முறையான திட்டமிடல், எளிதான பயணம், சீரிய செயல்! இவையே வெற்றிக்கான வழி!

9
உயிருக்கினிய தாய்த்தமிழ் உறவுகளுக்கு அன்பு வணக்கம்..! நடைபெறவிருக்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்களில், நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக, ‘விவசாயி’ சின்னத்தில் வாக்கு சேகரித்து, மக்களிடம் இடையறாது பரப்புரையில் ஈடுபட்டு வரும் அன்பு உறவுகள் அனைவருக்கும் என்னுடைய அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன். தேர்தல் பரப்புரையில் உங்களின் ஈடு இணையற்ற உழைப்பைக் காட்டும் காணொளிகள் பெருமிதத்தை தருகின்றன. ‘புதியதொரு தேசம் செய்வோம், மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம்’ என்ற இலட்சிய முழக்கத்தோடு தாய்த்தமிழ்நாட்டில் அரசியல் புரட்சியை நிகழ்த்திட, தொடர்ச்சியாகக் களத்தில் நிற்கிறது நாம் தமிழர் கட்சி. தன்னிகரில்லா தமிழ்த்தேசிய தத்துவத்தோடும், தனித்துவத்தோடும், மக்களின் துணையோடும் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வாக்கு விழுக்காடு, ஒவ்வொரு தேர்தலிலும் உயர்வதற்கு, உங்கள் ஒவ்வொருவரின் உழைப்பும், ஒப்படைப்பும் அளப்பரியது. போதிய பொருளாதாரப் பலம் இன்றி, போதிய ஊடக வெளிச்சமின்றி, கடுமையான புறக்கணிப்புகளுக்கு நடுவில், ஊண் உறக்கமின்றி, சோர்வுறாது, அயராது களத்தில் புலியெனப் பாயும் உங்களின் கடின உழைப்பும், உறுதியும்தான் நாம் தமிழர் கட்சியை மூன்றாவது பெரிய கட்சியாக உருமாற்றியது. அரசியல் சூழ்ச்சியால் சின்னம் பறிக்கப்பட்டபோது உங்கள் ஒவ்வொருவரின் அயராத உழைப்புதான் நம்மை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக உயர்த்தி, விவசாயி சின்னத்தை நமக்கான நிரந்தரச் சின்னமாக்க உற்றதுணையாக நின்றது. ‘அனைத்துத் துன்பப் பூட்டுகளுக்குமான சாவி ஆட்சி அதிகாரம் மட்டும்தான்; அதிகாரம் மிக வலிமையானது’ என்கிறார் அறிவாசான் அண்ணல் அம்பேத்கர் அவர்கள். அதனை அடைந்துவிட்டால் அனைத்தும் மிக எளிமையானது என்கிறோம் நாம். ஆகவே, அங்கீகாரத்தை பெற்ற நாம் தமிழர் கட்சி, அடுத்த படிநிலையாக அதிகாரத்தை நோக்கி அடி எடுத்து வைக்க வேண்டிய அதிமுக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் இது. தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களை நெஞ்சில் சுமந்து நிற்கும் எளிய பிள்ளைகளாக, தமிழ் மண்ணிற்கும், மக்களுக்கும் உண்மையும் – நேர்மையுமாக நிற்கும் தமிழ்த்தேசியத் தத்துவக் கூட்டத்திற்கும், ஊழல், லஞ்சம், இலவசம், திரைக்கவர்ச்சி என்று நிற்கும் தீய திராவிடக் கூடாரத்திற்கும் இடையே நடைபெறும் அதிகாரப் போர்தான் இந்தத் தேர்தல். வளர்ச்சி அரசியலுக்கும், வெற்று விளம்பரக் கவர்ச்சி அரசியலுக்கும் இடையே நடக்கும் இப்போட்டியில் நாம் வரலாற்று வெற்றியைப் பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பதை உணர்ந்து, என் அன்புப் பிள்ளைகள் களத்தில் கடுமையான உழைப்பைச் செலுத்த வேண்டும். கடந்த காலங்களில் சந்தித்த அவமதிப்புகள், இழிசொற்கள், துரோகங்கள் யாவற்றையும் துடைத்தெறிய, அதிகாரத்தை வெல்ல வேண்டிய அதிமுக்கிய தேர்தல் இது என்பதை உணர்ந்து ஒற்றுமையாக செயலாற்ற வேண்டும். எனவே, முன் எப்போதும் இல்லாத வகையில் நாம் தமிழர் பிள்ளைகள் தங்களின் முழு ஆற்றலையும் ஒன்றுதிரட்டி, நம் உயிரினும் மேலான தலைவரையும் மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி, அடுத்து வரும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் தங்களை முழுவதுமாக ஒப்படைத்துக் களப்பணியாற்ற வேண்டுமென அறிவுறுத்துகிறேன். அதே நேரத்தில், மண்ணையும் மக்களையும் மீட்டுக் காக்க அயராது உழைப்பினை நல்கும் என்னிலும் இளைய என் தம்பி தங்கைகள், பேரன்பிற்குரிய என் பெற்றோர்கள் உள்ளிட்ட என் அன்பிற்கினிய உறவுகளுக்கு அண்ணன் நான் சொல்லிக்கொள்வது, தமிழ்நாடு முழுவதும் தற்போது மிகக்கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. கோடைக்காலத்தின் தொடக்கத்திலேயே இத்தகைய கடுமையான வெப்பம் நிலவும் நிலையில், இனி வரும் நாட்களில் இன்னும் வெப்பம் பன்மடங்காக அதிகரிக்கக் கூடும். ஆகவே, தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் என் அன்பு உறவுகள் காலை நேரத் தேர்தல் பரப்புரையை முற்பகல் 11 மணிக்கு முடித்துவிட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். பின்னர் பகல் உணவையும், போதிய ஓய்வினையும் எடுத்துக்கொள்ள வேண்டும். மிகச்சரியாக மாலை 4 மணிக்கு அன்பு உறவுகள் மீண்டும் பரப்புரையினைத் தொடங்கி இரவு 10 மணி வரை பரப்புரையை மேற்கொள்ள வேண்டும். பரப்புரைக்குச் செல்லும்போது அனைவரும் தண்ணீர் போத்தல்களை உடன் எடுத்துச்செல்ல வேண்டும். உடலுக்குக் குளிர்ச்சிதரும் பழங்களையும், நுங்கு, இளநீர், பதநீர், மோர் உள்ளிட்ட இயற்கைப் பானங்களையும், பரப்புரை இடை வேளைகளில் தவறாது எடுத்துக்கொள்ள வேண்டும். மக்களிடம் நம்முடைய கருத்துகளையும், கொள்கைகளையும், ஆட்சி வரைவு திட்டங்களையும் கொண்டுசென்று வாக்குகளைப் பெறுவதில் காட்டும் வேகத்தையும், அக்கறையையும் உங்களின் உடல்நலனை கவனித்துக்கொள்வதிலும் காட்ட வேண்டும். அடுத்து வரும் 35 நாட்களும் களத்தில் இடையறாது பணியாற்ற உடல்நலன் சீராக இருப்பது மிக மிக அவசியம். நான் எப்போதும் சொல்வதுபோல, ‘நம்முடைய பாதுகாப்பே, நாம் பெரிதும் நேசிக்கும் நாட்டின் பாதுகாப்பு’ என்பதை நீங்கள் உணர்ந்து செயல்படுவீர்கள் என்று உறுதியாக நம்புகின்றேன். என்பதை உணர்ந்து செயலாற்றுங்கள். எப்படிப் பார்த்தாலும் வெற்றிக்கு ஒரே ஒரு வழிதான், அது கடின உழைப்பு மட்டுமே! உங்களின் உடல்நலப் பாதுகாப்பு கடின உழைப்பினை செலுத்த வழிவகுக்கும்! உங்களின் சோர்வில்லாத கடின உழைப்பு உறுதியாக நம்மை வெல்ல வைக்கும்! புரட்சி எப்போதும் வெல்லும்! நம்முடைய வெற்றி அதனைச் சொல்லும்! இலக்கு ஒன்றுதான்! இனத்தின் விடுதலை! இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்! தமிழ்த்தாய் வாழ்க! தலைவர் பிரபாகரன் வாழ்க! நாம் தமிழர் ! அன்பின் நெகிழ்வுடன் உங்கள் அண்ணன் சீமான்
Exit mobile version