வீழ்ந்துவிட்ட எந்தவொரு இனத்திற்கும் வரலாறுதான் வழிகாட்டுகிறது! எங்கே வீழ்ந்தோம், எங்கே வாழ்ந்தோம் என்பதை வரலாறுதான் நமக்குப் படிப்பிக்கும்!
அதையேதான் நம்முயிர் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள், ‘இயற்கை என் நண்பன், வாழ்க்கை என் தத்துவ ஆசிரியன், வரலாறு எனது வழிகாட்டி!’ என்கிறார். ‘அடிமை வாழ்வினும்; உரிமைச்சாவு மேலானது!’ என்பது மானத்தமிழ் முன்னோர்கள் கொண்டிருந்த உயிர்க்கோட்பாடு!
அந்த வழிவழியே வந்த வீரத்தமிழ்மறவர்தான் பொன்பரப்பியில் பூத்த புரட்சி தீ, எங்களைப்போன்ற பிள்ளைகளின் முன்னத்தி ஏர், மூத்த வழித்தடம், தமிழ்த்தேசிய இனப்போராளி அண்ணன் தமிழரசன் அவர்கள்!
மற்ற மொழிவழி தேசிய இனங்களைப்போல தமிழினமும் உரிமைப்பெற்று பெருமையோடு வாழ்ந்துவிடாதா? என்று ஏங்கிய எமது முன்னவர்களில் முதன்மையானவர்.
‘சாதியை ஒழிக்காமல் தமிழ்ச்சமூக ஓர்மைஇல்லை; தமிழ்ச்சமூக ஓர்மை இல்லாமல் அதிகார வலிமை இல்லை; அதிகார வலிமை இல்லாமல் தமிழர் விடுதலை இல்லை’ என்கிற அடிப்படை அரசியல் புரிதலோடு பெரும்படை கட்டி எழுப்பிய மாவீரன் அண்ணன் தமிழரசன் நினைவைப் போற்றுகின்ற இந்நாளில், அவர் தாங்கிபிடித்த தமிழ்த்தேசிய தத்துவ வழி நிற்கும் உடன் பிறந்த உறவுகளான நாங்கள் அவ்வீரத்தமிழ் மறவனின் நினைவைப்போற்றுவதில் பெருமையடைகிறோம்!
தமிழ்த்தேசியப் போராளி அண்ணன் தமிழரசன் அவர்களுக்கு வீரவணக்கம்!
#நாம்தமிழர்!
– செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி