முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

கனிமவளக் கொள்ளை குறித்து செய்தி சேகரிக்க சென்ற News தமிழ்…

0

கனிமவளக் கொள்ளை குறித்து செய்தி சேகரிக்க சென்ற News தமிழ் 24/7 செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் மீது
கொலைவெறித் தாக்குதல் நடத்திய திமுக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவருடைய அடியாட்கள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும்!

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சிவாயம் கிராம பகுதியில் செயல்படும் கல்குவாரியில், சட்டத்திற்கு புறம்பாக அரசு அனுமதித்த அளவைவிட அதிகமாக கனிமவளம் அள்ளப்பட்டு வருகிறது. நாள்தோறும் நடைபெறும் கனிமவளக் கொள்ளை குறித்து, செய்தி சேகரிக்க சென்ற News தமிழ் 24/7 ஊடகத்தின் திருச்சி செய்தியாளர் கதிரவன் மற்றும் ஒளிப்பதிவாளர் செபாஸ்டியன் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தி முறைகேடாக கல்குவாரியை நடத்தும் திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டிதான் தனது அடியாட்களுடன், அதிகார மமதையுடன் இக்கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

5 ஆண்டுகால திமுக ஆட்சியில் பெண்கள் – குழந்தைகள் முதல் அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், ஏன் உண்மையை வெளிக்கொணரும் ஊடகவியலாளர்களுக்கே பாதுகாப்பு இல்லாத
கொடுஞ்சூழல் நிலவுவதுதான் பெருங்கொடுமை.

தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்று முதல் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை ஆகியவை நடைபெறாத நாட்களே இல்லை என்ற அளவிற்குச் சட்டம்-ஒழுங்கு முற்றுமுழுதாக சீரழிந்துள்ளது. திமுக ஆட்சியில் கடன் வாங்குவதிலும், கள்ளச்சாராய விற்பனையிலும், கட்டுக்கடங்காத கஞ்சா புழக்கத்திலும், கனிமவளக் கொள்ளையிலும்தான் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக மாறிநிற்கிறது.

கடந்த 2023ஆம் ஆண்டு மணற்கொள்ளையை தடுக்க முயன்ற தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு – கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் அரசு அலுவலகத்திலேயே மணற்கொள்ளையர்களால் வெட்டிக் கொல்லப்பட்டது முதல், கடந்த ஆண்டு கனிமவளக்கொள்ளைக்கு எதிராக போராடிய திருநெல்வேலியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அன்புத்தம்பி பெர்ட்டின் ராயன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, திருமயம் சமூக ஆர்வலர் ஜகுபர் அலி கனிமவளக் கொள்ளையர்களால் வாகனம் ஏற்றி படுகொலை செய்யப்பட்டார். தற்போது ழிமீஷ்s தமிழ் 24/7 செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது வரை கனிமவளக் கொள்ளையர்கள் நிகழ்த்தும் வன்முறை வெறியாட்டங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. அதனை தடுத்து நிறுத்தாமல் திமுக அரசு வேடிக்கைப் பார்ப்பது வெட்கக்கேடானது.

சமூக அவலங்களுக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்தும் சமூக ஆர்வலர்களுக்கே பாதுகாப்பு இல்லையென்றால் திமுக ஆட்சியில் சாமானிய மக்களின் நிலை என்ன? கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடுபவர்களை அரசே கைது செய்வதும், கூலிப்படைகள் மூலமாக கொல்லப்படுவதும் தொடர்கதையாகிவிட்ட திமுக ஆட்சி மக்களுக்கானதா? அல்லது கனிமவளக் கொள்ளையர்களுக்கானதா? அரசு அலுவலர் முதல் சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் வரை உண்மையும் நேர்மையுமாக மக்களுக்கும் மண்ணிற்கும் போராடும் போராளிகள் கொல்லப்படுவதுதான் திராவிட மாடலா? என்ற
கேள்வி எழுகிறது.

ஆகவே, கனிமவளக்கொள்ளை குறித்து செய்தி சேகரிக்க சென்ற News தமிழ் 24/7 செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய திமுக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவருடைய அடியாட்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, கைது செய்வதோடு சட்டப்படி கடும் தண்டனைப் பெற்றுத்தர வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Exit mobile version