முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

குரூப்-4 தேர்வு மூலம் நடப்பாண்டில் குறைந்தப்பட்சம் 30,௦௦௦ காலிப்பணியிடங்களையாவது நிரப்ப…

0

குரூப்-4 தேர்வு மூலம் நடப்பாண்டில் குறைந்தப்பட்சம் 30,௦௦௦ காலிப்பணியிடங்களையாவது நிரப்ப தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்!

@CMOTamilnadu @mkstalin

அரசுத்துறைகளில் மூன்றரை இலட்சத்திற்கும் மேல் காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில், குரூப்-4 தேர்வு மூலம் நடப்பாண்டில் வெறும் 4622 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படும் என்ற திமுக அரசின் அறிவிப்பு வன்மையான கண்டனத்திற்குரியது. ஆட்சிக்கு வந்தால் 3.5 இலட்சம தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவோம் என வாக்குறுதி அளித்த திமுக, அதிகாரத்தை அடைந்த பிறகு அதனை நிறைவேற்ற மறுப்பது ஆட்சியில் அமர்த்திய தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.

அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வுகள் நடத்தி அரசுத்துறைகளில் காலியாக உள்ளப் பணியிடங்களை தமிழ்நாடு அரசு, ஒவ்வொரு ஆண்டும் நிரப்பி வருகிறது. முந்தைய அதிமுக அரசு 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் சராசரியாக 10000 பணியிடங்கள் என்ற அளவில் பணியிடங்களை நிரப்பி வந்தது. அதுமட்டுமின்றி, கொரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக 2020 மற்றும் 2021 ஆகிய இரண்டு ஆண்டுகளில் எவ்வித அரசுத்தேர்வும் நடைபெறவில்லை. மேலும், கடந்த நான்கு ஆண்டுகளில் ஓய்வுபெற்றோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதன் காரணமாக அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களும் 4 இலட்சத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி இளைஞர்கள் பலரும் அரசுப்பணியில் சேர முயன்று வருவதால் போட்டித் தேர்வர்களின் எண்ணிக்கையும் பல இலட்சக்கணக்கில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது ஆட்சிக்கு வந்தால் மூன்றரை இலட்சம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது. இதனால் அதிக காலிப்பணியிடங்களுக்குப் போட்டித் தேர்வு நடைபெறும் என்று தமிழ்நாட்டு இளைஞர்கள் எதிர்பார்த்த நிலையில், இரண்டாண்டு கொரோனா இடைவெளிக்குப் பிறகு 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வில் வெறும் 10,300 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படும் என்று திமுக அரசு அறிவித்து ஏமாற்றியது. குறைந்தபட்சம் 15000 பணியிடங்களையாவது நிரப்ப வேண்டும் என்ற தேர்வர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த திமுக அரசு, 2023 ஆம் ஆண்டு குரூப் 4 தேர்வு நடத்தாமல் போட்டித் தேர்வர்கள் வயிற்றில் அடித்தது. அதனைத்தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வில் வெறும் 9532 காலிப்பணியிடங்களை மட்டுமே நிரப்பி வஞ்சித்தது. இந்நிலையில் ஆட்சி முடியும் நடப்பு கடைசி ஆண்டிலாவது திமுக அரசு குறைந்தபட்சம் 30,000 பணியிடங்களையாவது நிரப்பும் என்று தேர்வெழுதும் இளைஞர்கள் எதிர்ப்பார்த்திருந்த நிலையில், இதுவரை இல்லாத அளவிற்கு மிகமிக குறைந்த அளவாக வெறும் 3945 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படும் என்று அறிவித்து திமுக அரசு அதிர்ச்சியளித்தது. அதன்பின், பிற்சேர்க்கையாக கூடுதலாக 747 இடங்களை சேர்த்து மொத்தம் 4622 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படும் என்று தற்போது அறிவித்துள்ளது. இதனால் அரசுப்பணி கனவு நனவாகும் என்று நம்பிக்கையோடு, இரவு பகலாக கண்துஞ்சாது படித்து, கடுமையாக உழைத்த அன்பு தம்பி தங்கைகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினர்.

தற்போது, தமிழ்நாடு முழுவதும் அரசுத்துறைகளில் பல இலட்சம் காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில், குரூப் 4 தேர்வில் அதிக காலிப்பணியிடங்களை நிரப்ப திமுக அரசு முன்வாராதது ஏன்? முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு மிகக்குறைந்த பணியிடங்களை நிரப்புவது ஏன்? கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது 3.5 இலட்சம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அரசுப் பணி வழங்குவோம் என்று திமுக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றப்போவது எப்போது? கடந்த 4 ஆண்டுகளில் திமுக அரசால் நிரப்பப்பட்ட காலி பணியிடங்களை விட, ஓய்வு பெறுவதினால் உருவான காலி பணியிடங்கள் பன்மடங்கு அதிகம். அரசுத்துறைகள் சிறப்பாகச் செயல்பட ஊழியர் பற்றாக்குறையைப் போக்கி காலி பணியிடங்களே இல்லை என்ற சூழலை உருவாக்க வேண்டுமா இல்லையா? திமுக அரசு இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்கள் வேலை வாய்ப்பினை பெறும் வகையில் போட்டித்தேர்வு வாயிலாக அதிகளவு பணியிடங்களை நிரப்புவதில் உரிய அக்கறை காட்டாதது ஏன்? என்ற கேள்வி ஒவ்வொரு இளைய தலைமுறை பிள்ளைகளிடமும் எழுகிறது.

ஆகவே, தமிழ்நாடு அரசு தங்களின் வாழ்நாள் இலட்சியமாக அரசுப்பணி போட்டித்தேர்வுக்கு முயற்சிக்கும் இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்கள் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வு மூலம் நடப்பாண்டில் குறைந்தப்பட்சம் 30,000 காலிப்பணியிடங்களை நிரப்ப உடனடியாக அரசாணை வெளியிட வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Exit mobile version