திருப்பெரும்புதூர் செயிண்ட் ஜோசப் சட்டக் கல்லூரி மாணவி அன்பு மகள் பாரதி தற்கொலைக்குக் காரணமானவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்!
@CMOTamilnadu
@mkstalin
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூரில் இயங்கி வரும் செயிண்ட் ஜோசப் சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்த அன்பு மகள் பாரதி தேர்வில் பார்த்து எழுதியதாகக் கூறி, தேர்வு எழுத அனுமதிக்க மறுத்ததோடு, வேறு வகுப்புக்கு மாற்றப்படுவாய் என்றும் கல்லூரி நிர்வாகம் கடுமையாக மிரட்டியதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி மகள் பாரதி தற்கொலை செய்துகொண்ட துயர நிகழ்வறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். பெற்ற மகளை இழந்து வாடும் பாரதியின் பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத்தெரிவித்துத் துயரில் பங்கெடுக்கின்றேன்.
பாரதியின் பெற்றோர் நேரில் சென்று காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு, மகள் மீதான கடும் நடவடிக்கையை கைவிட வேண்டி கோரிக்கை விடுத்தும், கல்லூரி நிர்வாகம் உரிய பதிலை அளிக்கவில்லை. வேறு வழியின்றி கல்லூரியை விட்டு விலகிக்கொள்கிறேன் என்று பாரதியின் பெற்றோர் தெரிவித்த பிறகும் கட்டணத்தைத் திருப்பித் தர இயலாது என்று கூறி, விலகவும் அனுமதி மறுத்து கல்லூரி நிர்வாகம் கடுமையாக எச்சரித்ததன் காரணமாக, பெரும் மன அழுத்தத்திற்கு ஆளான மகள் பாரதி தற்கொலை செய்துகொண்டுள்ளார். சிறிய தவறுக்கு மிகக் கடுமையாக நடந்துகொண்ட கல்லூரி நிர்வாகத்தின் சிறிதும் மனச்சான்று இல்லாத கொடும்போக்கே அன்பு மகள் பாரதியின் தற்கொலைக்கு முழுக்காரணமாகும்.
ஆகவே, தமிழ்நாடு அரசு உடனடியாக அன்புமகள் பாரதி தற்கொலைக்குக் காரணமான திருப்பெரும்புதூர் செயிண்ட் ஜோசப் சட்டக் கல்லூரி நிர்வாகத்தின் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி




