மாடு கூட இழுக்கத்தயங்கும் செக்கினை மண் விடுதலைக்காக இழுத்த பெருமகன்..!
இந்த நாட்டின் மானம் கப்பலேறிவிடக்கூடாது என்பதற்காக கப்பலோட்டிய பெருந்தமிழன்..!
இந்தியாவில் முதல் தொழிற்சங்கம் அமைக்கப்படுவதற்கு முன்பே தொழிலாளர்களுக்குப் போராடி உரிமைப்பெற்று தந்த தொழிற்சங்கவாதி..!
மண் விடுதலைக்காக மக்களிடம் முழங்கிய ஆகச்சிறந்த சொற்பொழிவாளர்..!
பன்மொழிப் புலமைப்பெற்ற பேரறிஞர், திருக்குறளுக்கு உரை எழுதிய உரையாசிரியர்..!
கவிநயம் மிகுந்த தமிழ்செய்யுள் இயற்றும் ஆற்றல் பெற்ற தமிழ் இலக்கிய – இலக்கண வித்தகர்..!
தமிழ் ஓலைச்சுவடிகள் பலவற்றை அழியாமல் காத்த பெரும்புலவர்!
தமிழ் தேசம் என பொருள்படும் தமிழ் நேசன் இதழ் நடத்திய பத்திரிகையாளர்..!
ஏழை மக்களுக்கு இலவசமாக வாதாடிய நேர்மைமிகு வழக்கறிஞர்..!
தற்சார்பு பொருளாதாரம் போற்றிய புரட்சியாளர்..!
6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணைப்பெற்று சிறை கண்ட விடுதலை வீரர்..!
வணிகர், கட்டுரையாளர், நூலாசிரியர், மொழிப்பெயர்ப்பாளர், பதிப்பாளர், தத்துவவாதி என்று பன்முக ஆற்றல் பெற்ற நம்முடைய பெரும்பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் ஈக வாழ்வினைப் போற்றும் திருநாள் இன்று!
தாயக விடுதலைக்காக தம் சொத்துக்கள் அனைத்தையும் இழந்த அப்பெருமகன், கடைசி காலத்தில் ஊர் ஊராய் சென்று மண்ணெண்ணெய் விற்கும் வறிய நிலையில் வாடினார் என்பதுதான் வரலாற்றுப்பெருந்துயரம்!
இந்த நிலத்தில் ஒரு பிடி மண்ணையும் அந்நியர் கொள்ளை கொண்டு போகக்கூடாது என்று செக்கிழுத்து, சிறைபட்டு, சொத்திழந்த அப்பெருந்தமிழனின் ஈகப்பெருவாழ்வைப் போற்றுகின்ற இந்நாளில், கண்ணுக்கு முன் நம் மண்ணும், வளமும் நாட்டைஆளும் கொள்ளையர்களால் நாளும் களவுபோவதைத் தடுப்பதற்காகவாவது அரசியல் வலிமையும், அரசு உரிமையும் பெறுகின்ற பெரும்படையாக நாம் மாறுவோம் என்ற உறுதியை ஏற்போம்!
நம்முடைய வீரமிகு பாட்டனார் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
#நாம்தமிழர்!
– செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி