஈந்த போற்றுதற்கும், வணக்கத்திற்கும் உரியப் பெருந்தகை நம்முடைய தாத்தா ஈகி சங்கரலிங்கனார் அவர்களின் பேரீகப் பெரும்புகழ் போற்றுவோம்!
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி





