தமிழ்த்தேசியப் புரட்சியாளர் தாத்தா புலவர் கு.கலியபெருமாள், சமூகநீதிக்காவலர் தாத்தா வே.ஆனைமுத்து மற்றும் சமூகநீதிப்போராளி தாத்தா இளையபெருமாள் அவர்களின் நூற்றாண்டு பெருவிழா!

4

தமிழ்த்தேசியப் புரட்சியாளர் தாத்தா புலவர் கு.கலியபெருமாள், சமூகநீதிக்காவலர் தாத்தா வே.ஆனைமுத்து மற்றும் சமூகநீதிப்போராளி தாத்தா இளையபெருமாள் அவர்களின் நூற்றாண்டு பெருவிழாவினை, அவர்களின் பெரும்புகழ் போற்றும் புகழ்வணக்க பொதுக்கூட்டமாக இன்று ஆனி 20 ஆம் நாள் (04-07-2025) வெள்ளிக்கிழமை அன்று கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் பேரெழுச்சியுடன் நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கவிருக்கிறது.

இன விடுதலை, வர்க்க விடுதலை, சாதியொழிப்பு, ஈழ விடுதலை, தமிழ்மொழி மீட்சி உள்ளிட்ட உன்னத நோக்கங்களைத் தன்னுடைய உயிர் இலட்சியமாகக் கொண்டு, தம் வாழ்நாள் முழுவதையும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு ஒப்படைத்து, மரணத்திற்கு அஞ்சாது போராடிய புரட்சியாளர் நம்முடைய தாத்தா புலவர் கு.கலியபெருமாள் அவர்கள். கல்லூரி பயிலும் காலத்திலேயே திருவையாறு அரசர் கல்லூரியில் நிலவிய சாதி – சமய வேறுபாடுகளையும், சனாதன அடக்கு முறைகளையும், மூட பழக்கவழக்கங்களையும் கடுமையாக எதிர்த்துப் போராடிய பெருமகன். வேலை கேட்டு இளைஞர்கள் போராடிக்கொண்டிருந்த காலத்தில் போராடுவதற்காகவே தம்முடைய வேலையை துறந்த பெருந்தகை.

பெண்ணாடம் பகுதியில் நிலவிய இரட்டைகுவளை முறை தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்து, ஆதித்தமிழ்குடி மக்கள் சம உரிமை பெற்றிடப் போராடிய சாதியொழிப்புப் போராளி. புரட்சிகர மக்கள் போர்க்கள பாதையில் சாகசங்கள் பல புரிந்து வரலாறு படைத்தவர். எளிய மக்களின் உழைப்பினை சுரண்டி கொழுத்த பண்ணை முதலாளிகளுக்கு எதிராக ‘அறுவடையைக் கைப்பற்றுவோம்’ என்ற பெருமுழக்கத்தோடு, விளைந்த பயிர்களை அறுவடை செய்து உழைத்த மக்களுக்குப் பகிர்ந்தளித்த புரட்சியாளர். மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்தால் சிறை விடுதலை கிடைக்கும் என்ற நிலை இருந்தபோதும் அதனை மறுத்து, ‘ஓர் அடிப்படை சமூக மாற்றத்திற்காகப் போராளியாக உருவெடுத்த என்னால் என் உயிரைக் காப்பதற்காகக் கருணை மனு கொடுக்கும் அளவிற்கு, தாழ்ந்துபோக முடியாது’ என்று மரண தண்டனையைத் துச்சமாக எண்ணி ஏற்கத் துணிந்த மாமனிதர்.

”என் வாழ்வில் எத்தனையோ அடக்குமுறைகளையும் சித்திரவதைகளையும் எதிர்கொண்டுள்ளேன். என்னுடைய அரசியல் பணிகளுக்காக என் குடும்பமே தாங்க முடியாத கொடுமைகளை சந்தித்துள்ளது என்றாலும் ஒரு புரட்சியாளன் என்கிற முறையில் இவற்றை நான் சாதாரணமாகவே கருதுகிறேன். சாவு என்பது சாதாரணமான ஒன்றுதான். அது இறுதியாக என்னை அணைக்கும் நாள் வரையிலும், தமிழ் இனத்தின் விடுதலைக்காக, தமிழ் மொழியின் ஏற்றத்திற்காக, மக்களின் சனநாயக உரிமைகளுக்காக, மனித உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடுவதே என்னுடைய குறிக்கோள்’ என்று முழங்கிய மாவீரராவார்.

“தமிழ்நாட்டில் நான் சந்தித்த தலைவர்களிலேயே தன்னலமற்ற, நேர்மையான, கொள்கை உறுதியும் நெஞ்சுரமும் மிக்க உன்னதமான தலைவர், உண்மையான மக்கள் தொண்டர் புலவர்.கு.கலியபெருமாள் அவர்கள். நான் மீண்டும் தமிழ்நாடு வரும் வாய்ப்பு அமைந்தால் முதலில் புலவரின் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்துவேன் என்று நம்முயிர்த்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களால் பெரிதும் போற்றப்பட்ட பெருமகனார் நம்முடைய தாத்தா புலவர் கு.கலியபெருமாள் அவர்களின் நூற்றாண்டில் ஐயா அவர்களின் பெரும்புகழ் போற்றிடவும்,

அவரைப்போலவே நூற்றாண்டு விழா காணும் சமூகநீதிபெருங்காவலர் தாத்தா வே.ஆனைமுத்து அவர்கள் தம்முடைய வாழ்வின் இறுதி மூச்சு வரை பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்ட சமூகநீதி ஆசானாவார். சமூகத்தின் மீது அக்கறையால் வீட்டிலிருந்த ஆடு மாடுகளையும், சேமிப்பு தானியங்களையும் தாயாரின் நகைகளையும் விற்று தனது 25 வயதில் குறள்மலர் என்கிற வார ஏட்டைத் தொடங்கினார். மக்கள் பணிக்காகத் தம்முடைய வாழ்வினை முழுமையாக அர்ப்பணிக்க 1952 ஆம் ஆண்டு ஒழுங்கு முறை விற்பனை சங்கத்தில் தான் ஏற்றிருந்த அரசுப் பணியையும் துறந்தார். .தமிழ்மறை திருக்குறள் கூறும் அறநெறியை தம் வாழ்வியல் நெறியாக வரித்துக்கொண்ட தாத்தா ஆனைமுத்து அவர்கள், 1957 ஆம் ஆண்டு குறள்முரசு என்கிற இதழையும், பிறகு 1974 ஆம் ஆண்டு முதல் சிந்தனையாளன் என்ற இதழையும் தொடங்கி நடத்திய பெருந்தகையாவர்.

தாயக விடுதலைக்குப் போராடிப் பெற்ற பிள்ளையுடன் சிறைக்களம் புகுந்த விடுதலைப்போராட்ட வீராங்கனை, தமிழ்ப்பெண்களின் பெருமைக்குரிய அடையாளம் அஞ்சலை அம்மாள் அவர்களிடம் அரசியல் உதவியாளராகப் பணிபுரிந்தவர். தாத்தா ஆனைமுத்து அவர்களின் அறிவாற்றலையும், செயலாற்றலையும் உணர்ந்துகொண்ட ஐயா ஈவேரா அவர்கள் பேரறிஞர் என்று புகழ்ந்தார். இருப்பினும் எப்போதும் உண்மையாக இருந்து, உண்மையையே பேசியதால் 16.11.1975 ஆம் நாள் திராவிடர் கழகத்திலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் 08.08.1976 ஆம் நாள் பெரியார் சம உரிமைக்கழகம் என்ற அமைப்பைத் தொடங்கி, 13.08.1988 ஆம் நாள் அவ்வமைப்பின் பெயரை மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமை கட்சி என்றும் மாற்றினார். 1981 முதல் ஈழ ஆதரவு நிலைப்பாட்டில் இயங்கிய தாத்தா ஆனைமுத்து அவர்கள் தான் மேற்கொண்ட ஈழ பயணத்தையொட்டி, “தமிழீழ தமிழரை, மலையக தமிழரை நீங்களும் பாருங்கள்! நீங்களும் பேசுங்கள்!” என்கிற நூலையும் வெளியிட்ட பெருமைக்குரியவர்.

இந்திய மக்கள் தொகையில் பெரும்பான்மையாக இருந்தும், கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட சமூகநிலைகளில் பின்தங்கிய நிலையிலிருந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய இடப்பங்கீடு வழங்குவதற்காக மண்டல் ஆணையம் அமைந்திடவும், அதன் பரிந்துரைகளைச் செயல்படுத்தவும் தொடர்ச்சியாகப் போராடி வெற்றி கண்டதால் தாத்தா ஆனைமுத்து அவர்கள் ‘மண்டல் ஆணையத்தின் நாயகர்’ என்று போற்றப்பட்டார். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் காவலராகத் திகழ்ந்த தாத்தா ஆனைமுத்து அவர்கள், தமிழ்நாட்டு அரசுப் பணிகளிலும் கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்ட 31 விழுக்காடு இடப்பங்கீடு 50 விழுக்காடாக உயர்த்தப்பட்டதில் பெரும்பங்காற்றினார். அந்த வகையில் தமிழ்நாட்டின் இன்றைய 69 விழுக்காடு இடப்பங்கீட்டுக்கு மூல காரணமே தாத்தா ஆனைமுத்து அவர்கள்தான் என்பதே வரலாறாகும்.

வட மாநிலங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு மாநில அரசுப் பணிகளில் இடப் பங்கீடு இல்லாதிருந்த நிலையில் பீகாரைச் சேர்ந்த இரராம் அவதேஷ் சிங் அவர்களுடன் இணைந்து 31-10-1978 இல் பீகார் மாநில அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு முதன்முதலாக 20 விழுக்காடு இடப் பங்கீடு வழங்க வழிவகைச் செய்தார். அனைத்திந்திய பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர் மற்றும் மதச் சிறுபான்மையினர் பேரவையின் தலைவராகத் திகழ்ந்த தாத்தா ஆனைமுத்து அவர்கள் இந்தியா முழுவதும் சமூகநீதி பேரொளி பரவச்செய்த பெருமகனாவார்.

தேசிய இனங்களின் தன்னுரிமைக்காக இந்திய ஒன்றியத்தின் அனைத்து மொழிவழித்தேசங்களிலும் களம் கண்ட பெருமகன்.. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒன்றிய அரசுப் பணிகளிலும் 27 விழுக்காடு இடப்பங்கீடு வழங்க வித்திட்ட செயல்வீரர் நம்முடைய தாத்தா வே.ஆனைமுத்து அவர்களின் நூற்றாண்டில் ஐயா அவர்களின் பெரும்புகழ் போற்றிடவும்,

அவ்விரு பெருந்தமிழ் தலைவர்களைப் போன்றே, சாதிய இழிவுகளையும், தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்துப் போராடிய சமூகநீதிப்போராளி, நம்முடைய தாத்தா இளையபெருமாள் ஆவார். பள்ளி பயிலும் காலத்திலேயே ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வைக்கப்பட்டிருந்த தனிப்பானையை உடைத்தெறிந்து, பொதுப்பானை வைக்கும் முறையைக் கொண்டுவந்ததில் தொடங்கி ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காகத் தம்முடைய வாழ்நாள் முழுதும் சமரசமற்று போராடிய அரசியல் புரட்சியாளர்.

இளம் வயதிலேயே சாதிய ஆதிக்கத்திற்கு எதிராகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த தாத்தா இளையபெருமாள் அவர்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவராக உயர்ந்த பெருந்தமிழராவார். தம்முடைய 27 ஆம் வயதில் முதன்முறையாக சிதம்பரம் தொகுதியில் வென்று நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தாத்தா இளையபெருமாள் அவர்கள் 1967 ஆம் ஆண்டுவரை தொடர்ந்து மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தன்னலமற்று மக்கள் பணியாற்றிய பெருமைக்குரியவர்.

1979 ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்ற தாத்தா இளையபெருமாள் அவர்கள், கருத்து வேறுபாடு காரணமாக 1989 ஆம் ஆண்டு அக்கட்சியிலிருந்து விலகி மனித உரிமை கட்சி என்ற தனிக்கட்சியைத் தொடங்கி உழைக்கும் மக்களின் உயர்வுக்குப் பாடுபட்ட பெருந்தகை.

1965 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு ஆணையம் தொடங்கப்பட்டபோது அதன் முதல் தலைவராகச் சிறப்புற பணியாற்றிய தாத்தா இளையபெருமாள் அவர்கள், இந்தியா முழுமைக்கும் பயணித்துச் சாதிய தீண்டாமை கொடுமைகள் குறித்து ஆய்ந்தறிந்து அறிக்கை அளித்தார். அவரின் செயற்கரிய முயற்சியால் இந்தியச் சமூகத்தில் புரையோடிப்போயுள்ள சாதியக் கொடுமைகளை வெளிச்சமிட்டுக் காட்டியதோடு, அதற்கான தீர்வுகளையும் முன்வைத்தார். ஆனால் அந்த அறிக்கையை நடைமுறைக்குக் கொண்டுவரப்படாமல் நாட்டை ஆண்ட ஆட்சியாளர்களால் தொடர்ச்சியாகக் கிடப்பில் போடப்பட்டது. இருந்தபோதிலும், பின்னாட்களில் கொண்டுவரப்பட்ட பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச்சட்டமும், அனைத்து சாதியினர் அர்ச்சகராகும் சட்டமும் நம்முடைய தாத்தா இளையபெருமாள் அவர்கள் ஆணையத்தலைவராக அளித்த அறிக்கையின் அடிப்படையிலேயே நடைமுறைப்படுத்தப்பட்டதாகும்.

தமிழ்த்தேசியப் புரட்சியாளர் தாத்தா புலவர் கு.கலியபெருமாள் மற்றும் சமூகநீதி பெருங்காவலர் தாத்தா வே.ஆனைமுத்து அவர்களின் நூற்றாண்டுப் பெருவிழாவைக் கொண்டாடும் இவ்வேளையில், அவ்விரு தலைவர்களுடன், அடித்தட்டு உழைக்கும் மக்களின் உயர்வுக்காக வாழ்நாள் முழுதும் போராடிய நம்முடைய தாத்தா இளையபெருமாள் அவர்களின் நூற்றாண்டு கடந்த பெரும்புகழைப் போற்றிடவும் மாபெரும் புகழ்வணக்கப் பொதுக்கூட்டத்தை, தாத்தா இளையபெருமாள் அவர்கள் பிறந்த கட்டுமன்னார்கோயில் மண்ணில் முன்னெடுப்பதில் நாம் தமிழர் கட்சி பெருமிதம் கொள்கிறது.

தமிழினத்தின் விடுதலைக்காக, அதன் நல்வாழ்விற்காக, சமூக மேம்பாட்டிற்காகத் தம்முடைய வாழ்வினை அர்ப்பணித்த முப்பெரும் தலைவர்களை நெஞ்சில் இருத்தி போற்ற வேண்டியது ஒவ்வொரு தமிழ்ப்பிள்ளையின் வரலாற்று பெருங்டமையாகும்.

வரலாற்றில் மறைக்கப்பட்டு, மறக்கடிக்கப்பட்ட நம்மின முப்பெருந்தலைவர்களின், பெறுமதிமிக்கப் போராட்ட வாழ்வினை நன்றியுடன் நினைவுகூரும் நூற்றாண்டுப் பெருவிழாவில் என் பேரன்பிற்குரிய தாய்த்தமிழ் உறவுகள், என் உயிருக்கினிய தம்பி தங்கைகள் பேரெழுச்சியுடன் பெருந்திரளாகப் பங்கேற்போம்!

போர்க்குணமிக்கத் தமிழினப் புரட்சியாளர்கள், போற்றுதற்குரிய தமிழ்த்தலைவர்கள் மூவருக்கும் பெருமிதத்துடனும், நன்றியுணர்வுடனும் நம்முடைய புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்!

– செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி